பாடல் எண் :2808
மற்றவர்க ணிலைமையையும் புத்தநந்தி
வாக்கின்போ ரேற்றவன்றன் றலையு மெய்யும்
அற்றுவிழ வத்திரவாக் கதனா லன்பர்
அறுத்ததுவுங் கண்டவர னடியா ரெல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செய, "வெதிர்ந்த விலக்கு நீங்க
வுற்றவிதி யதுவேயா; மர!வென் றெல்லா
மோது"கென, வவ்வொலிவா னுற்ற தன்றே.
910
(இ-ள்) மற்றவர்கணிலைமையையும் - மற்ற அந்தப் புத்தர்களது நிலைமையினையும்; புத்தநந்தி...அறுத்ததுவும் - வாக்கினாற் போர் செய்ய மேற்கொண்டு வந்த புத்தநந்தியின் தலையும் உடம்பும் வேறாக அறுபட்டு விழும்படி அத்திர வாக்கினாலே அன்பர் அறுத்த செயலினையும்; கண்ட...விண்ணப்பஞ் செய - பார்த்த சிவனடியார்கள் எல்லாம் அவ்வெற்றியைத் தரும் பிள்ளையாருக்குச் சென்று விண்ணப்பிக்க; எதிர்ந்த...ஓதுகென - எதிர்ப்பட்ட இறையூறு நீங்கும்படி பொருந்திய இறைவரது அருள் விதியே அதுவாகும்; ஆதலால் சிவனை வழுத்தி அர! அர! என்று எல்லாரும் சிவநாமமோதி முழக்கம் செய்க என்று பிள்ளையார் கூறியருள எல்லாம் அர என்றோதினர்; அவ்வொலி வானுற்றதன்றே - அவ்வாணையின்படி அவர்கள் முழக்கிய சிவநாம ஒலி வானத்திற் சென்று பொருந்திற்று அப்பொழுதே.
(வி-ரை) மற்று அவர்கள் - மாறுபட்டு வந்த அப்புத்தர்.
வாக்கின் போர் ஏற்றவனாகிய புத்தநந்தி என்க. வாக்கின் போர் - வேறு, படை முதலியவற்றாலன்றி வாக்கினாற் செய்யும் வாதமாகிய போர்.
அன்பர் அத்திர வாக்கதனால் - அறுத்ததுவும் என்க. அத்திர வாக்கு - "அத்திரமாவன" என்ற பதிக மந்திரம். வாக்கதனால் அறுத்தலாவது வாக்கில் கூறப்பட்ட சிவனது அத்திரமாகிய மந்திரமே படையாகக் கொண்டு. "காழி மாநகர்க் கவுணியர் கடவுள், ஞான மாகிய நற்பதி கங்கள், எழுதுறு மன்பர்தம் மின்புறு மொழியாற், களிறென வந்த கன்மனப் புத்தன், முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி, வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே" (சங்கற்பநிராகரணம்) என்றதும் கருதுக.
பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பஞ் செய - அன்பர் வாக்கினால் இடி வீழ்ந்து புத்தநந்தி தலையறுபட்ட இடம், பிள்ளையாரது எழுச்சியின் முன்னணி; ஆண்டு ஊதிச் செல்லும் மெய்த்தவிறற் சின்னங்களையே முன்வந்து புத்தநந்தி விலக்கினானாதலின்(2805); பிள்ளையார் எழுந்தருளி வரும் சிவிகை, எழுச்சியின் பின்னணியில் நின்றதாதலின் இங்குநின்றும் அவ்விடத்துக்குச் சென்று விண்ணப்பித்தனர். "புத்தன் கூறும் பொய்மேற்கோளின் பொருணிலைமையினைப் பொருமிடத்தி லறிகின்றோம்" (2806) என்று பிள்ளையார் அருளினாரன்றி வேறு கூறிற்றிலர். ஆதலின் அன்பர் அத்திரவாக்கினால் இடி வீழ்ந்து புத்தன் பட்ட செயல் தொண்டர்கள் சென்று அவர்க்கு விண்ணப்பிக்க நின்றது.
"எதிர்ந்த....ஓதுக" என - "புத்தன் மொழியினைப் பொருமிடத்தி லறிகின்றோம்" என்ற பிள்ளையார், தாமும் எண்ணாத வகையாலே இடி வீழ்ந்து புத்தனிறந்ததனைக் கேட்டபோது இது சிவச்செயலால் உள்ள விதியே என்று கொண்டு சிவனை வழுத்துக என்றருளினார்.
எதிர்ந்த விலக்கு - செல்லும் இடைவழியில் தானே வந்து எதிர்ந்து மேற்செல்கையை விலக்கிய இடையூறு; விலக்கு - முன் செல்கையை விலக்கும் செயல். உற்ற விதி - "நினையாது முன்வந்து நின்று" பொருந்திய சிவன் விதியாகிய நியதி.
விலக்கு நீங்க உள்ள விதி அதுவேயாம் - மேற்கூறியபடி இவ்விடத்துச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட நியதியும் அதுவே என்ற குறிப்புமாம்.
அர என்று எல்லாம் ஓதுக - சிவனருள் வெளிப்பட்டபோதெல்லாம் சிவநாமங் கூறி முழக்கி வாழ்த்துதல் சைவ மரபு.
அவ்வொலி - அவ்வாறு ஆணைப்படி ஓதப்பட்ட அரநாம முழக்கமாகிய ஒலி; எல்லாம் அரவென்றோதினார் என்பது இசையெச்சம்.
வான் உற்றது அலை ஒலிப் பரம்பரையால் ஆகாயம் நிறைய எழுந்து சென்றது.
இதுவேயாம் - என்பதும் பாடம்.