சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து சிவபெருமான் றனைப்பரவிச் செல்லும் போது சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலுமற் றதுவறிந்த சைவ ரெல்லாம் ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை யளவிறந்த பல்லியங்கண் முழக்கி யார்த்துப் பார்குலவு தளிக்காளஞ் சின்ன மெல்லாம் "பரசமய கோளரிவந் தா"னென் றூத. | 904 | (இ-ள்) சீர்நிலவு...போது - சிறப்புக்கள் நிலவியுள்ள திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமானைத் துதித்து மேலே செல்லும்போது; சார்வறியா....சார்தலும் - நற்சார்புணராத சாக்கியர்கள் தங்கும் போதிமங்கை என்ற ஊர் அணியதாக வருதலும்; மற்றது....ஊத - மற்றச் செய்தியை அறிந்த சைவர்கள் எல்லாரும், கடல் கிளர்ந்ததுபோலச் சங்கு-தாரை முதலிய அனவில்லாத பல இயங்களையும் முழக்கி ஒலித்து உலகு விளங்கும்படி எக்காளங்கள் திருச்சின்னங்கள் எல்லாவற்றையும் "பரசமய கோளரி வந்தான்" என்று ஊத; (வி-ரை) சீர்நிலவு திருத்தெளிச்சேரி - சீர்நிலவுதலாவது சமண வாதமும் நிராகரிப்பும் அதன் மூலம் சைவ ஆக்கமும் திருவாலவாயில் நிகழ்ந்த சிறப்புப் போலப், புத்த வாதமும் நிராகரிப்பும் திருநீற்றின் ஆக்கமும் அடுத்து நிகழ்தற்கு அணிமை காட்டிய சிறப்பினால் நிலைபெறுதல். செல்லும் என்றது மேலே செல்லுதல் குறித்தது. சார்வு அறியா - சார்வாவது தாம் சார்தற்குரிய நற்சார்பு குறித்த நின்றது. "சார்புணர்ந்து சார்பு கெட"(குறள்). போதிமங்கை - இது புத்தர்கள் நிறைந்த ஊராயிருந்தது. இப்போது சிவதலங்களுள் ஒன்றாயிருக்கின்றது. இது திருத்தெளிச்சேரியினின்றும் வடக்கில் காரைக்கால் தரங்கம்பாடி கற்சாலையில் ஒரு நாழிகையளவில் உள்ளது. சார்தலும் - சென்று வழியிற் சேரக் கிடைத்தலும். சைவர் - சிவசம்பந்த ஒழுக்கத்துள்ளே திளைத்து வாழ்பவர் என்றது குறிப்பு. ஆர்கலியின் கிளர்ச்சி - கடல் பொங்கியெழும் முழக்கம்; ஆர்கலி - கடல். சங்கு தாரை அளவிறந்த பல்லியம் - முதலாகிய எண்ணிறந்த பல இயங்கள்; அளவிறந்த என்றது தொகைப் பெருக்கினையும், பல் என்றது வகையின் பன்மையினையும் குறித்தன. சைவர் எல்லாம் முழக்கி ஆர்த்து - சின்னம் எல்லாவற்றையும் - ஊத என்று முடிக்க. முழக்குதல் - ஒலித்தல்; ஊதுதல் - பொருள் புலப்பட ஒலித்து மொழிதல்; ஆதலின் வேறுபிரித்துக் கூறினார். தனிக்காளம் - சின்னம் - எல்லாம் - இவை இறைவரால் அருளப்பட்ட முத்துக்காளம், திருச்சின்னம் என்பவை. காளம் - எக்காளம்; சின்னம் - திருச்சின்னம் என்பர்; எல்லாம் - பலவும் ஒன்றுபோலவே. பரசமய கோளரி - கோளரி - சிங்கம். கோளரி என்றதனால் பரசமயமாகிய மதயானைகளுக்கு என்று உரைகொள்க; ஏகதேச உருவகம். முன்னர்ச் சமணரை வெற்றி கொண்டதும், இனி இங்குப் புத்தரை வென்றொழிக்க நின்றதுமாகிய நிலைகள் குறித்தது. கொள்கைகளை நிலையழிப்பவர் என்பது குறிப்பு. சைவர் எல்லாம் - முழக்கி ஆர்த்து - ஊத - இவ்வாறு சைவர்கள் புறச்சமயத்தவரை மனம் புண்ணாக்கவும் அன்றி வாதுக்கிழுக்கவும் கூடிய செயல்களைச் செய்தல் தகுதியாமோ? எனின், அற்றன்று; அவ்வாறு செய்யும் எண்ணம் சைவர்க்கு இல்லை என்க; புல்லியோர் மேலோர்போலக் கிளம்பும்காலையில் அவர்களது மீக்கூர்ந்த அக்கிரமமாகிய செயல்களை அழித்து உலகரை அறிவுறுத்தி அவர்களை அவ்வவர்க்கேற்ற நிலையில் நிறுத்துதல் உலக நிலைபேற்றுக்கு உள்ள செயலாம்; சைவத்துக்குப் புத்த சமணர்களால் விளைந்த தீச்செயல்கள் பல. அவற்றை நீக்கிச் சைவ ஆக்கத்தினைத் தேடுதல் சைவர்க்கு உள்ள செயலேயன்றித் தகாதென்று சொல்லுதல் யாங்ஙனம்? இனித் தமது ஆற்றல் உணராதாரிடத்தில் அதனை வேண்டும்போது வற்புறுத்துதலும் தக்கதே என்பர் புலவாணர்; மேலும், எவர்க்கும் பொதுவாகிய ஊர்வழியே செல்வோர்க்குத் தமதிச்சைவழிக் குற்றமற்றவைகளைச் சொல்லுதலுக்கும் தம் இச்சைவழி செல்லுதலுக்கும் உரிமையுண்டு; இதனையே இந்நாளில் சுதந்தரம் என்பர். இனி, இவ்வுரிமை பாராட்டுமுகத்தால் இந்நாள் "நாகரிக" உலகில் எத்தனை கோரச் செயல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டுகொண்டுமிருப்போர் இவ்வாறு சமயச்சார்பு வருங்கால்மட்டும் பிணங்கி வினாவுதல் என்ன சால்பு என்பதும் சிந்திக்க. ஈண்டுச் சைவர் செய்த முழக்கம் நலமறியாப் புத்தரைத் தெருட்டி நல்வழிப்படுத்தும் உண்மைநூல் விதித்த நோக்கம் கொண்டது. இங்குப் பயனும் அவ்வாறே விளைவதனையும் கருதுக. புத்தர்கள் நற்சார்புணர்ந்து உய்யும்படி திருவருள் விளைவாமிது என்பதும் கருதத்தக்கது. |
|
|