பாடல் எண் :2758
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவனன் னெறியி னோங்க விகத்தினி லவனி யின்பங்
குறைவில தெனினுங், கூற்றை யுதைத்தவர் நாமங் கூறி
நிறைகடற் பிறவித் துன்ப நீங்கிடப் பெற்ற தன்றே.
860
(இ-ள்) மறையவர்....ஓங்க - வேதியர்கள் சிவ வேள்விகளைச் செய்யவும், (அது காரணமாகத்) தேவர்கள் மழையைப் பெய்விக்கவும், (அதுகாரணமாக) அரசன் நல்ல அறநெறியில் ஓங்கியிடவும், ஆக இவ்வாற்றான்; அவனி - உலகம்; இகத்தினில் - இவ்வுலக வாழ்வாகிய இம்மைநிலையிலே; இன்பம் குறைவிலது - துய்க்கும் இன்பங்களில் எவ்வாற்றானும் குறைவிலாமலிருந்தது: எனினும் - அவ்வாறாயினும் (அது பிறவித் துன்பத்துக் கேதுவாதலின்றி); கூற்றை.....அன்றே - இயமனை உதைத்தவராகிய சிவபெருமானுடைய திருநாமத்தைக் கூறுதலால் நிறைந்த கடல்அலை போன்று மேலுமேலும் தொடர்ந்துவரும் பிறவியாகிய துன்பத்தினின்றும் நீங்கியிடவும் அன்றே பெற்றது (அவனி).
(வி-ரை) ஞானசம்பந்தரது வாய்மையினால் திருநெறி நடந்த வரலாறு இவ்வாறென்று முன்பாட்டிற் கூறிய பொருளை அனுவதித்துக் கூறியது இப்பாட்டு.
மறையவர் வேள்வி செய்ய - "வாழ்க வந்தணர்" என்றருளிய "வாய்மை" யின் பயனாக உலவ மின்புறச் சந்தவேள்விகள் - சிவவேள்விகளைச் - செய்ய; வேள்வி - சிவவேள்வி; "சங்கரர்க்கு"(2719).
வானவர் மாரி நல்க - "வாழ்க....வானவர்", "வீழ்க தண்புனல்" என்றருளிய "வாய்மை"களின் பயனாக உலகமின்புறச் செய்யும் வேள்விகளினாலே "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது"(2720) என்றபடி வேள்விகளில் விளிக்கப்படும் இந்திரன் வருணன் முதலிய தேவர்கள் அவ்வம் மந்திரங்களால் வரும் சிவனது ஆணைப்படிநின்று முறைமையால் மழையைப் பருவந் தப்பாது பெய்விக்க; நல்குதல் சிவனாணையால் என்பது துணிபு : ஆணைவழி நல்குதலை வானவர் நல்க என்றதுபசாரம்.
இறைவன் நன்னெறியின் ஓங்க - இறைவன் - இங்கு அரசன் என்ற பொருள் தந்து நின்றது. இது "வேந்தனு மோங்குக" என்றருளிய "வாய்மை"யின் பயனாக வந்தது. நன்னெறி - இறைவர் அருளிய வேத சிவாகமங்களின் விதித்த ஒழுக்கநெறி. நெறியின் ஓங்குதலாவது நெறியில் தானும் நின்று தம்கீழ் உலகத்தையும் அந்நெறியில் நிற்பித்தலால் உலகத்தை வளரச்செய்தல். ஓங்க என்பது "ஓங்குக" என்ற பதிகத்தின்படியே என்ற குறிப்புத்தர அச்சொல்லினாலே கூறினார். "வேள்வி" என்றது போல.
அவனி, இகத்தினில் இன்பங் குறைவிலது என்று கூட்டுக. உலகத்தின் இம்மையின்பம், மழையும் வினையுளுமாகிய இவற்றான் வருதலானும், இவற்றை அரசனது செங்கோல் நிலைபெறுத்துதலானும் இகத்தினில் இன்பம் குறைவிலதாயிற்று. "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு"(குறள்). ஈண்டு இன்பம் என்றது ஐம்புல வின்பங்களாகிய உலக வின்பங்களை.
இன்பங் குறைவில தெனினும் - பிறவித் துன்ப நீங்கிடப் பெற்றது - உலக இன்பங்கள் துய்ப்போர்க்குப் பற்றறாமையால் பிறவியறுதலில்லை என்பத நூல்களின் துணிபு. "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்", "பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை", "அடல்வேண்டு மைந்தன் புலத்தை; விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு" (குறள்) என நீதிநூல் பேசும்; "மோக மறுத்திடினாம் முத்தி கொடுப்பதென, வாகமங்கள் சொன்ன வவர்" (களிறு -- 72); "ஆசை நீத்தவர்க்கே வீடு தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன்"(திருவிளை. புரா-பாயி) எனப் பெருநூல்கள்
துணிவன; உண்மை இவ்வாறாக ஈண்டு இகத்தினில் இன்பம் குறைவிலாதாயினும் அதனால் பிறவி பெருகுதலின்றிப் பிறவித்துன்பம் நீங்கிடப் பெற்றதென்பார் எனினும் என்றார்.
நாமங் கூறித் - துன்ப நீங்கிடப் பெற்றது - உலக இன்பந் துய்த்தலால் இவ்வாறு நூல்கள் விதித்தவாறு பிறவி பெருக்காமல் அத்துன்ப நீங்குதற்குக் காரணம் திருநாமங் கூறுதல் என்பதாம்;...."ஐந்து புலன்களு மார வார்ந்து, மைந்தரு மொக்கலு மகிழ மனமகிழ்ந், திவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை, மந்திர வெழுந்தைந்தும் வாயிடை மறவாது, சிந்தை நின்வழிச் செலுத்தலி னந்த, முத்தியு மிழந்தில; முதல்வ! வத்திறம், நின்னது பெருமை யன்றோ! வென்னெனின்?, வல்லானொருவன் கைம்முயன் றெறியினும், மாட்டா வொருவன் வாளா வெறியினு, நிலத்தின் வழாஅக் கல்லே போல, நலத்தின் வழாஅர்நின் னாமநவின் றோரே" (திருவிடை - மும் - கோ - 19) என்ற பட்டினத்தடிகளது கருத்து ஈண்டு விளக்கப்பட்டது காண்க.
கூற்றையுதைத்தவர் - இயமனை உதைத்த தன்மை காய இவரே பிறவித் துன்பமாகிய மரணத் துன்பத்தை நீக்கவல்லவர் என்பார் இவ்வாற்றாற் கூறினார்.
நாமங் கூறி - அரகர என முழக்கம் செய்தலும் தியானித்தலுமாம். "எல்லாம் அரனாமமே சூழ்க"என்ற "வாய்மை"ப் பயன் இது.
கடல் - இங்குக் கடல்அலை குறித்து நின்று, அலைபோல மேன்மேல் தொடர்ந்து வருதல் குறித்தது.
அவனி, - துன்ப நீங்கிடப் பெற்றது - "வையகமுந் துயர் தீர்கவே" என்ற "வாய்மை"யின் பயனாதல் காண்க. இவ்வாறு ஞானசம்பந்தர் பரமஞானாசாரியராதலின் அவர் சத்பாவனையால் எழுந்த ஞான வாய்மையாகிய அருள்வாழ்த்து அவ்வாறே பலித்து முழுதும் பயன்தந்தமை கண்டுகொள்க.
இன்பம் குறைவிலதெனினும் நாமம்கூறி அவனி பிறவித்துன்ப நீங்கிடப் பெற்ற தன்மை பிள்ளையாரது வாய்மையின் பலன் என்பதாம். பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுளதாதலின் அச்செல்வம் வந்தபோது தெய்வமும் சிறிது பேணாராய் நரகில் வீழ்வார் உலக மாக்கள்; ஆனால் ஈண்டு ஞானாசாரியரது நல்ல திருநோக்கம் பெற்ற பேற்றினால் மதுரை வாழ்வார் செல்வமும் பெற்று, அதனோடு நாமங் கூறிப், பிறவித் துன்ப நீங்கவும் பெற்றனர் என்க.