பாடல் எண் :2756
பூதிமெய்க் கணிந்து வேந்தன் புனிதனா யுய்ந்த போது
நீதியும் வேத நீதி யாகியே நிகழ்ந்த தெங்கும்;
மேதினி புனித மாக வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய வமணிருள் மாய்ந்த தன்றே,
858
(இ-ள்)பூதி....போது - பிள்ளையார் ஈந்தருளிய திருநீற்றினைத் தனது மெய்யினுக்கு மருந்தாக அணிந்துகொண்டு அரசன் தூயவனாகப் பெற்று உய்ந்த அப்பொழுது; நீதியும்....எங்கும் - அரச நீதிமுறையும் வேதங்களில் விதித்த நீதியேயாக நாடெங்கும் நிகழ்வதாயிற்று; மேதினி புனிதமாக - உலகம் தூய்மை பெற்றதாகும்
படி; வெண்ணீற்றின்....செய்ய - திருவெண்ணீற்றினது விரிந்த பேரொளியானது திக்குக்களையெல்லாம் தூய்மை செய்தலால்; அமணிருள் மாய்ந்தது அன்றே - அப்பொழுதே உயிர்களைச் சூழ்ந்திருந்த சமணமாகிய இருள் மாய்ந்தது.
(வி-ரை) பூதி - விபூதி; சிறந்த செல்வம். "சிரபுரச் செல்வர் ஈந்தார்"(2758) என்றதற்கேற்பப் பூதி என்றார். தானழியாது நிற்பதுடன் அழியாமையினையும் ஞானத்தையும் விளைக்கவல்லது என்பது குறிப்பு.
மெய்க்கு - குவ்வுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது; மெய்யின்கண்; மெய்யாக - மெய்ம்மைத்தன்மை விளக்கும்பொருட்டு என்ற குறிப்புமாம்.
அணிந்து - கவசமாகவும் மருந்தாகவும் முழுதும் பூசி; "நீற்றினை நிறையப் பூசி"(தேவா); சமணத்திலிருந்து இறைவனருளிய சூலைநோயால் ஆட்கொள்ளப்பட்டு வந்தடைந்த தமது தம்பியார் மருணீக்கியாருக்குத் திலகவதியம்மையார் இவ்வாறே திருவஞ்செழுத்தை ஓதி உபதேசித்துக் திருநீறு அளிப்ப, அவர் பணிந்து ஏற்று உடலார அணிந்து உய்ந்த வரலாறு முழுதும் ஈண்டு ஒப்பிட்டு நினைவுகூர்தற்பாலது; "திருவாளன் றிருநீறு திலகவதி யாரளிப்பப், பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங், குருவார வணிந்து" (1332); "பூதிமெய்க் கணிந்து புனிதனா யுய்ந்த" என்ற குறிப்பும், ஈண்டுத் திருப்பாசுரம் ஞானோபதேசமாதலும் கருதுக; அணிந்து - அணிந்ததனால்.
புனிதனாய் - அணிந்து கொண்டமையாலே தூய்மை பெற்றவனாகி; "சுத்தமதாவது நீறு"(தேவா).
வேந்தன்...நிகழ்ந்ததெங்கும் - இங்குக் கூறிய வேதநீதி என்பது உலகியல் அரச நீதி ஒழுக்கத்தினை; "உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும்"(2718) என்ற நிலை. வேந்தன் புனிதனாகியபோது உலகியல் ஒழுக்கமும் அவ்வாறே தூயதாக நிகழும்; அல்லுழி நிகழாது என்பது. வேதநூல்களுள் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலும் அறமென்ற பரிமேலழகருரை ஈண்டுக் கருதத் தக்கது; ஆகியே - ஏகாரம் பிரிநிலை; முன்னிருந்த கோள்கள் எல்லாம் நீங்கி என்பது.
மேதினி....தூய்மை செய்ய - "நிலவு மெய்ந்நெறி சிவநெறியே என்பதும்" (2718) என்ற நிலை. முன்கூறியது உலகியல் ஒழுக்கம்; ஈண்டுக் கூறியது உயிரினைப் பற்றிய நலம்.
புனிதமாகத் - தூய்மை செய்ய - என்று கூட்டுக; "தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே, சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோ, யாற்ற வண்டமேலாம்பரந் தண்ணல்வெண், ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா"(308) என்ற கருத்தை ஈண்டு வைத்துக் காண்க.
வெண்ணீற்றின் விரிந்த சோதி - மதுரையின் எல்லா மக்களும் அரசனுக்குப் பிள்ளையார் திருநீரளிக்க அவன் அணிந்தது கண்டு எல்லவர்களும் அணிந்து கொண்டமையால் "விரிந்த சோதி" என்றார். "பூதி சாதன விளக்கம் போற்றல்பெறா தொழியக் கண்டு"(1916) என்றபடி விளக்கம் சுருங்கியிருந்த நிலையினின்றும் விரிந்த என்பதும் குறிப்பு. "விரிந்தனை குவிந்தனை"(பிள்- தேவா. புறம்பயம்).
அமணிருள் - அமணர்கள் கட்டிய பொய்ம்மைகளின் செயல் இருள் எனப்பட்டது. உண்மைஞானத்தினைக் காணவொட்டாது மறைவு செய்தலின் இருள் என்றார். இருள் போல்வதனை இருள் என்றதுபசாரம். மாய்தல் - வலிகெட் டொழிதல். "தமிழ்நாடு பழிநாடும் படிபரந்த, மானமிலா வமணென்னும் வல்லிருள்போய் மாய்வதனுக்கு."
(2550) என்று முன் கூறியது காண்க. சோதிவருதல் இருள் மாய்தலுக்குக் காரணமாகும் இயல்பும் குறித்தெழுந்த உருவகம்.
அன்றே - அப்பொழுதே. மேல்வரும் பாட்டினும் இவ்வாறே கொள்க. மேல்வரும் பாட்டில் சைவத் திருநெறி நடந்தமை கூறுவர்.
உயர்ந்தபோது - என்பது பாடிமாயின் சமணர்பாற் றாழ்ந்த நிலையினின்றும் உயர்ந்த என்றும், கூன் நிமிர்ந்துயர்ந்த என்றும் உரைத்துக் கொள்க.