பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும் பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயி றோறும் பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று, கன்னிமதிற் றிருக்களரும் போற்றிக் கண்டங் கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க் கரையணிந்தார் முந்நூன் மார்பர். | 896 | (இ-ள்) பொன்னி...புகுந்து - காவிரி வளஞ்செய்யும் சோழநாட்டிலே புகுந்து; மிக்க...சென்று - மிகுந்த ஒப்பற்ற சிறப்புக்களையுடைய திருத்தொண்டர் கூட்டத்துடனே பாம்புகளைப் பூணாக அணிந்த இறைவரது திருக்கோயில்கள் தோறும் அன்பர்களுடனே அவ்வப்பதியி லுள்ளோர்களும் எதிர்கொண்டு போற்றச் சென்று; கன்னிமதில்....பாடி - பகைவரால் கட்டழிக்கப்படாத மதிலின் சிறப்புடைய திகுக்களர் என்ற பதியினையும் துதித்துப் பின்பு, கழுத்தில் விடமணிந்த இறைவரது பாதாளீச்சுரத்தினையும் பாடிப் பணிந்து; முன் அணைந்த...மார்பர் - முன்னே வழிபட்டுச் சென்ற பிற பதிகளையும் வணங்கித் துதித்து முந்நூலணிந்த மார்பினையுடைய பிள்ளையார் முள்ளிவாய்க்கரையினை அணைந்தருளினர்.இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை) பொன்னி வளந்தரு நாடு புக்கு - சோழ நாட்டினுள்ளே புகுந்து. திருமணமேற்குடியின் வடக்கில் 4 நாழிகை அளவில் உள்ள வெள்ளாற்றினைக் கடந்தால் சோழநாட்டினுள் அடையலாம். வெள்ளாறு அக்காலத்தில் பாண்டி நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் எல்லையாக இருந்ததென்பது நாட்டுச் சரிதத்தால் அறியப்படும். இந்நாளில் மணமேற்குடி சோழநாட்டில் தஞ்சாவூர் சில்லாவைச் சார்ந்ததாகியுள்ளது. பொருவில் சீர் - ஒப்பற்ற சிறப்பாவது பிள்ளையாருட னணைந்த சிறப்பும், அது காரணமாகப் பின்னர்ச் சிவ-னுலகம் பெற்று முத்தி பெறநிற்கும் சிறப்புமாம். கோயில்தோறும் - இவை சோழநாட்டின் தெற்கெல்லையணிமையில் உள்ளன. இவை திருவுசாத்தானம் முதலாயின என்ப. கன்னிமதில் திருக்களர் - இப்பதியில் திருமதில் விசேடச் சிறப்புடையதென்ற குறிப்புப்பெற வைத்ததாம்; தேவாரம் பார்க்க. "நீண்ட மாவய லீண்டு மாமதில்"(தேவா). பாதாளீச்சரம் - பாம்பணிப் பாதாள் - பாமணிப் பாதாள் என வழங்கும்; இராமேச்சுரத்தினின்றும் கடலோரமாக வரும் தனிப் பாதை இதனணிமையில் தெற்கில் 1 1/2 நாழிகையளவில் உள்ள மன்னார்குடி வரையும் நேரே வந்து சேர்கின்றது. முன்அணைந்த பதி பிறவும் - வழியிற் கிடைத்தமையால் முன் அணைந்தவைதாமே என விட்டு மேற்செல்லாமல், அவற்றையும் மீளச் சென்று வணங்கினார் என்க; இது முறையும் மரபுமாம். இவை திருப்பூவனூர், திருவெண்ணியூர், திருஇரும்பூளை முதலாயின என்பது கருதப்படும். முள்ளிவாய்க்கரை - இஃது இப்போது ஓடம்போக்கியாறு எனவும், முள்ளியாறு எனவும் வழங்கும்; காவிரிக் கிளைநதி. கடுவாய்க்கரை, பழமண்ணிப்படிக் கரை முதலியவை காண்க. இப்பெயர் நதியின் கரையில் அமைந்த ஊர்ப்பெயராதலும் கூடும். இவ்வாற்றின் வடகரையில் அணிமையில் உள்ளது திருக்கொள்ளம் பூதூர். முன்னணைந்து - என்பதும் பாடம். |
|
|