பாடல் எண் :2766
சீருடைப் பிள்ளை யாருஞ் சிறப்புடை யடியா ரோடுங்
காரினிற் பொலிந்த கண்டத் திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி யங்குநின் றரிது நீங்கி
ஏரியன் மடத்தி னுள்ளா லினிதெழுந் தருளிப் புக்கார்.
868
(இ-ள்) சீருடை.....வணங்கி - சீரினையுடைய பிள்ளையாரும் சிறப்புடைய அடியார்களுடனே மேகம்போன்று விளங்கும் கழுத்தையுடைய இறைவரது திருவடிகளை வணங்கி; காதல்...போற்றி - அன்பினால் நிறைந்த திருவருள் பெற்றுத் துதித்து;
அங்குநின்று....புக்கார் - அங்குநின்றும் அரிதின் நீங்கி அழகிய இயலின் அமைந்த திருமடத்தின் உள்ளே இனிதாக எழுந்தருளி உள்ளே புகுந்தனர்.
(வி-ரை) சீருடை - சிறப்புடை - வெற்றிகரமாகப் பிள்ளையாரின் புகழ் பெருகிய நிலையும், அதனால் அடியார்களின் மேன்மை விளக்கும் நிலையும் குறித்தன. (வ.சு.செ.) அடியாரோடும் - வணங்கி - அடியார்களுடனே கூடி இறைவரை வணங்கப்பெறுதல் பெருமகிழ்ச்சி தரும் பேறாகும்; "அன்பரொடு மரீஇ"(12 - சூத்); "அடியரோ டிருக்கலாமே"(சித்தி - பாயி).
அரிது நீங்குதலாவது நீங்கலாற்றாது பரிவுடன் ஒருவாறு ஒருப்பட்டுப் பிரிதல்.
இனிது எழுந்தருளிப்புகுதலாவது மடத்தினின்றும் அன்று காலையிற் புறப்படும் போது அரசன் மிக்க சுரத்துடன் கிடக்க, அமணர் வாதத்தினை எதிர்நோக்கி, அமணரை நோக்கி வாது செய்யவும் வாதில் வென்றழிக்கவும் இறைவரது திருவுள்ளக் கருத்து அறிந்த நிலைகள் எல்லாம் நீங்கி இனிது புகுதல்.
காரினிற் பொலிந்த கண்டம் - விடத்தன்மை வாய்ந்த அமணர்களது கொடுமைகளை யெல்லாம் வெளிவந்து கேடு விளைக்காவண்ணம் அடக்கிவைத்த அருணிலைக் குறிப்பு.
ஏரியல் மடம் - "திருநீற்றுத் தொண்டர் குழாம் சாருமிடம் செங்கமலத் திருமடம்" என இதன் அழகினைப் பின்(2775) விரித்தல் காண்க. சமணர் கொளுவிய தீயினை மாற்றுவித்த அழகுபொருந்திய என்ற குறிப்புமாம்.