பாடல் எண் :2757
மீனவற் குயிரை நல்கி மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி யுலகெலா முய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை ஞாலத்திற் பெருகி யோங்கத்
தேனவில் கொன்றை யார்தந் திருநெறி நடந்த தென்றே.
859
(இ-ள்) மீனவற்கு....காட்டி - பாண்டியனுக்கு உயிரைக் கொடுத்ததுமன்றி உண்மை நெறியினையும் காட்டி; மிக்க.....கொண்ட - மிகுந்த கேடு விளைவிக்கும் சமணைப் போக்கி உலகெலாம் உய்யும்படி ஆட்கொண்டருளிய; ஞானசம்பந்தர்....ஓங்க - திருஞானசம்பந்தரது ஞானமெய்ந்நெறி உலகத்திலே பெருகி ஓங்குதலினாலே; தேனலர்...நடந்ததன்றே - வண்டுகள் ஒலித்தற்கிடமாகிய கொன்றை மாலையை யணிந்த சிவபெருமானது திருநெறி நடந்தது அப்பொழுதே.
(வி-ரை) மீனவற்கு உயிரை நல்கி - உணர்வு மாவியு மொழிவதற் கொருபுடை யொதுங்கியும் (2610), கருத்தொழிந் துரைமறந்தும் (2611) முடிதுளங்கியும் உயிர் தரிக்கலாகாத நிலையில் இருந்த பாண்டியனுக்கு உயிர்கொடுத்து, அமண் சார்பாற் கேடுற்ற உயிரைத் தம்வசமாக்கி நோய்த் தண்டத்தாலும் தீக்கையாலும் தூய்மையாக்கி மீளப் புத்துயிராய்க் கொடுத்து என்ற குறிப்புமாம்.
மெய்ந்நெறி காட்டி - சமணை நீக்கி - உய்யக்கொண்ட - "சார்புணர்ந்து சார்பு கெடஒழுகும்" (குறள்) நிலையினைச் செய்து.
மெய்ந்நெறி காட்டுதல் - அருட்குறிப்புடன் திருப்பாசுர ஞானோபதேசத்தாலும் திருநீறு ஈந்தருளியமையாலுமாம்.
மிக்க ஊனம் ஆம் - மிகப் பெருங்கேடுகளை யெல்லாம் ஆக்கும். ஆம் - ஆகச் செய்யும் எனப் பிறவினைப்பொருளில் வந்தது. மிகப் பெருங்கேடாவன மறைகணிந்தனையும், சிவ நிந்தனையும், அடியார் நிந்தனையுமாகிய சிவாபராதம்; இவை கழுவாயில்லாத சிவாபராதங்களாதலான் மிக்க ஊனம் என்றார்.
உலகெலாம் உய்யக் கொண்ட - அமணீக்கி மீனவற்கு உயிர்நல்கி நெறிகாட்டியதனால் உலகெலாம் உய்வித்ததாயிற்று என்பது; அரசன் ஒருவனை நல்வழிப்படுத்தவே அவனால் உலகம் நன்னெறி நிறுத்தப்படுதலின் அச்செயலே உலகை உய்வித்த செயலாயிற்று என்க. கொண்ட - ஆட்கொண்ட.
உலகெலாம்
- இறைவர் ஆசிரியர் பெருமானுக்கு முதலாகத் தந்த "வெருளின்மெய்ம்மொழி" யெனும் ஞானவாக்காகிய ஐந்தெழுத்து; இதனைத் திருஅருள் வெளிப்படும் அரிய பெரிய இடங்கள்தோறும் அமைப்பது ஆசிரியரது மரபு; "உலகெலாமுய்ய வுறுதியாம் பதிக முரைத்துமெய் யுணர்வறா றொருமையுடன்" (ஏயர்கோன் - புரா - 88) என்று நம்பிகளது திருப்பாண்டிக்கொடுமுடி நமச்சிவாயத் திருப்பதிகத்தினைக் குறித்தருளியதும், "அஞ்செழுத் தோதி ஏறினா ருய்யவுலகெலாம்"(2114) என்று பிள்ளையார் முத்துச்சிவிகையில் ஏறியபோது அருளியதும், இவ்வாறே உள்ள பிறவும் ஈண்டு நினைவு கூர்க.
ஞானசம்பந்தர் வாய்மை - திருஅருள்ஞான மூண்டருளியவராதலின் அந்த ஞான வாக்கினின்றும் போந்தது சிவனருளேயாகிய ஆணை என்பது குறிப்பு. "எனதுரைதன துரையாக"(இலம்பையங்கோட்டூர் - தேவா) என்ப துண்மையாதலின் பிள்ளையாரருளிய வாய்மை சிவனருளிய நன்னெறியே என்பது பொருள். இதுபற்றியே ஈண்டு ஞானசம்பந்தர் என்ற பெயராற் கூறியருளினார். ஞானசம்பந்தர் வாய்மை - ஓங்கக் - கொன்றையார் திருநெறி நடந்தது - என்றதும், இங்கு வாய்மை என்பது சிவநெறி குறித்ததென விளக்குதல் காண்க. வாய்மையும் திருநெறியும் ஒன்றென்பது கருத்து. "சைவ வாய்மை" (2498) என்று இவ்வரலாற்றுத் தொடக்கத்துக் கூறியதும் காண்க. வாய்மை - வாக்கின் செயலாகிய அருளிப்பாடு.
"மலைவில்லா ரருளப் பொல்லார்தாள் புனைவர் - எனவே அவ்விருவரும் தம்முள் வேற்றுமையின்மை பெற்றாம்" என்று மாதவச்சிவஞான முனிவர் சிவஞானபோதம் மங்கல வாழ்த்து உரையில் உரைத்த கருத்துக் காண்க.
பெருகி ஓங்க - உயிர்களிடத்து வகையாலும் தொகையாலும் மிகுதல்.
வாய்மை - ஓங்கத் - திருநெறி நடந்ததன்றே - "எல்லா மரனாமமே சூழ்க; வையக முந்துயர் தீர்கவே" என்ற வாய்மை ஞாலத்தில் திருநெறியினை நடைபெறச் செய்தது என்க.
தேனவில் கொன்றையார் - தேன் - நவில் - இறைவரது கொன்றையின் தேனை உண்டு தேன்கள்(வண்டுகள்) சிவஞானம் பெருகச் செவ்வழிப் பண்பாடும் என்ற குறிப்பினாற் சிவஞானவமுதுண்டு அதன்வயமேயாகி ஞானப்பாடல் பாடும் பிள்ளையார் தன்மையினை உணர்த்துதல் காண்க. நவிலுதல் - இங்குச் சொல்லுதல்; அறிவுறுத்துதல் என்ற பொருளில் வந்தது. "செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும்"(மிழலை - மேகராகக் குறிஞ்சி) என்ற பிள்ளையார் திருவாக்கு இங்குக் கருதத்தக்கது. "ஆனந்தத் தேன்சொரியும், குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ" (திருவா); கொன்றையார்- பிரணவக் குறிப்பும் தருதல் காண்க.
திருநெறி நடந்ததன்றே - நடந்தது - நிகழ்ந்தது; வழக்கம் அருகியிருந்து திரிந்த நிலைமாறி நன்கு வழங்கத் தொடங்கிற்று.
"மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்க மாகு
நன்னெறி திரிந்து மாறி நவைநெறி நடந்த தன்றே" (2498)
என்று பாண்டிநாட்டு வரலாறு கூறித் தொடங்கிக்காட்டிய ஆசிரியர் ஈண்டு அவ்வரலாற்றினை நம்மை பெற முடித்துக் காட்டிய தெய்வக் கவிநலம் கண்டு களிக்க.
"பரசமய நிராகரித்து நீறு ஆக்கும்" காதலனைப் பெறத் தவங்கிடந்து வழிபட்ட சிவபாதவிருதயருக்குத் தோணியப்பர் ஈந்த வரமாகிய பிள்ளையார் திருவவதாரம் செய்த பயன்(2498 முதல் 2757 வரை = 600 - 859) இந்த 259 பாட்டுக்களில் கூறப்பட்டது; இதுவே பிள்ளையாரது புராணத்துக்கும் திருத்தொண்டர் புராணத்துக்கும் உயிர்நிலையாகிய உள்ளுறை என்றலுமமையும்.
ஞானசம்பந்தர் வாய்மை பெருகி ஓங்கத் திருநெறி நடந்த
வாற்றை வரும் பாட்டாற் கூறுகின்றார்.
உய்யவந்த - தேனலர் - தேனவிழ் - என்பனவும் பாடங்கள்.