பாடல் எண் :2759
"அங்கயற் கண்ணி தன்னோ டாலவா யமர்ந்த வண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவ"னென் றெழுந்து சென்று,
பொங்கொளிச் சிவிகை யேறிப் புகலியர் வேந்தர் போந்தார்;
மங்கையர்க் கரசி யாரு மன்னனும் போற்றி வந்தார்.
861
(இ-ள்) "அங்கயற்கண்ணி.....பணிவன்" என்று - அங்கயற்கண்ணி யம்மையாருடனே திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளிய பெருங்கருணையாளராகிய இறைவரது தாமரைபோன்ற திருவடிகளை வணங்குவேன் என்று; எழுந்து சென்று - வைகையாற்றின் கரையினின்றும் எழுந்துபோய்; பொங்கொளி.....போந்தார் - மேன்மேற் பொங்கும் ஒளியினையுடைய முத்துச் சிவிகையினை மேற்கொண்டு சீகாழி மன்னவர் போந்தருளினர்; மங்கையர்க்கரசியாரும்....வந்தார் - மங்கையர்க்கரசி யம்மையாரும் நெடுமாறனாராகிய அரசரும் போற்றிக்கொண்டு அவர்பின் வந்தனர்.
(வி-ரை) "அங்கயற்கண்ணி....பணிவன்" என்று - இது பிள்ளையார் உட்கொண்டருளிக் கூறியது. அரசனிடம் வரும்முன் திருமடத்தினின்றும் நேரே திருவாலவாயினுட் சென்று பணிந்து "காட்டுமா", "வேதவேள்வி" என்ற பதிகங்களைப் பாடித் திருவருட் குறிப்பினைப் பெற்ற பின்பே போந்து சமணருடன் வாதம் செய்து முடித்தருளினாராதலானும், இவ்வாதங்கள் அவரருள்வழியே நின்று தம் செயல் அவர் செயலேயாக நிகழ்த்தப்பட்டனவாதலானும், இவை முடிந்தபின்பு அரசன் கோயிலுக்கேனும் திருமடத்துக்கேனும் வேறெங்கும் செல்லாது திருவாலவாயுட்சென்று அந்த இறைவரைப் பணிவேன் என்றுட்கொண்டனர். இதுவே "தம்மை மறந்து நின்னை நினைப்பவர்" (கோயினான்மணிமாலை) என்ற தன்மை பெற்ற பெரியோர் இயல்பு. "மறக்குமா றிலாதவென்னை"(தேவா) என்றபடி எப்பொழுதும் மறவாது பணிந்திருக்கும் நிலையினர் பிள்ளையார்; இவ்வாதத்தில், "புத்தரொ டமணை வாதி வழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" என்று முன் கூறியவாற்றானும், "ஆலவாய் மேவிய வையனே! அஞ்ச லென்றருள்" என்றும், "ஆற்ற லடல்விடை வேறு மாலவா யான்றிரு நீற்றைப், போற்றி....ஞானசம்பந்தன், தேற்றித் தென்னனுட லுற்ற தீப் பிணியா யினதீரச், சாற்றிய பாடல்கள்" என்றும், "மலைமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்....எரியிடிலிவை பழுதிலை" என்றும், "மதுரைத் தொகையாக்கினும்....கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு நோக்கில்" என்றும் கூறியவாற்றாலும், "நள்ளா றுடைய நம்பெரு மானிது வென்கொல் சொல்லாய்....ஆலவாயின்க ணமர்ந்த வாறே" - (தென்னவர்கோன் முன்னமணர் செய்த வாதிற் றீயின்க ணிடுமேடு பச்சை யாக்கி, யென்னுள்ளத் துணை யாகி யால வாயி லமர்ந்திருந்த வாறென்கொ லெந்தாய்) என்று பின்னக் கூறுமாற்றாலும் பிள்ளையார் எப்போதும் பணிந்தே நின்றனர் என்பதறியப்படும்; ஆயின் இங்குப் "பாதம் பணிவனென் றெழுந்து" என்றதென்னையோ? எனில்: "ஞானத்தாலங்குச் சிந்திக்கும் படியிங்குச் சிந்தித்துப் போற்றிப் - புறம்பேயு மரன்கழல்கள் பூசிக்க"(சித்தி - 9-11) என்ற படி பூசித்தலும், தமது உள்ளத் துணையாகி உடனிருந்தியக்கிய இறைவரை நன்றியின் பொருட்டு நேரே பணிதலும், உலகர்க்கு வழிகாட்டலும் கருத்தென்க. அற்றாயின் வைகைக்கரையி னின்றவாறே பணிதலாகுமே? எனின், அற்றன்று; "அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் (திருவேடம், சிவாலயம் என்ற) இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரின் நெய்போல விளங்கி நிலைபெற்று, அல்லுழி யெல்லாம் பாலி னெய்போல வெளிப்படாது நிற்றலான்"(அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்) என்ற சிவஞானபோதம் 12-வது சூத்திரச் சிற்றுரையும் வார்த்திகமும் கருதுக.
எழுந்து - வைகைக்கரையில் அமர்ந்துநின்ற இடத்தினின்றும் எழுந்து; சென்று - அவ்விடத்தினின்றும் முத்துச்சிவிகை யிருந்த இடம்வரையும் சென்று.
போந்தார் - திருவீதியினுள்ளே சிவிகையின்மேற் சென்றருளினர்.
வேந்தர் - மன்னன் - ஈண்டு மன்னவன் மாறனுக்கு மன்னராய் விளங்கிய நிலை குறிக்க வேந்தர் என்றார்.
மங்கையர்க்கரசியாரும் என அம்மையாரை முன்வைத்துக் கூறியது சிறப்புப் பற்றி. அருள் வெளிப்படும் மிட"மாகும் நிலை பற்றி அங்கயற்கண்ணி தன்னோடு" என அம்மையாரை முன்வைத்துக் கூறியவாறே ஈண்டும் கூறியது காண்க. "மங்கையர்க்கரசி" என்ற தேவாரத்தும் "அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவா யாவது மிதுவே" என்ற நிலை குறிப்பித்தமையும் கருதுக.
அண்ணல் - பெருமையுடையோர். பெருமையாவது தம்மை அஞ்சலென்றருளி உடனாக இருந்து இயக்குவித்துத் தாம் விண்ணப்பித்தவாறே ஆட்கொண்டதனோடு,அச்செயலொன்றானே அரசனையும் அவனுடன் அவனது நாடு முழுமையும் ஆட்கொண்ட திறம் தொடக்கத்து " அண்ணல் திருநீறு செம்மை"(தேவாரம்) என்ற குறிப்புத்தர இவ்வாற்றாற் கூறினார்.
போற்றி - ஆளுடைய பிள்ளையாரைப் போற்றி.
அமர்ந்த வள்ளல் - என்பதும் பாடம்.