அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த வடலேறு திருவுள்ளத் "தழசி" தென்று மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று, வெண்டரளச் சிவிகையினின் றிழிந்து, வேறோர் சத்திரமண் டபத்தின்மிசை யேறி, நீடு சைவருட னெழுந்தருளி யிருந்து, "சாரும் புத்தர்களை யழைக்க!" வெனத், திருமுன் னின்றார் புலிகா வலரேவல் போற்றிச் சென்றார். | 912 | (இ-ள்) அத்தன்மை....சென்று - அத்தன்மையைக் கேட்டருளிச் சீகாழியி லவதரித்த வலிமையுடைய சிங்கம் போன்ற பிள்ளையார் திருவுள்ளத்தில் இது அழகு என்று கொண்டு மிக மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று; வெண்...இழிந்து - வெள்ளிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி; வேறு...ஏறி - பிறிது ஒரு சத்திரத்தின் மண்டபத்தின்கண் ஏறி; நீ....இருந்து - நீடிய சைவர்களுடனே அமர்ந்து எழுந்தருளி வீற்றிருந்துகொண்டு; சாரும்...என - முன் சொன்னபடி எதிர்ந்து பொருள் பேசச் சார்கின்ற புத்தர்களை அழையுங்கள் என்று கூற; திருமுன்...சென்றார் - திருமுன்பு நின்ற தொண்டர்கள் சீகாழித் தலைவரது ஏவலினைப் போற்றி அவ்வாறு அழைத்தற்குச் சென்றனர். (வி-ரை) அத்தன்மை - அஞ்சி உடைந்து ஓடிய புத்தர்கள் மீண்டு சாரிபுத்தனைத் தலைமைகொண்டு சமய வாதத்தினை மேற்கொண்டு வந்த தன்மை. அடல் ஏறு - மதங்கொண்ட யானை போன்ற புறச்சமயிகளை வெல்லும் தன்மை பற்றிச் சிங்க ஏறு என்று உருவகித்தார்; ஏறு - ஆண்மைப் பொதுப் பெயராகக் கொள்ளினுமாம். "அழகிது" என்று - "அழகிதாம்"(2806) என முன்கூறியதற்கேற்ப மேற்கொண்டவாறு. சத்திர மண்டபம் - வழியில் கண்டதொரு சத்திரத்தின் உள்ள மண்டபம்; வடக்கிருந்து கடற்கரையோரமாகத் தெற்கு இராமேச்சுரம் நோக்கி வரும் அவ்வழியில் யாத்திரிகர்கள் தங்குதற்குரிய பல சத்திரங்கள் முன்னாளிலிருந்தன. இந்நாளில் இருப்புப் பாதைவழிப் பயணமாயினபின் அவை காவலற்றழிந்தன. இங்குப் பிள்ளையார் எழுந்தருளி யிருந்து அவர் முன்பு புத்தவாதம் நிகழ்த்தச் செய்து, சைவத்தாபனம் செய்தருளிய சத்திரம் இடம் ஒன்றும்பட்டில் கர்னபரம்பரை நினைவுகொண்டு காட்டப்படுகிறது. சிவிகையினின் றிழிந்து - மண்டபத்தின் மிசை ஏறி - இழிந்து - ஏறி - என்று கவிநயம்படக் கூறினார். ஏறி - வெற்றிக் குறிப்புப்பட நின்றது. "ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து" (குறள்) என்ற குறிப்பும் காண்க. சத்திரமண்டபத்தின்மிசை ஏறி - இருந்து - அழைக்க என - வாதம் நிகழ்த்திப் பேச ஏற்ற இடமும், பிற வாய்ப்புக்களும் கண்டு செயல் செய்யும் வகை. |
|
|