அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும் பிள்ளையா ரருகணைய நின்ற போதில், எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்த னிருஞ்சிரத்தைப் பொடியாக்கு மெதிரி லன்பர் பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம் போற்றியரு ளாற்சாரி புத்தன் றன்னை "யுங்கடலை வனும்பொருளு முரைக்க!" வென்ன, வுற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான். | 914 | (இ-ள்) /b> அங்கு அணைந்து....போதில் - அவ்விடத்தில் அணைந்து சாரி புத்தன் மண்டபத்திலே புத்தர்களுடனே கூடிப் பிள்ளையாரருகில் அணைய நின்ற போதிலே; எங்கு நிகழ்...அன்பர் - எவ்விடத்தும் ஆணை செலுத்துகின்ற திருச்சின்னத்தைத் தடுத்த புத்தநந்தியின் பெரிய தலையினை அழிவுசெய்த ஒப்பற்ற அன்பராகிய சம்பந்த சரணாலயர்; பொங்கு...போற்றி - மேன்மேல் பெருகும் புகழினையுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது திருவடிகளைத் துதித்து; அருளால் - அவர் அருள் பெற்று(வாதத்திற் புகுவாராகி); சாரிபுத்தன்...என்ன - சாரிபுத்தன் தன்னை நோக்கி "உங்கள் தலைவனாகிய கடவுளையும் அவன் கூறும் பொருளாகிய முத்தியினையும் இன்ன படி எனப் பேசுவாயாக" என்று கூற; உற்ற....உரை செய்கின்றான் - பொருந்திய சமய வாதத்தினை மேற்கொண்டு சொல்கின்றவனாகி; (வி-ரை) அங்கு அணைந்து - சத்திர மண்டபத்தின்கண் சார்ந்து. அருகணைய நின்ற - வாதம் செய்யத் தக்கபடி அருகு சாரநின்ற. அணைய - இனி முடிவில் அவர்பால் திருநீறு பெற்று அன்பர்களாக என்ற குறிப்பும் தருவது. எங்கு நிகழ் - எவ்விடத்தும் எக்காலத்தும் தடையின்றி ஆணை நிகழத்தக்க; சிவனதாணையினை உட்கொண்டு, "ஆணை நமதே" என்று தமது கட்டளையினியிடவல்ல பிள்ளையாரது தடுக்கலாகாப் புகழ் பரவுவதாதலினாலும், முழுமுதல்வராகிய சிவனாற்றரப்பட்டதாதலினாலும் எங்கும் நிகழுந்தன்மை பெற்றது என்க. சிரத்தைப் பொடியாக்கும் அன்பர் - பொடியாக்குதல் - அழித்தல்; வேறுபடுத்துதல் என்ற பொருளில் வந்தது. பொடியாக்கியது இறைவரருளினை உட்கொண்ட பிள்ளையாரது அத்திரவாக்கேயாயினும் அச்செயல் அதனைக் கூறிச் செலுத்திய அன்பர் செயலாகக் கூறியது உபசாரம். பாதம் போற்றி அருளால் - பிள்ளையார் தாமே நேரில் சமய வாதம் செய்தல் மரபன்றாதலின் அவரருளாணை பெற்று அவர் திருமுன்பு அன்பர் தொடங்கிச் செய்தனர் என்க. தலைவனும் பொருளும் உரைக்க - சமய வாதத்தில் பேசி வெற்றிதோல்வி காண உள்ளனவற்றுட் சிறந்த பகுதிகள் இவ்விரண்டுமேயாம். அவை: அவ்வவர் கூறும் கடவுளிலக்கணம், முத்தியிலக்கணம் என்பவை. பொருள் - முடிபாய்க் கூறும் உறுதிப் பொருள்; இவ்வாறு சமய வாதத்தினையும் பொருணிச்சயத்தினையும் அளவறுத்து அமைதிபடத் துணியமாட்டாது சமய நிந்தையே சமய வாதமாமெனப் புறங்கூறிப் போலிச் சமரசம் பேசும் இந்நாள் மாக்கள் இதனைக் குறிக்கொண்டடொழுகுதல் நலந்தருமென்க. உற்ற வாதினை மேற்கொண்டு - தானே தேடி முனைந்து கொண்டமையால் வந்து பொருந்திய அவ்வாதத்தினை ஏற்றுக்கொண்டு - தொடர்ந்துகொண்டு. உரை செய்கின்றானாகி - என்றான் என மேற்பாட்டுடன் முடிக்க. உரை செய்கின்றான் - முற்றெச்சம். |
|
|