செய்தவத்தாற் சிவபாத விருதயர்தாம் பெற்றெடுத்த வைதிகசூ ளாமணியை மாதவத்தோர் பெருவாழ்வை மைதிகழுந் திருமிடற்றா ரருள்பெற்ற வான்பொருளை எய்தியபூம் புகலியிலே யிருந்தநாண் மிகநினைந்தார். | 873 | (இ-ள்) சிவபாத விருதயர்தாம் - சிவபாத இருதயர்; செய்தவத்தாற் பெற்றெடுத்த - முன்செய்த பெருந்தவப் பயனாகப் பெற்றெடுத்த; வைதிக....பொருளை - வைதிகர்களது சிரமணியாகியவரை, மாதவத்தோர்களாகிய சிவஞானிகளது பெருவாழ்வு ஆகியவரை, விடம் விளங்குந் திருமிடற்றினையுடைய இறைவரது திருவருள் பெற்ற மெய்ப்பொருளாயினாரை; எய்திய....நினைந்தார் - தாம் இருந்த சீகாழிப் பதியிலே தங்கியிருந்த அந்நாட்களில் மிகவும் நினைந்தனர். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை) செய்தவம் - முன்னைச் செய்த தவமும், இவ்வுலகிற் செய்த தோணியப்பர் வழிபாடாகிய தவமும்; இது "காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்" (1917) என முன்கூறப்பட்டது காண்க. பெற்றெடுத்த - பெற்ற மகனாராகிய; எடுத்த - பகுதிப்பொருள் விகுதி. வைதிக சூளாமணியை - என்றது வேதநெறி தழைக்கச்செய்தமையும், மாதவத்தோர் பெருவாழ்வை - என்றது மிகுசைவத் துறைவிளங்கச் செய்தமையும், திருமிடற்றார் அருள்பெற்ற வான்பொருளை - என்றது. பூதபரம்பரை பொலியச் செய்தமையும் குறித்தன; சூளாமணி - வாழ்வு - வான்பொருள் - இவைபோன்றாரை என்பதாம். இவை தந்தையார் தமது அருமைப் பிள்ளையாரைப் பாராட்டிய முறையினையும் குறிப்பிலுணர்த்திய படி காண்க. எய்திய - தாம் மேவி இருந்த; இருந்த நாள் - பிள்ளையாரைப் பிரிந்திருந்த நாள். மிக நினைதலாவது - இடையறாது அதுவே நினைவாக இருத்தல். |
|
|