பாடல் எண் :2760
எண்ணரும் பெருமைத் தொண்ட ரியாவரும் மகிழ்ச்சி யெய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப் புகழ்ந்தடி போற்றிப் போத,
மண்ணெலா முய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள் கன்னிநாட் டவர்க ளெல்லாம்.
862
(இ-ள்) எண்ணரும்....போத - எண்ணுதற்குமரிய பெருமையுடைய தொண்டர்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்து சிவபுண்ணியப் பிழம்பாகிய பிள்ளையாரைப் புகழ்ந்து அரசது திருவடிகளைத் துதித்துக்கொண்டு உடன் வர; கன்னி நாட்டவர்களெல்லாம் - பாண்டி நாட்டவர்கள் எல்லாரும், உலகங்க ளெல்லாம் உய்யும் பொருட்டே திருவவதரித்த வள்ளலாராகிய பிள்ளையாரை நேரே காணப்பெற்றமையாலே; கண்ணினாற் பயன் கொண்டார்கள் - கண்கள் படைத்த பயனையடைந்தனராயினார்கள்.
(வி-ரை) எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் - எண்ணரும் பெருமை - அடியார்களுடைய பெருமைகள் நினைத்தற்குமரியன என்பது. "தொண்டர்தம் பெருமையைச் சொல்லவு மரிதே", "தெரிவரும் பெருமைத் திருத்தொண்டர்"(6). யாவரும் - பிள்ளையாரது திருக்கூட்டத்துடன் வந்தோரும், மதுரை ஆலவாயிற் பணி செய்வோரும், அன்று உண்மைநிலை கண்டு பழையபடி நீறு அணிந்து கொண்ட மதுரை வாழ்வாராம் தொண்டர்களுமாகக் கூடிய எல்லாரும்.
மண்ணெலாம் உய்ய வந்த வள்ளலார் - ஆளுடைய பிள்ளையார்; பிறவிக்கு வித்தாகத் தமக்கென்று கருமப்பகுதி ஒன்றுமில்லாதவராய், உலகத்தை உய்வித்தற்கென்றே திருவவதரித்தவர் - பிள்ளையார். வள்ளலார் - வரையாது கொடுத்தவர் என்பது.
கண்ணினாற் பயன்கொள்ளுதலாவது கண்பெற்ற பேறாகிய உறுதிப்பயன் பெறுதல். முன்னர் வைகைக் கரைக்கு வாதின்பொருட்டுச் சென்றருளிய பிள்ளையாரைக் கண்ட மாந்தர் "வாழ்ந்தன கண்கள்" என்றநிலை வேறு; அஃது ஆண்டுப் புனல் வாதந் தொடங்குமுன் மதுரைவீதியில் பிள்ளையாரைக் கண்ட மாந்தர் பலரும் தத்தமக்கேற்றவாறாகப் பற்பலவாறு பேச, அதனுள் அவரது அழகில் ஈடுண்ட ஒருசிலர் பேசிய நிலை. ஈண்டுக் கூறியது உண்மை கண்டபின் அவரது அருளில் தோய்ந்து ஆட்கொள்ளப்பட்டு நீறணிந்து உய்ந்துகொண்டோர்களின் நிலை. ஆதலின் கூறியது கூறலன்மையுணர்க. முன்னர்க் கண்ட பலருள் ஒருபகுதியினரே "கண்கள் வாழ்ந்தன" என்றவர்; ஈண்டு எல்லவரும் கண்டு கண்பெற்ற பயன் பெற்றனர். எல்லாம் - என்ற கருத்துமிது.
புகழ்ந்துமுன் - புகழ்ந்துடன் - என்பனவும் பாடங்கள்.