பாடல் எண் :2795
மலைவளர்சந் தனமகிலுந் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
யலைபெருகி யாளியங்கா வண்ண மாறு
பெருகுதலா லத்துறையி லணையு மோடம்
நிலைபுரியு மோடக்கோ னிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின்க ணிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோ னதனைக் கண்டக்
கரையின்க ணெழுந்தருளி நின்ற காலை,
897
(இ-ள்) மலைவளர்...அலைபெருகி - மலையில் வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்தி அலைத்துக்கொண்டு, மலைபோன்ற மலர்க் குவியல்களை வண்டுகள் சத்திக்கச் சுமந்து பெருகி அலைகள் மிகுந்து; ஆள்...பெருகுதலால் - ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகி வருதலால்; அத்துறையில்...நிலையிலாமை - அந்தத் துறையில் அணையும் ஓடத்தை நீரின் நிலைகண்டு செலுத்தும் ஓடக்கோல் நிலைக்கமாட்டாமையால்; நீர் வாழ்நர்...போக - நீர்வாழ் சாதிகளாகிய மக்கள் கரையினிடத்தே நிறுத்திச் சென்று விடவே; கலைபயிலும்....காலை - கலைகள் பயிலும் கவுணியர் தலைவராகிய பிள்ளையார் அதனைப் பார்த்து அந்தக் கரையின்கண்ணே எழுந்தருளி நின்றபோது;
(வி-ரை) மலைவளர் - சந்து - அகில் - தேக்கு - இவை குறிஞ்சிக் கருப்பொருள்கள்; மலையில் விளைவன. இந்த ஆறு மலையினின்றும் பெருகி வருதலையும், நீர் வெள்ளத்தின் மிகுதியினையும் குறிக்க இவற்றை உந்தி என்றார். மலை - ஆற்றின் தொடக்கம்; மலர்ப் பிறங்கல் - குறிஞ்சியின் மலைகளிலும் மருத நாட்டின் வருமுன் இடையில் முல்லைக் காட்டினும் உள்ள பூக்களின் ஈட்டம்; இதனால் ஆறு வரும் வழியும் குறித்தபடி.
உந்தி - சுமந்து - தேக்கு முதலியவை கனத்த பண்டங்களாதலின் அவற்றை உந்தி என்றும், மலர்ப்பிறங்கல் இலகுவாதலின் சுமந்து என்றும் கூறிய கவிநயமும் காண்க.
பொங்கி - இடையில் வரும் நீர்களும் கூடுதல் குறித்தது.
ஆறு - இச்சரிதங் காரணமாக இப்போது ஓடம் போக்கி என வழங்கப்படுகிறது.
ஆள் இயங்காவண்ணம் - பெருகுதல் - இயங்கா - என்றதனால் ஊடே நடக்க இயலாமையே யன்றி ஓடத்தால் இயக்கப்பட்டு ஊடே செலுத்த இயலாமையும் குறித்தது.
நிலைபுரியும் ஓடக் கோல் நிலையிலாமை - நிலைபுரிதல் - நீரின் ஆழமும், வேகமும், செல்லும் திசையும், துறையும், பிறவும் கண்டு ஊன்றி ஓடத்தை ஒழுங்குபடச் செலுத்துதல். நிலை - இவை ஓடம் போக்கும் கலைக்கு வேண்டுவனவாகிய பகுதி யெல்லாம் குறித்தது. நிலைபுரியும் ஓடக்கோல் - இவை எல்லாவற்றையும் செய்தற்குக் கோல் ஒன்றே துணையாக உள்ளது என்றபடி; வாளின் போர் வெற்றிக்கு வாளும், வில்லின் போருக்கு வில்லும் போல, நீர்ப்பெருக்கில் ஆற்றில் ஓடம்போக்கும் நீர்பொரும் போர்க்கு ஓடக்கோலே படையாம் என்பது.
நிலையிலாமை - ஓடக்கோல் நீரின் அடிப்புறத்துத் தரையில் ஊன்றுதல் பெறாதாயின் ஓடத்தை எவ்வாற்றானும் உந்துதல் இயலாமை குறித்தது.
நீர் வாழ்நர் - நீரில் ஓடம் போக்கி அதனால் வரும் ஊதியங்கொண்டு வாழும் அத்துறை மாக்கள்.
நிறுத்தி - ஓடத்தை வெள்ளங் கொண்டுசெல்லாமல் கரையில் தறிகளில் அணைத்துக் கட்டி; "கட்டவிழ்த்து" (2795) என மேற்கூறுதல் காண்க. கலைபயிலும் - கலைகளாற் பயிலப் பெறும் புகழினையுடைய; "கலை மலிந்த சீர் நம்பி" (தேவா).அக்கரையின் - அந்த ஆற்றின் தென்கரை; அகரம். "முள்ளிவாய்க் கரையணைந்தார்" (2793) என்று முன்கூறிய அந்த என முன்னறிசுட்டு.எத்துறையும் - நிலையிலாமல் - என்பனவும் பாடங்கள்;