கற்பங்க ளனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறுங் கணபங்க வியல்பு தன்னிற் பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய வுற்பவிக்கு மொழிவின்றி யுரைத்த ஞானத் தொழியாத பேரின்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்துய்ய வறமுன் சொன்ன பான்மையான் யாங்கடொழும் பரம" னென்றான். | 915 | (இ-ள்) கற்பங்க ளனைத்தினிலும்...தன்னில் - அளவிறந்தனவாகிய எல்லாக் கற்பங்களினும் அளவிறந்த யோனிகளிற் பிறந்தும் இறந்தும் அக்கதியினின்றும் மாறி வீடு பெறுகின்ற கணபங்க இயல்பு என்ற கொள்கை கூறும் புத்தசமயத்தில்; பொற்புடைய...செய்ய - அழகுடைய தானம் - தவம் - பண்பு மிகுந்த யோகம் என்றும் இவைகளைத் தான் பொருந்தும்படி செய்யவே; உற்பவிக்கும்....ஞானத்து - அதனாலுண்டாகும் நீங்குதலில்லாத நிலையினாற் சொன்ன ஞானத்தால்; ஒழியாத...பெற்றான் - கெடாத பேரின்பந் தரும் கந்தவீடு பெற்றவன்; பற்பலரும்...பான்மையான் - பலப்பலரும் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி உய்யும் பொருட்டு அறங்களை முன்னே சொன்ன அருளுடையவன்; யாங்கள் தொழும் பரமன் என்றான் - அவனே நாங்கள் தொழுகின்ற கடவுளாவான் என்று சொன்னான். (வி-ரை) கற்பங்கள் அனைத்தினிலும் - கற்பங்கள் எல்லாவற்றிலும், கற்பம் - காலக் கூறுபாட்டின் பேரளவு; 432 கோடி ஆண்டுகள் கொண்டது. பிறந்து வீந்து - பிறந்தும் இறந்தும்; வீதல் - இறத்தல். கதி - பிறப்பு வகை; பதவி என்பாருமுண்டு. தாம் செய்த நல்வினை தீவினைகட்கேற்றபடி மக்கட்கதி - தேவகதி - பிரமகதி - நரககதி - விலங்குகதி - பேய்க்கதி - என்ற ஆறனுள் ஒன்றை அடையும் நிலை. கணபங்க இயல்பு - கணபங்கம் என்னும் கொள்கை கூறும் பௌத்த சமயம். கற்பங்கள்....இயல்பு தன்னில் - எல்லாக் கற்பங்களிலும் உயிர்கள் உய்தற்பொருட்டுப் பிறந்தும் இறந்தும் கதிமாறும் கணபங்கம் என்னும் நியாயம் கூறும் பௌத்த சமயக் கொள்கையின்படி. பொற்புடைய...செய்ய - பொற்புடைய என்றதனைப் பின்வரும் தவம் முதலியவற்றோடும் கூட்டுக; ஏகாரங்கள் எண்ணிடைச் சொற்கள். தன்மை புரி - பிற தொடர்பு எல்லாம் நீங்கிப் பொருந்தும் தன்மைகொண்ட. பொருந்தச் செய்ய - தானம் முதலாகக் கூறப்படும் பத்து நற்குண நற்செயல்களில் ஈடுபட்டுச் செய்தலான். செய்ய உற்பவிக்கும் - செய்தலால் தோன்றும்; உண்டாகும். உற்பவம் - பவம் - பிறப்பு - தோற்றம்; உத் - உபசர்க்கம். ஒழியாத பேரின்ப முத்தி - கெடுதலில்லாத பெரிய இன்பம் உடைய முத்தி. முத்தி பெற்றான் - பான்மையான் - (அவன்) பரமன் - என்க. அறம் - தர்மோபதேசம்; அறம் சொன்ன பான்மை - புத்த சரிதம் பார்க்க. இப்பாட்டால் "உங்கள் தலைவனும் - பொருளும் உரைக்க" என்று வினாவிய இரண்டனுள் எங்கள் தலைவன் இவன் என்று தமது கொள்கையின்படி கடவுளிலக்கணம் பற்றிய விடை கூறினான். முன் கூறிய கொள்கைகளின் விவரமாவன:- கணபங்கமாவது - கணந்தோறும் அழிகை; (கணம் - க்ஷணம்.) கணமாவது - நூறுதாமரை இதழ்களை அடுக்கி ஊசியினாற் குத்த அவற்றுள் எட்டு இதழ்கள் அறும் காலஅளவு. கற்பங்களனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறும் - இது புத்த சரிதம் குறித்தது. புத்தன் தன் தாயின் வலது மருங்குலாற் பிறந்து பின் ஆறுநாளின்பின் அவனை உயிர் துறப்பித்து, இவ்வாறு தோன்றுவன். அதன்பின் பல உயிர்களும் பிழைத் துய்யும் பொருட்டு அளவில்லாத எல்லாக் கற்பங்களிலும் அளவிறந்த யோனிகளிலும் புகுந்து பிறந்தும் இறந்தும் பிற உயிர்கட்கு உறுதி செய்து மேல் அக்கதி மாறி வீடு அடைவன் என்பதாம். கணபங்க இயல்பு - ஒருகணத்தில் ஞானமும் ஞேயமுமாகிய பொருள்கள் தீபசந்தானம் போலக் கெட்டு வருதலேயன்றிக் கெட்டுக் குறைந்து வருதலும், கெட்டொழிந்து நிற்பதும், கெட்டுக்கெட்டு வருவதுமென நான்குவகையாய்க் கேட்டையும் என்ற கொள்கை. பொற்புடைய....செய்ய - முன்சொன்னபடி பிறந்த புத்தன் அளவில்லாத நல்ல தானம் முதலிய சீலங்களுடையவனாயும் யோகியாயுமிருக்க. ஒழிவின்றி உரைத்த ஞானம் - திரிலட்சண பாவனை என்னும் ஞானம். அஃதாவது சர்வந் துக்கந்துக்கம்; சர்வம் நித்தியம்நித்தியம்; சர்வஞ் சூனியஞ்சூனியம் என்னும் பாவனை. ஞானத்து - ஞானத்தினால்; ஞானத்து (ஒழியாத பேரின்ப) முத்தி பெற்றான் - ஞானம் பெற்றமையால் குற்ற நீங்கிப் பஞ்சகந்த அழிவாகிய முத்தியடைந்தான். பற்பலரும்....அறம் முன்சொன்ன பான்மையான் - முத்தி பெறுமுன் தவங் காரணமாகத் தோன்றிய ஞானத்தால் முற்றும் உணர்ந்து பிறர் உய்ய அறஞ் சொன்னான். பரமன் - ஆதிபுத்தருடன் புத்தர் இருபத்து நால்வர்; இறுதியில் நின்றவன் கொளதம புத்தன். இங்குக் கூறியவன் ஆதிபுத்தன். இங்குக் கூறியவற்றால் துக்கம் - துக்கோற்பத்தி - துக்க நிவாரணம் - துக்க நிவாரண மார்க்கம் எனச் சத்திய சதுட்டயம் என்று பௌத்தர் கூறும் நான்கும் குறிப்பிற் பெறப்பட்டமை கண்டுகொள்க. தவமே நன்மை - என்பதும் பாடம். |
|
|