தேவர்பிரா னமர்ந்ததிருக் கொள்ளம் பூதூ ரெதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று மேவுதலா லோடங்கள் விடுவா ரின்றி யொழிந்திடவு மிக்கதோர் விரைவாற் சண்பைக் காவலனா ரோடத்தின் கட்ட விழ்த்துக் கண்ணுதலான் றிருத்தொண்டர் தம்மை யேற்றி நாவலமே கோலாக வதன்மே னின்று நம்பர்தமைக் "கொட்ட"மென நவின்று பாட, | 898 | (இ-ள்) தேவர்பிரான்....தோன்ற - தேவர்பெருமானது திருக்கொள்ளம் பூதூர் எதிரிலே தோன்ற அதனைக் கண்டு; திருவுள்ளம் பணியச் சென்று மேவுதலால் - அதன்கட் சென்று பணிவதற்குத் திருவுள்ளம் பொருந்துதலினாலே; ஓடங்கள்...ஒழிந்திடவும் - ஓடங்களைச் செலுத்துவோர்கள் அங்கில்லாமல் போகவும்; மிக்கதோர் ...கட்டவிழ்த்து - மிகுந்ததொரு வேகத்தினாலே சீகாழித் தலைவராகிய பிள்ளையார் ஓடத்தினைக் கட்டியிருந்த கயிற்றினைக் கட்டு அவிழ்த்து; கண்ணுதலான்....ஏற்றி - நெற்றிக்கண்ணராகிய இறைவரது திருத்தொண்டர்களை அவ்வோடத்தின்மேல் ஏற்றி - நெற்றிக்கண்ணராகிய இறைவரது திருத்தொண்டர்களை அவ்வோடத்தின்மேல் ஏறச் செய்து; நாவலமே...பாட - தமது நாவின் வல்லமையே கோலாகக்கொண்டு அவ்வோடத்தின்மேல்நின்று நம்பரைக் "கொட்டமே" என்று தொடங்கும் பதிகத்தைப் பாட, இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை) எதிர் தோன்ற - எதிர்க்கரையில் கட்புலப்பட. சென்று பணியத் திருவுள்ளம் மேவுதலால் - என்க. ஒரு திருக்கோயில் கண்ணுக்குத் தோன்றியவுடன் அங்குச் சென்று அதனைப் பணியும்படி உள்ளங்கொள்ளுதல் முன்னைத் தவத்தானாகிய மனநிலை பக்குவமுடையார்க்கே நிகழ்வதாம். "காவேரித் தென்கரைபோய்க் கோயில் பல சென்றிறைஞ்சி"க் கண்டியூர் பணிந்த (கழறிற். புரா - 130, நம்பிகளும் கழறிற்றறிவார் நாயனாரும் "வடகரையிற் றிருவையா றெதிர்தோன்ற மலர்க்கரங்க ளுடலுருக வுள்ளுருக வுச்சியின்மேற் குவித்தருளிக் கடல் பரந்ததெனப் பெருகுங் காவிரியைக் கடந்தேறித், தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்"(கழறிற். புரா - 131); "திரு ஐயா றிறைஞ்ச மனமுருகி, நையா நின்ற திவ்வாறு கடந்து பணிவோ நாமென்ன" (கழறிற். புரா - 132) என்று வரும் மனநிலைகளும், "நாணனே தோன்றுங் குன்றி னண்ணுவே மென்ன"த்(745) திண்ணனார்க்கு நிகழ்ந்த மனநிலையும் ஆகியவற்றின் பரிபக்குவநிலைகளின் உள்ளுறை ஈண்டுச் சிந்திக்கத் தக்கன; இம்மூன்றிடங்களினும் உலக ஆறுகள் இறைவரைச் சாரும் ஆர்வத்தின் படிச் சாரவொட்டாது குறுக்கிடுதலும் அன்பினாறேவென்று இறைவர் சார்பு நிகழ்தலும் குறிக்க; "வேறு நாவா யோடங்கண் மீது செல்லா வகைமிகைப்ப...நிருத்தர் பாதம்பணிந் தன்பினாறு நெறியாச் செலவுரியார்"(கழறி. புரா - 133) என்று இதன் உள்ளுறை விளக்கப்படுதலும் காண்க;- இவ்வாறு சிவாலயத்திலும் திருவேடத்திலும் கண்டபோதே அன்பும் ஆர்வமும் மிகுதல பக்குவம்பற்றி நிகழுமென்பதும், அவையே பக்குவத்தின் அறிகுறியாமென்பதும், "நல்வினைக்கண், எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு, செல்காலம் பின்னரகஞ் சேராமே-நல்லநெறி, எய்துவதோர் காலந்தன்னன்பரைக்கண் டின்புறுதல், உய்யு நெறிசிறிதே யுண்டாக்கி" என்ற போற்றிப் பஃறொடை(55 - 56) யானு மறிக. ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் - உம்மை சிறப்பும்மை. இடையூறுகள் பெருகி வரும்போது மேலும் ஆர்வம் மிகுதல் பக்குவத்தின் விளைவு. ஓடத்தின் கட்டு - நீர்ப்பெருக்கு ஈர்த்துச் செல்லாது ஓடத்தினைக் கரையிலே தறியில் அணைத்துக் கட்டுதல் வழக்கு. நாவலமே கோலாக - கோல் - ஊன்றி ஓடத்தைச் செலுத்தும் ஓடக்கோல்; நாவலம் - நாவின் வல்லமையாகிய சத்தி; (நா - கோலாக, வல்லமை - அக்கோலை ஊன்றி இயக்கும் சத்தியாக.) அதன்மேல் நின்று - அவ்வோடத்தின் மேலே தாமும் ஏறி நின்று. இரட்டுற மொழிதலால் அவ்வல்லமையினை மேல் கொண்டு என்ற குறிப்புமாம். நம்பர் - எக்காலத்தும் நம்பியடைதற்குரியராய்க் கைவிடாது உள்ளேநின் றுதவுபவர். மேற்பாட்டிலும் நம்பரவர் (2797) என்ற கருத்துமிது. "நம்பனை உள்க" என்று தொடங்கி "நல்குமாறருள் நம்பனே!" என்று மகுடஞ் சூட்டிப் பதிகம் அருளிய பிள்ளையாரது திருவுளத்தின் குறிப்பினை எடுத்துக்காட்டி வற்புறுத்தியபடி. "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" (சிவஞானபோதம் - 10 - 2 - வெண்) என்றபடி எவ்விடத்தும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதாம். கொட்டம் - "கொட்டமே கமழும்" என்று தொடங்கும் பதிகத்தின் முதற் குறிப்பு. நவின்று பாட - நம்பரை நவின்று கொட்டம் எனப் பதிகம் பாட என்க; பொருளும் சொல்லும் குறித்தபடியாம். |
|
|