பாடல் எண் :2764
"ஒன்றுவே றுணர்வு மில்லை னொழிவற நிறைந்த கோலம்
மன்றினான் மறைக ளேத்த மானுட ருய்ய வேண்டி
நின்றுநீ யாடல் செய்கை நினைப்பதே நியம மாகும்"
என்றுபூம் புகலி மன்ன ரின்றமிழ்ப் பதிகம் பாட,
866
(இ-ள்) ஒன்று....இல்லேன் - பற்றுகின்ற வேறு உணர்வு ஒன்றும் இல்லேனாகி; ஒழிவற....நியமமாகும் என்று - நீக்கமன்றி எங்கும் நிறைந்த அழகிய திருச்சிற்றம்பலத்தின்கண்ணே நான்கு வேதங்களும் போற்றும்படி மக்கள் உய்யும் பொருட்டு நீ அருட்கூத் தியற்றுவதை இடையறாத நினைப்பதுவே எனது நியமமாகும் என்ற கருத்துடன்; பூம்புகலை மன்னர்....பாட - அழகிய சீகாழியின் தலைவராகிய பிள்ளையார் இனிய தமிழ்ப்பதிகத்தினைப் பாடியருள;
(வி-ரை) திருவாலவாய்க் கோயிலினுட் புக்கு வணங்கிய இருவருட் பிள்ளையார் திருப்பதிகம் பாடித் துதித்த கருத்தினை இத்திருப்பாட்டினாலும், அரசன் துதித்த கருத்தினை மேல்வரும் பாட்டினாலும் கூறும் திறம் காண்க; இவ்வாறே அவ்விரு திறத்தினரும் அங்குநின்றும் நீங்கித் திருமடத்தினும் மாளிகையினும் சென்று சேர்ந்தமை முறையே இவற்றின் மேல்வரும் இரண்டு பாட்டுக்களினும் கூறுதல் காண்க.
ஒன்று....நியமமாகும் - இது திருப்பதிகக் கருத்தும் குறிப்புமாம். இது திருப்பதிகத்தின் ஆறாவது பாட்டிற் கண்டருளிய ஆசிரியர் காட்டும் திறம். அத்திருப்பாட்டிற்கு ஆசிரியர் உரைவகுத்துக் காட்டியருளியவாறுமாம்.
வேறு உணர்வு ஒன்றும் இல்லேன் என்க; வேறு - உன்னையன்றி வேறு. உணர்வு ஒன்றும் - முற்றும்மை பிரித்துக் கூட்டுக. ஒன்று உணர்வு என்று கூட்டிப் பொருந்தும் பற்று என்றுரைக்கவும் நின்றது. "ஒன்றி யிருந்து நினைமின்கள்"(தேவா). "மறக்குமா றிலாத வென்னை"(பிள். தேவா - திருத்துருத்தி). இல்லேன் - இல்லேனாகி; முற்றெச்சம்; இல்லேன் - (ஆகி) நினைப்பதே - என்று கூட்டுக.
ஒழிவற நிறைந்த - எங்கும் நிறைவாகிய; "பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே"(தாயுமானார்); "ஒழிவற நிறைந்த யோகமே"(திருவாசகம்).
கோலமன்றில் - "அற்புதக் கோலநீடி....சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்"(351). கோலம் - அருளுடன்கூடிய ஞான அழகு. மன்று - ஞான நிறைவு; "மெய்ஞ்ஞானமே யான வம்பலம்"(2058).
மானிட ருய்ய வேண்டி ஆடல் செய்கை - "நின் தயங்கியாடல்" என்ற பதிகப் பொருள்.
நினைப்பதே நியமமாகும் - நியமம் - நியதியாகிய கடன்; ஏகாரம் - பிரிநிலை; நீ செய்யும் பேரருளுக்கு அருள்ஆடலை நினைப்பதனைத் தவிர வேறு கைமாறு ஒன்று மின்று என்பது. ஈண்டுச் சமணர் வாதினில் இறைவர் செய்த பேரருளின் திறங்களெல்லாம் உட்கொண்டு கூறியருளினார். நினைப்பதென் னியமமாகும் என்று பாடங்கொள்வாருமுண்டு; "வேயுறு தோளி", "மானினேர்விழி" என்ற பதிகங்களினும், ஏனை, "மந்திரம்", தளிரிள" "வாழ்க" என்றவற்றினும் உன்னையே முன்னிட்டு வைத்ததன்றி என் செயலாகக் கொண்ட தொன்றுமில்லை என்றபடி.