திருவிய மகத்தி னுள்ளுந் திருநீல கண்டப் பாணர்க் கருளிய திறமும் போற்றி யவரொடு மளவ ளாவித் தெருளுடைத் தொண்டர் சூழத் திருத்தொண்டி னுண்மை நோக்கி இருள்கெட மண்ணில் வந்தா ரினிதமர்ந் திருந்தா ரன்றே. | 870 | (இ-ள்) திருவியமகத்தினுள்ளும்....அளவளாவி - திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவர் அருள்செய்த திறத்தினைத் திருவியமகத் திருப்பதிகத்தினுள்ளே வைத்துத் துதித்து அவருடனே அளவளாவியிருந்து; தெருளுடை...நோக்கி - அறிவின் தெளிவு மிகுந்த திருத்தொண்டர்கள் பலரும் சூழ்ந்திருக்கத் திருத்தொண்டினது அரீயாத உண்மைத் திறத்தினை நோக்கி மகிழ்ந்துகொண்டு; இருள்கெட....இருள் கெடும்படி மண்ணுலகில் வந்தவதரித்த பிள்ளையார் இனிதாக அங்கு விரும்பி வீற்றிருந்தருளினார் அந்நாளிலே.இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுரைக்கநின்றன. (வி-ரை) திருஇயமகம் - இது பதிக யாப்புப்பற்றி வந்த பெயர். திரு இருக்குக் குறள் - என்பது போல; "இருக்கையே" - "இருக்கையே" என ஒருசொல் - அல்லது சொற்றொடர் - மடித்து ஒவ்வோரடியிலும் இடையில் இருமுறை வரும்படி தொடுக்கப்பட்ட யாப்பு வகை. ஒவ்வோர் அடியினும் முதலில் ஒரு சொல் - அல்லது சொற்றொடர் - அல்லது சொற்றொடர்கள் அவ்வாறு வரத்தொடுக்கும் யாப்பும் இயமகம் எனப்படும்; "மடக்குச் சந்தவியமகம்"(2174) என இதனை ஆசிரியர் குறித்தது காண்க. திருஇயமகத்தினுள்ளும் - திருவியமகம் என்று யாப்புக் காரணமாகப் பெயர் பெற்று விளங்கும் "ஆலநீழல்" என்ற திருப்பதிகத்தினுள்ளும் என்க. இயமகம் அச்சந்தங்கொண்ட பதிகத்துக்கு வந்தது ஆகுபெயர். திருநீலகண்டப் பாணர்க்கருளிய திறம் போற்றி - "தாரமுய்த்தது பாணர்க் கருளொடே" என்று பதிகம் ஆறாவது திருப்பாட்டில் வரும் பகுதி குறித்தது; அருளிய திறமாவது, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஎருக்கத்தம்புலியூரினின்றும் சோழ நாட்டுப் பல பதிகளையும் வணங்கிப் போய்த் திருவாலவாய் பணியச் சென்று கோயில் வாயிலினின்று பாணிகள் யாழிலிட்டு வாசித்தனர்; அப்போது முதல்வர் தொண்டர்க்கருளியபடி அவர்கள் அவரைத் திருமுன்பு கொண்டு புகுதச் செய்தனர்; பாணர் அங்குத் திருமுன்பிருந்து பரிவினாற் பாடினர்; அதுகேட்ட இறைவர், "பாணர் பாடுஞ் சாந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில்வீக் கழியுமென்று, சுந்தரப் பலகை முன்னீரிடு" மென்று தொண்டாக்கருள அவர்களும் அவ்வாறே பலகையிட, அதன் மேலிருந்து பாடினர் என்ற வரலாறு; இது பின்னர்த் திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்து விரிக்கப்படுவது கண்டுகொள்க. அதன் பின்பு பாணனார் திருவாரூர் சென்று வணங்கத் திருவருளால் வடதிசையில் வாயில் வேறு வகுப்பப் புகுந்து வணங்கினார்; அதன் பின்பு சீகாழிக்கு வந்து பிள்ளையாரது அருள்பெற்று அவருடனே சேவித்து அணைந்தனர் என்பதும் ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டு அருளிய திறம் என்றது திருஆலவாயில் அடியார்க்கருளிக் கோயிலினுள் உள்ளே திருமுன்பு வரச்செய்து பலகையிட்ட அருளின்றிறம்; திருவாரூர் வாயில் வேறு வடதிசையில் வகுத்துத் திருமுன்பு வரச் செய்த திறமும் குறிக்கும்; இத்திருப்பதிகம் அருளியபோது திருமடத்தில் யாழ்ப்பாணரும் உடனிருந்து யாழ் வாசிக்கப் பெற்றமையால் அவருக்கு முன்னர்க் கூடலிறைவர் அருளிய திறத்தினை நினைவுற்று ஈண்டு வைத்துப் பாராட்டியருளினர் என்க. இனிப், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தினுள் விறகு விற்றதுமுதல் இசை வாது வென்றதுவரை நான்கு படலங்களினும் பேசப்படும் பாணபத்திரனார் வேறு; இங்குக் குறித்த திருநீலகண்டப் பாணர் வேறு என்பது உணரத்தக்கது. அவர், இறைவர்பால் "மதிமலி புரிசை" என்ற திருமுகம் பெற்றுக் கழறிற்றறிவாரிடம் சென்று பெரும்பரிசில் பெற்றனராதலின் காலத்தால் மிகப் பிற்பட்டவராதல் கழறிற்றறிவார் புராணத்தினுள் 26 - 39 வரையில் உள்ள பாடல்களினும், 94-வது பாட்டினும் ஆசிரியர் அருளியவாற்றாலும், திருவிளையாடற் புராணம் திருமுகங்கொடுத்த படலத்தானும் அறிந்துகொள்ளத் தக்கது; இவ்விருவார்பாலும் தனித்தனி இறைவர் செய்த அருளிப்பாடுகள் வெவ்வேறாம். அவை ஒன்றேயெனக் கொண்டு மயங்கித் தமது மயக்கத்தை ஆசிரியர் பெருமான்மே லேற்றி அவர்பால் அறியாமையைச் சுமத்தி அபசாரப்படும் மாக்களும் உண்டு; ஆராய்ச்சி என்ற பேரால் செய்யப்படும் தகுதியில்லாச் செயல்கள் பலவற்றுள் இதுவுமொன்றாம் என விடுத்தொழிக. தாரம் - பண்பாடும் திறம் என்றுகொண்டுரைப்பினும், அரியபண்டம் என்று கொண்டு பொற்பலகை எனக்கொண்டுரைப்பினும், அஃதிவ்விருவர்க்கும் இறைவர் அருளுதலும் அமையுமாதலின் மாறுபாடோ மயக்கமோ கூடுதல் யாங்கனமென்க; யாழ்ப்பாணருக்குப் பலகையிட்ட வரலாற்றைப் பெயரொற்றுமைபற்றிப் பிறழ உணர்ந்த வடமொழியாளர் பாடியதை அவ்வாறே திருவிளையாடலுள் மொழிபெயர்த்தனர் என்பதும் அமையும்; பலகையிட்ட வரலாறு ஈரிடத்தும் வெவ்வேறாய் வருவதும் கருதத் தக்கது. ஈண்டு யாழ்ப்பாணர்க்குப் பலகை தந்தருளியது யாழினைத் தரையில் வைப்பின் கீதந்தாக்குமென்று பலகையிட்டருளினர் என்பதாம். இக்கருத்தால் யாழ் தரையில் வைக்காது பலகையின் மேல் வைத்து வாசிக்கும் இயலும் மரபும் காண்க. பாணபத்திரனார்க்கு இரவில் மழையில் தாமுங் கருவியும் நனைந்துவந்து, வாசிக்க இடர்ப்பட்டபோது, அதனை மாற்ற இறைவர் அருளியது வரலாறு; தாரம் - பண் பாடும் திறம் எனக்கொண்டுரைப்பின் யாழ்ப்பாணர் திருவாலவாயிலிலும், திருவாரூரிலும் தமது மரபின் முறைபற்றிப் புறமுற்றத்திற் கோயில் வாயிலில் இருக்க அதனையாற்றாது திருமுன் வரச்செய்து பாட அருளிய தன்மை குறித்ததென்க. இனித்,திருவிளையாடற் புராணம் புராணத்தின் பகுதியில் அமைவதாலும், திருத்தொண்டர் புராணம் திருமுறையாகிய வேதப் பகுதியில் அமைவதாலும் இவை ஒன்றொடொன்று மாறுபட்டபோது வலிமையுடையதென எடுக்கத்தக்கது வேதமேயாம் என்ற ஆதரவுகளின் ஏற்றத் தாழ்ச்சி முறையும் மனங்கொள்ளத் தக்கது என்பது முன்னரும் பலவிடத்து உரைக்கப்பட்டது. பிறவும் கண்டுகொள்க. அவரொடும் அளவளாவி - என்றதனாலும் பதிகத்துட் பாணர் என்றது யாழ்ப்பாணரைக் குறிக்கும் என்க. தெருள் - உண்மையுணர்வாகிய அறிவு. "முன்னின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடன்மூழ் கினரே"(1336); "தெருளுமுணர் வில்லாத சிறுமையேன்"(1798). திருத்தொண்டின் உண்மை நோக்கி - திருத்தொண்டர்கள் முதல்வர்பாலும் திருவேடத்தார்பாலும் செய்யும் திருத்தொண்டுகளின் திறங்களையே பேசிக் கலந்து களிப்புறுவது இயல்பு. "வாய்மைச், சால்பின்மிக் குயர்திருத் தொண்டினுண்மைத் திறந் தன்னையே தெளியநாடிக், காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார்" (2421) எனவும், "திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தங், கொருப்படு சிந்தையினார்கள்"(1509) எனவும் கூறிய பொருள்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன; "சிரிப்பார் களிப்பார் தேனிப்பார், திரண்டு திரண்டுன் திருவார்த்தை, விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் றிருநாமந், தரிப்பார் பொன்னம் பலத்தாடுந் தலைவா வென்பார்" (திருவா - கோயின்மூத்த. பதி - 9) என்ற கருத்துக் காண்க. திருத்தொண்டின் உண்மை - திருத்தொண்டின் றிறமும் இறைவர் ஆட்கொள்ளும் தம்மையும் எஞ்ஞான்றும் அழிவுபடாது நிலைத்த தன்மை; ஈண்டு ஆலவாய்ப் பெருமான், அமண் இருளினுள் அகப்பட்டு வருந்திக் கிடந்த அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் அருளிய வரலாறுகளும் குறிப்பு. நோக்கி - அழுந்தி உளத்தில் உணர்ந்து களித்து. இருள் கெட மண்ணில் வந்தார் - பிள்ளையார்; "பரசமய நிராகரித்து நீறாகக்குதல்" ஈண்டு இருள் கெடுத்தல் எனப்பட்டது. ஆணவ இருள் போக்கிச் சிவஞான வொளிதருதலும் குறிப்பு. அமர்தல் - விரும்பி எழுந்தருளியிருத்தல்; அன்றே - அந்நாளில். |
|
|