"வருமிடத்தி லழகிதா நமக்கு வாதில் மற்றிவர்தம் பொருணிலைமை மறாத வண்ணம் பொருமிடத்தி லறிகின்றோம் புத்த நந்தி பொய்ம்மேற்கோ" ளெனப்புகலி வேந்தர் கூற வருமுறைசொற் றிருப்பதிக மெழுது மன்ப ராளுடைய பிள்ளையார் திருவாக் காலே "உருமிடித்து விழப்புத்த னுத்த மாங்க முருண்டுவீழ்" கெனப்பொறா வுரைமுன் விட்டார். | 908 | (இ-ள்) வருமிடத்தில் அழகு இதுஆம் - வருகின்ற இடத்திலே இது மாறு கோளாவதன்றி நமக்கு அழகேயாம்; மற்றிவர்தம்....கூற - மாறுகொண்ட இவர்களது பொருள் நிச்சயம் மறுக்க முடியாதபடி, பொருகின்ற இடத்தில் புத்தநந்தியின் பொய்யினை மேற்கொண்டு வரும் கொள்கையின் நிலையினை உள்ளபடி காட்டுவோம் என்று புகலி காவலராகிய பிள்ளையார் சொல்ல; அருமுறை....விட்டார் - அரிய திருமுறைகளாகிய சொற்றிருப் பதிகங்களை எழுதும் நியதியுடைய ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கின் ஆணையாலே "புத்தநந்தியினது தலையானது இடி வீழ்தலினால் உருண்டு வீழக் கடவது" என்று பொறுக்கமாட்டாத சொல்லை முன்னே சொல்லி விட்டனர். (வி-ரை) வருமிடத்தில் நமக்கு இது அழகாம் - என்க. அழகு - வெகுளலும் வெறுத்தலுமின்றி அழகிதாகக் கொள்ளத்தக்கதொன் றென்றதாம்; வருமிடம் - நாம் சென்று தேடாது, செல்லும் வழியிலே. இடையிட்ட இது, திருவருளால் வந்ததென்பதும், திருவருள் எவ்வழியானும் செலுத்துவன வெல்லாம் நன்மையே என்பதும் குறிப்பு. அழகு - நியதியின் அமைதி: மற்று இவர்தம் பொருள் நிலைமை - மாறுபட்டு எழுந்து கூறும் இவர்கொள்ளும் பொருள் நிச்சயத்தின் தன்மை. மறாத வண்ணம் - அவர்கள்தாமும் வேறு மாறுபட்டுப் பேசும் பேச்சின்றி ஒப்பும்படி; வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்"(2822); மேலும் நமது திறங்களை மறுத்து எழாதவண்ணம் என்றலுமாம். பொய் மேற்கோள் - பொருள் நிலைமை - மறாத வண்ணம் - அறிகின்றோம் - என்று கூட்டுக. அறிகின்றோம் - காண்கின்றோம் - அவர்கள் கொண்ட பொருள் நிச்சயம் பொருளன்றாம்படியினை வெளிப்படுத்துமாறு கண்டு காட்டுகின்றோம் என்றதாம். அருமுறைசொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் - அரிய முறையாகிப் பிள்ளையார் சொல்லும் திருப்பதிகங்களை அவ்வப்போதே உடனிருந்து எழுதிக்கொண்டும் அத்திருமுறைச் சுவடியினை ஏந்திக்கொண்டும் வரும் அன்பர். இவர் சம்பந்த சரணாலயர் எனப் பெயர் பூண்டவர் என்றும் இவர் பிள்ளையாரது நல்லம்மானாவர் என்றும் கூறுவர். இவ்வாறு பிள்ளையாரது பதிகங்கள் அவ்வப்போது உடனிருந்து எழுதிவரப்பட்டன என்பதும், அத்திருமுறை பிள்ளையாருடனே எழுந்தருளச் செய்து உடன் கொண்டு வரப்பெற்றன என்பதும், முன் "திருப்பதிக நன்முறையினை"(2679) என்றவிடத்துக் குறிக்கப்பட்டன. வருமுறை என்று பாடங்கொள்ளின் அருளின்வழி வரும் என்க. பிள்ளையார் திருவாக்காலே - உரை முன் விட்டார் - திருவாக்கினையே ஆணையாகக் கொண்டு படையாக முன் விடுத்தனர். விட்டார் - அம்பு விடுதல் போல என்க. உரை - உரையாகிய "அத்திரம்" என்பதாம்; பொறா உரை - புத்தர் கூறிய சைவ நிந்தையும் அடியார் நிந்தையும் மறைக ணிந்தனையும் பொறுக்கலாற்றாமையாலே அவ்வாறு வெவ்விய உரை விடுத்தனர் என்பது. கருணை கொண்ட அன்பர் கொடியவுரை விடுத்தற்குப் புத்தர் செய்த சிவாபசாரமே காரணம் என்றபடி. உத்தமாங்கம் - உடம்பில் உயர்ந்த அங்கமாகிய தலை. பிள்ளையார் திருவாக்கு - இது "புத்தர் சமண்கழுக் கையர்" (பஞ்சாக்கரப் பதிகம் - 10) என்ற திருப்பாட்டு என்ப. அதனுள் "வித்தக நீறணிவார் வினைப் பகைக், கத்திர மாவன வஞ்செ ழுத்துமே" என்ற பகுதி அத்திரத்தை அடக்கி நிற்றல் காண்க. "அத்திரவாக் கதனால்"(2808). "உரும் இடித்து விழ - உத்தமாங்கம் உருண்டு வீழ்க" என - உரும் - இடி; விழ வீழ்க - விழுதலினால் தலை அறுபட்டுக் கீழே விழுக. சிவாபராதமானது இவ்வாறு தண்டித்துத் தூய்மை செய்யற்பாலதென்பது வீரபத்திரக் கடவுள் செய்த தக்கயாக சங்காரநிகழ்ச்சிகளுள் சிவநிந்தை செய்த தக்கனது தலை அறுபட்ட வரலாற்றானும், அதனைத் "தூய்மைகள் செய்தவா" (திருவா - தோணோ - 11) என்று மணிவாசகப் பெருமானார் போற்றியருளிய தனானும் காண்க. சிவனுக்குச் சாத்தும் பூவைச் சிதறிய பிழைக்காக யானையையும், அதனை விலக்காத குற்றத்துக்காகப் பாகர் ஐவரையும் கொன்றுநின்ற எறிபத்தரை, அன்பர் என்று கண்டபோது "அன்பராங் குணத்தின் மிக்கார், பிழைபடி னன்றிக் கொல்லார், பிழைத்ததுண் டென்றுட் கொண்டு"(587) புகழ்ச்சோழர் போற்றிச் செயல் செய்தமையும் இங்குக் கருதத்தக்கது. சமயநீதியேனும், உலகநீதியேனும் அல்லது வேறெந்த நீதியேனும் ஒன்றும் பற்றாது மண்ணாசையாகிய பேயினாற் கோட்பட்டுக் கோடிக்கணக்கான மக்களையும், பிறவுயிர்களையும் கொல்லும் "நாகரிக"! உலகத்தை வாழ்வாக எண்ணும் மாக்கள் இவ்வுண்மைகளைத் தெளிந்து இவ்வரலாறுகள்பற்றித் தாம் செய்யும், சிவநிந்தை முதலிய பிதற்றல்களை விட்டு உய்திபெற முயல்வார்களாயின், நலம் தரும். அருமறைச்சொல் - என்பதும் பாடம். |
|
|