பாடல் எண் :2781
ஆலின்கீழ் நால்வர்க்கன் றறமுரைத்த வங்கணனை
நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொ டென்னவனுந் தேவியரு முடன்போத.
883
(இ-ள்) ஆலின்...அங்கணனை - கல்லாலமரத்தின் கீழே நான்கு முனிவர்களுக்கு அறங்களை உபதேசித்தருளிய அங்கணராகியவரை; நூலின்கண்...ஈந்தானை - தமிழ் நூல்களுள்ளே சிறந்த பொருளிலக்கணத்தைப் பாடி நூலறியும் சங்கப் புலவர்களுக்கு ஈந்தருளியவரை; காலம்பெற்று....கைதொழுது - உரிய காலம் சேரப் பெற்று இனிதாக வணங்கிக் கைதொழுது; சீலம்....போத - சீலவொழுக்கத்தினை மேற்கொண்ட பாண்டியனும் அவரது தேவியாரும் தம்முடன் கூடவர; புறம் போந்தார் - புறத்திலே போந்தருளினர் (பிள்ளையார்);இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
(வி-ரை) ஆலின்...அங்கணனை-ஆல்-கல்லாலமரம்; நால்வர் - முனிவர் நால்வர்; அவராவார் சனகர் -சனந்தனர்-சனாதனர்- சனற்குமாரர்.
அறம் - அறமுதலிய நான்கினையுமுணர்த்தி நின்றது; "அழிந்த சிந்தை யந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு, மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே" (பிள். தேவா - பழந்தக்க - 7); இவை வேதங்களில் மக்களுக்கு உறுதிப் பொருள்கள் என எடுத்தோதப்பட்டன.
நூலின்கட் பொருள் பாடி - பொருள் - பொருள்நூல்; "செழும்பொருணூல் தருவானை"(1671); நூலின்கண் - தமிழ் நூல்களில் சிறந்து பேசப்படும்; எழுத்துச் சொல் பொருள் யாப்பு என்ற நான்கனுள் சிறந்தது பொருள்; அஃது அகம்புறமென இருவகைப்படும்; அவற்றுட் சிறந்தது அகப்பொருள்; அதுதானும் ஞானயோக நுண்பொருள் - உலகவழக்குப் பொருள் என இரண்டு பொருளும் நுதலும் இயல்புடைத்து; அவற்றுட் சிறந்தது ஞானயோக நுண்பொருள்; என இவ்வெல்லாவகைப் பட்ட பொருணூல்களினும் சிறந்த ஞானயோகப் பொருணூல் பாடியளித்தனர் என்ற தாம்; "மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச், செம்மைப் பொருளுந் தருவார்" (974) என்று இதன் இயல்பை முன்னர் விரித்தருளியமை காண்க. இதுபற்றி வரும் இறையனாரகப் பொருளுரையும்(1), திருக்கோவையா(1)ருரையும் பார்க்க. பொருள் பாடி - "இறையனாரகப்பொருள்" என்னும் பொருளிலக்கணத்தைப் பாடி.
நூலறிவார் - சங்கப் புலவர்களும் பாண்டியனும். அவர்க்கு இறைவர் பாடியீந்த வரலாறு இறையனாரகப்பொருள் முதற்சூத்திர உரையுட் காண்க. "நூலறிபுலவ" (முருகு)
காலம் பெற்று - இறைஞ்சி வழிபட்டு விடை கொள்ளுதற்குரிய பூசைக்காலங் கிடைக்கப்பெற்று.
நூல்....பாடி
- "படிக்கு நூல்கள் சிவாகமம்" (சித்தி) என்றபடி ஈண்டுச் சரியை யாதி உண்மைப்பொருள் காட்டும் சிவாகமங்களைப் பாடியருளி என்றும், இவற்றை மறையாதி உணர்ந்தார்க்கு ஈந்தருளினர் என்று கொள்வதுமாம்.
புறம் - மதுரைத் திருநகரின் புறம்; மேல்வரும் பாட்டுப் பார்க்க.
சீலம் கொள் - சைவவொழுக்கத்தினை மீள மேற்கொண்ட (அரசன்).