"ஆனபுகழ்த் திருநாவுக் கரசர்பா லவஞ்செய்த மானமிலா வமணருடன் வாதுசெய்து வெல்வதற்கும் மீனவன்ற நாடுய்ய வெண்ணீறு பெருக்குதற்கும் போனவர்பாற் புகுந்தபடி யறிவ"னெனப் புறப்படுவார்; | 874 | (இ-ள்) ஆனபுகழ்.....வெல்வதற்கும் - ஆயின புகழினையுடைய திருநாவுக் கரசரிடம் தவறு செய்த மானமில்லாத சமணர்களுடனே வாதம் செய்து அவர்களை வெற்றி கொள்வதற்கும்; மீனவன்றன்...பெருக்குதற்கும் - பாண்டியனுடைய நாடு உய்யும்வண்ணம் திருநீற்றினைப் பெருக ஆக்குதற்கும்; போனவர்பாற்...புறப்படுவார் - சென்றருளிய பிள்ளையார்பால் நிகழ்ந்த வண்ணங்களை அறிவேன் என்று சிவபாதவிருதயர் புறப்படுவாராகி; (வி-ரை) ஆன புகழ் - நல்லதாயின புகழ்; ஆன - சிறப்பாயின; சிவனருளாலாயின; திருத்தொண்டின்கண் உரைப்பாயின. புகழ்த் திருநாவுக்கரசர் - "திருநாவுக் கரசென்றுல கேழினுநின் னன்னாம நயப்புற நண்ணுகவென்று"(1339) என இறைவனருளால் ஏழுலகும் பரவிய பெரும் புகழ். "அவர்பெருமை யங்கணர்தம் புவனத்தி லறியாதா ரியாருளரே"(1797) என்றதும் காண்க. அவம் - பெருந் தவறு; கெடுதி. அரசர்பால் அவஞ் செய்த - என்றதனால் பிள்ளையார்பால் மிகவும் செய்வார்கள் என்றது குறிப்பு. "கலதி யமணர் கடுவினைசெய், மாயை சால மிகவல்லா ரவர்மற் றென்னை முன்செய்த, தீயதொழிலும் பல"(1551) என அப்பர் கூறியருளியது காண்க. வாது செய்து வெல்வதற்கும் - நீறு பெருக்குதற்கும் - போனவர் - இது அடியவர்பால் கேட்டறிந்த உரையளவையாலும், போயின பிள்ளையாரின் கருத்துக் கருதலளவையானும் சிவபாதஇருதயர் அறிந்தது. "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" (கோளறு பதிகம் - 10) என்ற பதிகத்தினையும் அவ்வரலாற்றினையும் உடனிருந்து கேட்டார் சொலக் கேட்டனராம் என்க. "பரசமய நிராகரித்த நீறுஆக்கும்"(1917) என்று தாம் வேண்டிப் பெற்ற வரங்கள் இரண்டுமே பிள்ளையாரது திருவவதாரக் கருத்தாவதும் காண்க. "தெண்பூ, திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே(கந்தரந் - 9) என்றது இதே கருத்து. நீறு பெருக்குதற்கும் - "நீறு ஆக்கும்"(1917); பெருக்குதல் - எங்கும் பரவி ஓங்கச் செய்தல். விளக்க மிகுவித்தல் என்றலுமாம். புகுந்தபடி - நிகழ்ச்சிகள் நேர்ந்த வண்ணங்களை; படியினை என இரண்டனுருபு விரிக்க. புறப்படுவார் - செல்வாராகித் துணிந்து; முற்றெச்சம். புறப்படுவாராயினார் என முற்றாக உரைகொள்ளுதல் பிழை; அடி வணங்கி - வழிக்கொண்டு (2772) என்று மேற்கூறுதலும் காண்க. எழுவாய் முன் பாட்டினின்றும் வருவிக்க.
பெருகுதற்கும் - என்ற பாடம் சிறப்பின்று. |
|
|