பாடல் எண் :2777
சிவபாத விருதயர்தா முன்றொழுது சென்றணையத்,
தவமான நெறியணையுந் தாதையா ரெதிர்தொழுவார்
அவர்சார்வு கண்டருளித், திருத்தோணி யமர்ந்தருளிப்
பவபாச மறுத்தவர்தம் பாதங்க ணினைவுற்றார்.
879
(இ-ள்) சிவபாதவிருதயர்...சென்றணைய - சிவபாத விருதயர் தாம் அவர் முன்னே தொழுது சென்றருள; தவமான... எதிர்தொழுவார் - தவநெறியினில் அணையும் தாதையார் எதிரில் தாமும் தொழுவாராகிய பிள்ளையார்; அவர் சார்வு...நினைவுற்றார் - அவரைக் கண்டருளிய சார்பினாலே திருத்தோணியின்கண்ணே அமர்ந்தருளியிருந்து பவபாசங்களை அறுத்தவராகிய தோணியப்பருடைய திருப்பாதங்களை நினைவுற்றனர்.இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
(வி-ரை) முன் தொழுது - முன் - பிள்ளையார் திருமுன்பு; முதற் கண் - வேறு செய்தற்கு முன் என்றலுமாம்.
தொழுது முன் சென்று என்று கூட்டினுமமையும்.
சென்று அணைய - திருமடத்தினுள் பிள்ளையாரை அணுகச் சென்று சார.
தவமான நெறி...எதிர் தொழுவார் - தவமான நெறி - வைதிக சைவ நெறி. முன்(2773 - 2774) பாட்டுக்களில் உரைத்தவை பார்க்க; தவநெறியின்கண்ணே எப்பொழுதும் வாழ்பவர்; எதிர் தொழுதல் - அவர் தொழத் தாமும் தொழுதல்; தொழுவார் - தொழுவாராகி; முற்றெச்சம். தொழுவார் - கைகுவித்தருளி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. "அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியா ரவர்களோ நம்பி யாரூரர் தாமோ, முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமையா லெதிர் வணங்கி மகிழ்ந்து " (244) என்ற நிலை இங்குக் கருதற்பாலது. அங்கு இருபாலும் அடியார்கள் என்ற கருத்தால் ஒருசேர வணக்கம் உடனாக நிகழ்ந்தது. "பரமனுக்காளா மன்பர் தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்" (72) என்ற நிலை; இனித், "திருமுலையமுத முண்டபோதே, யேழிசைவண் டமிழ்மாலை யிவ னெம்மா னெனக்காட்டி யியம்ப வல்ல, காழிவரும் பெருந்தகை"(1443)யைக் கண்டு வணங்க வருகின்ற அரசுகளும், "வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னா, ளாண்டவர செழுந்தருளக் கேட்டருளி"(1446) அவரைக் காண்டமைய பெருவிருப்புடன் எதிர்கொண்டு வந்த பிள்ளையாரும் சீகாழியில் திருமடத்தில் சந்தித்த இடத்துக் "கண்ட கவுணியக் கன்றுங் கருத்திற் பரவுமெய்க் காதற், றொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுதே...எதிர்வந் திறைஞ்ச"(2169) என்ற நிலையும் இங்குக் கருதத்தக்கது; ஆண்டு இறைவர் ஆட்கொண்டருளிய பெருமை நினைந்ததும், திருவேடத்தின் பெருமைபற்றி நினைந்ததும், ஆகிய கருத்துக்களினால் பிள்ளையார் தொழுத நிலையும் அப்பர் இறைஞ்சிய நிலையும் நிகழ்ந்த நுட்பங்களை உய்த்துணர்ந்துகொள்க; அன்றியும் அரசுகளைப் பிள்ளையார் தமது "அப்பர்" என அழைத்தருளி மேற்கொண்ட நிலையும் கருதுக. இனி, ஈண்டுச் சிவபாதவிருதயர் தமது திருமகனார் என்ற நிலையிற் காணவருகின்றனர்; அவ்வோகைச் செய்தி கேட்டுத் தாதையார் வருகின்றனர் என்ற கருத்துடன் எதிர்கொண்ட பிள்ளையார், "எப்பொழுது வந்தருளிற்று" என்று உரைத்து அழைக்க, அவர் பிள்ளையாரைத் தொழுதபோது, பிள்ளையார், அந்தத் தாதையாரது சார்புபற்றித் திருத்தோணியில் இருக்கும் தாதையாரையும் தாயாரையும் நினைந்து தொழுதனர்; தாதையார் தொழுதபோது உலகத் தாதையார் என்ற நிலையில் பிள்ளையார் தொழவில்லை. அவ்வாறு தொழுதிடுதல் எம்மனோராகிய உலகரது பாசநிலையா யொழிந்து "பாசமற்று இலரா"கிய பிள்ளையார் போன்ற பெரியோர்நிலை யாகாது. பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்ற எம்மனோர்க்குப் "பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்" என்றபடி உலகப் பொருள்களே காட்சிப்பட இறைவனை அவற்றுட் காணலரிது. ஆனால் பெரியோர் "பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்"; ஆதலின் "பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்" என்ற நிலையுடையார் என்ற நுட்பத்தினை ஈண்டுக் கண்டுகொள்க. பவபாச மறுத்தவர் - தொழுத தாதையாரை அவ்வாறே தாதையார் என்ற நிலையிற் காணாது அவர் சார்பில் தோணித் தாயாரையும் தந்தையாரையுமே நினைவுறச் செய்தது பவபாசமறுத்த நிலை என்க. இது "மறக்குமாறிலாத என்னை" (தேவா) என்ற நிலை.