பாடல் எண் :2775
அங்கணரைப் பணிந்துபோந் தருகணைந்தார் தமைவினவ
"இங்கெம்மைக் கண்விடுத்த காழியா ரிளவேறு
தங்குமிடந் திருநீற்றுத் தொண்டர்குழாஞ் சாருமிடஞ்
செங்கமலத் திருமடமற் றிது"வென்றே தெரிந்துரைத்தார்.
877
(இ-ள்) அங்கணரை...வினவ - அங்கணராகிய இறைவரைப் பணிந்து புறம்போந்து பக்கத்தில் வந்தணைந்த நகர மாந்தர்களாகிய அடியார்களை(ப் பிள்ளையாரது திருமடத்தினைப் பற்றி) வினவ; இங்கெம்மை....தங்குமிடம் - இங்கு(க் குருடராயிருந்த) எம்மைக் கண்திறப்பித்து ஒளிநெறி காட்டிய சீகாழியவரது இளஞ்சிங்கமாகிய பிள்ளையார் தங்கும் இடமாவது; திருநீற்று....இது என்றே தெரிந்துரைத்தார் - திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சாரும் இடமாய்ச், செந்தாமரை போன்ற திருமடம் மற்று இதுவேயாகும் என்று தெரிந்து சொன்னார்கள்.
(வி-ரை) அங்கணர் - அழகிய கருணைநோக்க முடையவர்; பணிந்து - முன்பாட்டிற் கூறியவாறு திருவடிக்கீழ்ப் புக்கு ஆர்வத்தோடும் பணிந்து.
போந்து - வினவ - திருக்கோயிலின் புறத்தே போந்து வினவினாராக; திருக்கோயிலினுள் சிவன் பேச்சன்றி வேறுபேச்சுப் பேசலாகாதென்பது விதியாதலின் அம்மரபு பற்றிப் புறம் போந்தபின் வினவினார்.
அருகு அணைந்தார்தமை - ஆங்குப் பக்கத்துச் சார்ந்து அணைந்தார்களாகிய தொண்டர்களை; அருகு - திருக்கோயிலினருகு; கோயிலின் அருகு என்றதனாலும் அவர்களை நோக்கிச் சிவபாதவிருதயர் பேசும் உரிமை எண்ணத்தக்க நிலையில் இருந்தமையாலும் அவர்கள் அடியார்கள் என்று கருதப்பட்டது; அல்லாரைக் காணலும் பேசலும் இணங்குதலும் தகாதென்றும் அவர்கள் அஞ்சத்தக்கவர் என்றும் பெரியோர் கொள்வர். "காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா). "திருமுண்டந் தீட்டமாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே" (திருவா).
இங்கெம்மைக் கண் விடுத்த - என்றமையால் அவர்கள் பாண்டி நாட்டவர் - மதுரை நகரத்தவர் என்றும், முன் அகக்கண் குருடாய் அமணிருளில் நின்று, பின் பிள்ளையாரருளியவாற்றால் ஞானம் விளங்கப்பெற்று அகக்கண் பெற்றவர் என்றும் கொள்ளப்படும். கண் விடுத்தல் - குருடாகிய கண் திறப்பித்தல்; பாண்டி நாட்டு மக்களது நன்றி பாராட்டுமுணர்ச்சி குறித்தது காண்க.
காழியார் இளவேறு - சீகாழிப்பதியவர்களது இளஞ்சிங்கம் போன்ற தலைவர்; ஏறு - பொதுப்பெயர்; ஆண்சிங்கம் என்ற பொருளில் வந்தது; காழியார் - சீகாழி இறைவராகிய தோணியப்பர் எனக் கொண்டு அவரது சிவஞானமுண்டருளிய மதலையார் என்ற குறிப்புடனும் நின்றது.
செங்கமலத் திருமடம் - திருமடத்தைத் தாமரைபோன்ற தென்றது "தாமரைமிசைத் தனிமுதற் குழவியென்ன" (1939) என்ற உவமையின் கருத்தைத் தொடர்ந்து கொண்டு கூறியபடி; ஆண்டுரைத்தவை பார்க்க. "மலர்மகட்கு வண்டாமரைபோன் மலர்ந் தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்" (97) என்புழிப்போலச் சைவமெய்த் திருவையளிக்கும் பிள்ளையார் தங்குமிடமாதலின் திருமடத்தினைச் செங்கமலம் என்றார். செங்கமலத்தில் வாழும் இலக்குமிக்கு மிடமான திருமடம் என்றுரைத்தனர் முன் உரைகாரர்; அது பொருந்தாமை காண்க.
திருநீற்றுத் தொண்டர் குழாஞ் சாருமிடம் - தமது முன்னைச்சார்புகள் கெடத்தமது நற்சார்பு இதுவென உணர்ந்துகொண்டு திருநீற்றுத் தொண்டர்கள் கூட்டமாக வந்து சார்கின்ற இடமாமென்பது. திருநீற்றினை ஆக்கம் செய்த பிள்ளையாரது செயலால் 2501ல் கூறியபடி முன்னையிருள் நீங்கித் திருநீற்றுத் தொண்டர் குழாம் பெருகப்பெருக வந்து சார்கின்றது என்று அவர்கள் கண்கூடாகக் கண்ட செய்தியறிவிக்கப்பட்டவாறு.
"இது" என்றே - இது என்ற அண்மைச்சுட்டினால் இத்திருமடம் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அணிமையில் இருந்ததென்று கருத இடமுண்டு. என்றே - ஏகாரம் தேற்றம்.
தெரிந்த உரைத்தார் - தெரிதலாவது கண் விடுத்த தன்மை - செங்கமலமாந் தன்மை என்ற இவற்றின் சிறப்பைத் தாம் உணர்ந்து தக்கார்க்கு எடுத்து உரைக்கும் திறம். தெரிந்து - தெரிந்தமையால்.