பாடல் எண் :2780
திருப்பதிகந் திருக்கடைக்காப் புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினா லவர்தமக்கு விருந்தளித்து மேவுநாள்
அருப்புறுமெய்க் காதல்புரி யடியவர்க டம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர் பதிபிறவுந் தொழப்போவார்;
882
(இ-ள்) திருப்பதிகம்...சாத்தி - திருப்பதிகத்தினைத் திருக்கடைக்காப்புச் சாத்தி முடித்தருளி; சிறப்பின்மிகு...மேவுநாள் - மிக்க சிறப்பினுடன் விருப்பத்தினாலே அத்தாதையார் தமக்கு விருந்தமுதளித்துக் களித்துப் பொருந்தியிருக்கும் நாள்களிலே; அருப்புஉறு....போவார் - அரும்புபோலப் புதிதின் மலர்கின்ற உண்மையன்பு மிகுதியினால் திருத்தொண்டினை இடையறாது நினைந்து செய்யும் அடியவர்களோடும், மலையினையே வில்லாகக் கையில் ஏந்திய இறைவர் எழுந்தருளிய பிற பதிகளையும் சென்று தொழுவதன்பொருட்டுப் போவாராகி;
(வி-ரை) சிறப்பின் மிகு விருப்பாவது - "அவர்சார்பு கண்டருளித் திருத்தோணி யமர்ந்தருளிப் பவபாச மறுத்தவர்தம் பாதங்கள் நினைவு" நின்ற சிறப்பினால்வரும் பெருவிருப்பம்.
விருந்து - தாதையார் பழஞ்சுற்றமாய் ஒக்கல் எனப்படுவாராயினும் ஈண்டுத் திருத்தோணியமர்ந்தார் பாதங்களின் நினைவு கொள்ளும்தோறும் புதிது புதிதாய் வருவதொன்றாதலின் விருந்தென்றார். விருந்து - புதிதின் வருவோர்; அதிதிகள்; இங்கு விருந்தென்றது விருந்திற்குச் செய்யு முபசாரத்தினை; "யாதுசெய் வேன்கொல் விருந்து"(குறள்).
அருப்புறு மெய்க்காதல் - புரி - அருப்புறுதல் - அரும்புபோல அவ்வப்போது புதிதின் மலர்தல்: உறு - உவமவுருபு; அரும்பு - அருப்பு - என எதுகை நோக்கி வலிந்து வந்தது. காதல் - அன்பின் செறிந்தவிளைவு; ஈண்டு அதனால் விளையும் செயல்களுக்காயிற்று. புரிதல் - இடைவிடாது நினைத்தலும் சொல்லுதலும் செய்தலுமாம்.
அடியவர்கள் தம்மோடும்- அடியவர் - அயரா அன்புசெய்யும் மெய்ஞ்ஞானிகள் -"அன்பரொடு மரீஇ" (12 சூத் - சிவஞானபோதம்).
கையுறு பொருப்புச் சிலையார் என மாற்றுக. பொருப்பு - ஈண்டு மேருமலை; சிலை - வில்; "சிலையது வெஞ்சிலையாக"(தேவா).
பிறபதியும் - என்பதும் பாடம்.