பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று மங்கையருக் கரசியார் தாமுந் தென்னர் மன்னவனு மந்திரியார் தாமுங் கூட அங்கவர்தந் திருப்பாதம் பிரியலாற்றா துடன்போக வொருப்படுமவ் வளவு நோக்கி "இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகி லீசர்சிவ நெறி போற்றி யிருப்பீ" ரென்று, | 894 | (இ-ள்) பொங்குபுனல்....பெற்று - பொங்கும் நீர்ப்பெருக்கினை யுடைய காவிரி பாயும் நாடாகிய சோழ நாட்டில் மீண்டு போவதற்குத் திருவுள்ளங் கொள்ளப் பெற்று; மங்கையருக்கரசியாரும்.... நோக்கி - மங்கையர்க்கரசியம்மையாரும் பாண்டியவரசரும் மந்திரியாரும் கூட அவர்தம் திருவடிகளைப் பிரிதலாற்றாதவர்களாய் உடனே போதுதற்கு மனம் துணியும் அந்நிலையினை நோக்கி; இங்கு...என்று - இங்கு நான் சொல்வதனைக் கேட்டு அதன்படி ஒழுக இசைந்தீர்களேயானால் இறைவரது சிவநெறியினைப் பாதுகாத்துக்கொண்டு இருப்பீர்களாக என்று கூறி, (வி-ரை) பொருபுனல் - செழித்து அலைத்து மேன்மேல் வரும் நீர்; காவிரி நாடு - சோழ நாடு. மீண்டு போதுதற்குத் திருவுள்ளமாகப் பெற்று - திரும்பிப்போக மனங்கொண்டு; பெற்று - திருவருட் குறிப்புத் தரப்பெற்று என்ற குறிப்புடன் நின்றது. போற்றும் - என்பது பாடமாயின், திருவுள்ளமாகவே முன்சொன்னவாறு தம்மைப் போற்றும் மங்கையர்க்கரசியாரும் எனத் தொடர்ந்து பொருள்கொள்க. பெற்று - நோக்கி - என்று - அருளிச்செய்த பின்பு - என்று மேல்வரும் பாட்டுடன் இயைத்துக் கொள்க. ஒருப்படுதல் - இசைதல்; அங்கு - உடன் போக என்க. அங்கு - அக் காவிரி நாட்டில். கூட - பிள்ளையாரைச் சூழம் அடியார் கூட்டத்துடன் கூட. அவ்வளவு - அந்த நிலையினை; அவ்வளவாவது தங்களுடைய நாட்டினையும் அரசாங்கத்தையும் விட்டுப் பிள்ளையாரைப் பின்பற்றிச் சென்று வாழ்தலே உறுதிப்பயனாம் என்று முடித்து அவ்வாறே கூடச் சென்றுவிடத் துணியும் அந்த அன்புமுற்றிய நிலை. "முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்...தலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே" (தாண்) என்ற திருவாக்கின் கருத்தாகிய நிலையினை ஈண்டு வைத்துக் காண்க; சேரமான் பெருமாணாயனார் அழைக்கச் சேரநாட்டுக்கு எழுந்தருளி அவருடனே பலநாள் தங்கிய நம்பிகள் மீளத் திருவாரூருக்கு எழுந்தருள வழிக்கொள்ளும்போது, பெருமாள் "பிரிவாற்றால் பின்செல்வார்"(157); "உமது பிரிவாற்றேன் என்செய்கேன் யானென்ன"(158) உரை செய்வதும், அதற்கு நம்பிகள் "ஒன்றுநீர் வருந்தாதே யுமதுபதியின்கணிருந், தன்றினார் முனைமுருக்கி யரசாள்வீர்" என மொழிந்து தேற்றியவழி, அருட்சேரர் "பாரோடு விசும்பாட்சி யெனக்குமது பாதமலர்"(159) எனக் கூறுவதும்(கழறிற். புரா) ஆகிய வரலாறுகள் இங்குச் சிந்திக்கத்தக்கன. "மண்ணாள்வான் மதித்துமிரேன்" - "போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்" (திருவா) என்பன முதலாகிய திருவாக்குக்களிற் குறித்த அன்பு நிலைகளையும் காண்க. இங்கு நான் மொழிந்ததனுக் கிசைந்தீராகில் - தமது மொழியினையே அவர்கள் மறாதவண்ணம் ஆணையாகக் கூறியபடி. இங்கு - இவ்விடத்து; இந்நிலையில். ஈசர் சிவநெறி போற்றியிருப்பீர் - சிவநெறி போற்றியிருத்தலே அரசாட்சியின் கடமையும், அன்பு நெறியும், தமது திருவுள்ளத்துக் கிசைந்ததுமாம் என்றபடி. போற்றுதல் - காப்பாற்றுதல். முன்போல மயங்கி நெகிழவிடாது கைப்பிடியாகக்கொண்டு போற்றுவீர் என்ற குறிப்பும் காண்க. இருப்பீர் - இருப்பீராக என விதித்தற் பொருளில் வந்த முன்னிலை வினைமுற்று. |
|
|