பாடல் எண் :2787
சேதுவின்கட் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் றனைப்பாடிப் பணிந்து போந்து,
காதலுட னந்நகரி லினிது மேவிக்
கண்ணுதலான் றிருத்தொண்ட ரானார்க் கெல்லாங்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாடோறும் வணங்கி யேத்தி
நளிர்வேலைக் கரையினயந் திருந்தா ரன்றே.
889
(இ-ள்) சேதுவின்கண்...போந்து - சேதுவினிடமாகச், சிவந்த கண்களையுடைய திருமால் பூசித்த சிவபெருமானைப் பாடி வணங்கிப் புறம்போந்து; காதலுடன்...மேவி - விருப்பத்துடனே அத்திருநகரின்கண் இனிதாக அமர்ந்தெழுந்தருளியிருந்து; கண்ணுதலான்...போற்றிச் செல்ல - நுதலிற்கண்ணுடைய சிவபெருமானது திருத்தொண்ட ரானார்களுக்கெல்லாம் குற்றமற்ற புகழினையுடைய பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரும் உண்மைநெறி நிற்கும் குலச்சிறை நாயனாரும் குறைவின்றி வேண்டுவன எல்லாம் அளித்துப் பாதுகாத்துத் துதித்துவர; நாதர்தமை.....ஏத்தி - இராமநாதராகிய இறைவரை நாடோறும் வணங்கித் துதித்துக் கொண்டு; நளிர்...அன்றே - குளிர்ந்த கடற்கரை நகரின்கண் விருப்புடன்(பிள்ளையார்) அப்பொழுது எழுந்தருளியிருந்தனர்.
(வி-ரை) சேது - அணையினை உடைய காரணமாக இராமேச்சுரத்துக்கு வழங்கும் பெயர். சேது - சேதுக்கரை என்றலுமாம். "செங்கண்மால் சிலைபிடித்துச் சேனையோடும் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்கு"(தேவா).
காதலுடன்....அந்நகரில் இனிது மேவி, நளிர்வேலைக் கரையின் நயந்திருந்தார் என்றது - மால் பூசித்துப் பழிநீங்கிய பதியாதலால், மன்னவன் பொருட்டு அங்குச் சில நாட்கள் தங்கியருளினர் என்பதாம்; தொண்டர்க்கு எல்லாம் பாண்டிமாதேவியார் - குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல என்ற குறிப்புமிது
கோதில் புகழ் - என்பது பற்றி முன் உரைக்கப்பட்டது; கடைப்பிடிக்க.
குறைவறுத்தல் - உலகியலில் வேண்டிய உணவு உறையுள் முதலியன எல்லாம் குறைவின்றிப் பெறுவித்து இனிதிருக்கச் செய்தல். பாண்டிமாதேவியார் - மாதேவியாராதலின் இல்லறநெறியில் மன்னனைச் சார்ந்தோர்க்குக் குறைவறுத்தல் அம்மையார் கடனாயிற்று; குலச்சிறையார் மந்திரியாராதலின் மன்னவன் பணி செய்தல் அவர் கடனாயிற்று.
திருத்தொண்டரானார்க் கெல்லாம் - என்றது இங்குக் குறைவறுத்துப் போற்றப்பட்டவர் சிவபெருமான் தொண்டர்கள் என்ற நிலை குறிக்கப்பட்டது. இதுவே பதிபுண்ணியமாயும், இங்குப் பிள்ளையாருடன் நின்ற தன்மைக்கு ஏற்றதாயும் உள்ளமையின் என்க. அரசன் கடமையாகிய ஏனைய உலகரைப் பாதுகாக்கும் பசுபுண்ணியம் வேறாதலின் இவ்வாறு தொண்டரானார்க்கு என்று பிரித்துக் கூறினார். ஆனார் - பிள்ளையாரது திருவருளால் அந்நாட்டிற் சைவம் பெருக நீறிட்டுத் தொண்டராயினாரும் அடங்க என்ற குறிப்பும் தருவது. "பரமனடியா ரானார்க ளெல்லா மெய்தி யுண்கவென"(1524) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
நளிர்வேலைக்கரை - கடற்காற்றுக் குளிர்வீசும் கரை.
நயந்திருந்தார் - மன்னவன் பொருட்டந்நகரின் விரும்பி எழுந்தருளிய தன்றியும், ஈழநாட்டுத் தலங்களைப்பாடி அந்நாட்டினரையும் வழிப்படுத்தி உய்யச்செய்யும் கருணை நோக்கமும் காரணமாம் என்பது மேல்வரும் பாட்டின் குறிப்பாதல் காண்க. ஈழநாடும் பாண்டிநாடு போலவே புறச்சமயிகளாகிய புத்தர் சார்பினால் அலைப்புண்டு வருந்தியமை திருவாதவூரடிகள் வரலாற்றினாலும் அந்நாட்டுச் சரிதங்களாலும் அறியக்கிடத்தல் கருதுக.