பாடல் எண் :2814
என்றுரைத்த சாரிபுத்த னெதிர்வந் தேற்ற
விருந்தவத்துப் பெருந்தன்மை யன்பர் தாமும்
"நன்றுமது தலைவன்றான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ" தென்றார்;
"நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்த வைந்தும்
ஒன்றியகந் தத்தவிவே முத்தி" யென்ன
வுரைசெய்தான் பிடகத்தி னுணர்வு மிக்கான்.
914
(இ-ள்) என்றுரைத்த...தாமும் - இவ்வாறு தனது தலைவன் தன்மை பற்றி விடைகூறிய சாரிபுத்தன் முன்பு வாதத்தினை ஏற்றுநின்ற பெரிய தவத்தினையும் பெருந்தன்மையினையுமுடைய அன்பரும்; நன்றுமது...என்றார் - உமது தலைவன்தான் அடைந்தான் என்று உங்கள் சமயம் நிச்சயிக்கின்ற முத்தியினியல்புதான் யாது? என்று கேட்டார்; நின்ற உரு...உரை செய்தான் - நின்ற உரு - வேதனை - குறிப்பு - செய்கை - நேரே நின்ற ஞானம் என நிகழும் ஐந்தும் கூடிய (பஞ்ச) கந்தத்தின் அழிவே முத்தியாவதென்று சொன்னான்; பிடகத்தின் உணர்வு மிக்கான் - திரிபிடகத்தின் அறிவு மிகுந்தவனாகிய சாரிபுத்தன்.இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
(வி-ரை) எதிர் வந்து ஏற்ற - முன் (2812) கூறியபடி வாதத்தினை ஏற்று முன்வந்து வாதந் தொடங்கிய; ஏற்றல் - மேற்கொள்ளுதல்.
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் - "எதிரில் அன்பர்" (2812); சம்பந்த சரணாலயர்; இத்தன்மையாற் கூறினார், இகல், பொறாமை, சினம் முதலிய தீக்குணங் காரணமாக இவ்வாதத்தினை ஏற்றாரலர் என்பது குறித்தற்கு.
உமது தலைவன்தான் நன்று பெற்றானென்று நாட்டுகின்ற முத்திதான் யாவது - "முத்தி பெற்றான்" (2813) என முன் கூறினமையால் அதனையே தொடர்ந்து கொண்டு இரண்டாவது வினாவைத் தொடுக்கின்றார். நன்று - பெற்றான் என்க; "ஒழியாத பேரின்பம்" (2813) என்றதனைக் குறித்தது. நன்று - நாட்டுகின்ற - என்று கூட்டி உரைத்தலுமொன்று. ஐந்தும் ஒன்றிய கந்தத்து அவிவே முத்தி - ஐந்து கந்தங்களும் அழிவதுவே முத்தியின் இலக்கணம் என்பது பௌத்த நூன்முடிபு.
நின்றஉரு....ஐந்தும் - புத்தர் பஞ்சஸ்கந்தம் என்னும் கந்தமைந்தாவன: உரு - வேதனை - குறிப்பு - செய்கை - ஞானம் என்பன. அறிவுள்ள பிராணிகள் இந்த ஐந்தும் சேரும் கூட்டத்தாலுண்டாவன என்பதும், இவ்வைந்தன் அழிவே முத்தி என்பதும் பௌத்தர் கொள்கை. (1) உருவக்கந்தம் - உருவங்களுக்கெல்லாம் காரணமாகிய பொருளை உணர்த்துவது; (2) வேதனைக் கந்தம் - இந்திரியங்களுக்கும் புலன்களுக்கும் உள்ள பொருத்தத்தின் உளதாகும் உணர்வு; (3) குறிக் கந்தம் - (இதனை சமஞ்ஞா ஸ்கந்தம் என்பர்) மெய் வாய் முதலிய ஐந்தும் மனமும் கூடிய ஆறு இந்திரியங்களினால் வரும் அறுவகை யுணர்வினா லுளதாகும் பொது - சிறப்பு என்ற இருவகையானும் பொருள்களைப் பெயர்க்குறியிட்டறிதற் கருவியாகிய ஞானம்; (4) செய்கைக் கந்தம் - (இதனை சமஸ்காரக்கந்தம் என்பர்) மனம் வாக்குக் காயம் என்னும் முக்கரணங்களால் வரும் தொழில் வேறுபாட்டால் அவற்றுக்கு உளதாகும் பக்குவம்; (5) ஞானக் கந்தம் - (விஞ்ஞானம் என்பர்) துயில்வோனுடைய உணர்வானது, செய்கையும் நுகர்வுமின்றிச் சான்று மாத்திரையாய் நிற்பதுபோல அறிவுடையார்களுக்குள் நின்று அவ்வறிவுக் காரணமாய் நிற்கும் அறிவுச் சத்தி; "உணர்னெப்படுவ துறங்குவோ ருணர்விற், புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே" (மணிமேகலை - 30 - 82 - 83); இவ்வைந்தும் 28 - 18 - 6 - 52 - 89 ஆகிய தத்துவங்களை உட்கொண்டன.
"எட்டிவை யுரு மூன்று வேதனை யாறு ஞானம், ஒட்டிய குறிப்போ ராறு செய்கையு மிருப தாகக், கட்டிய பஞ்ச கந்தங் கணத்தினிற் பங்க மாகுந், தொட்ட நாற்பத்து மூன்றுஞ் சுகதநூற் றுணிவு தானே" என்பது பௌத்த நூல். இவற்றின் விளக்கமாவது: "உருவம் எட்டு - அவை பூதவுரு நாலு; உபாதானவுரு நாலு; அவை வருமாறு: பிருதிவி, அப்பு, தேயு, வாயுவெனு நாலும் பூதவுரு; வலி, கந்தம், இரதம், வன்னமெனு நாலும் உபாதானவுரு; ஆக - (8); வேதனை - மூன்று; அவை: குசலா வேதனை (சுகஅறிவு), அகுசலா வேதனை (துக்கஅறிவு), குசலா குசலா வேதனை (சுகதுக்க அறிவு) ஆக-(3); குறிப்பு - ஆறு - சோத்திரம் துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்கிராணம் (மெய், வாய், கண், மூக்கு, செவி), மனம்; ஆக-(6); பாவனை - இருபது; தீக்குணம் 10 - நற்குணம் 10; தீக்குணங்களாவன: பொய் சொல்லல்,கோட்சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில சொல்லல் என வாக்கின் குணம் 4; களவுக்குப் போகுதல், வறிதே தொழில்செய்தல், கொலை செய்தல் எனக் காயத்தின் குணம் 3; கொலை நினைத்தல், காமப் பற்று, ஆசை என மனத்தின்குணம் 3; ஆக-10; நற்குணங்களாவன: மெய்யுரை, நல்வார்த்தை, இனியவை கூறல், பயன்படு சொல் என வாக்கின் குணம் 4; பள்ளிவலம் வரல், தவம் புரிதல், தானஞ் செய்தல் எனக் காயத்தின் குணம் 3; அருள் நினைவு, ஆசையறுத்தல், தவப் பற்று என மனத்தின் குணம் 3; ஆக - 10; ஆகப் பாவனை - 20; இவை மனத்தானும் வாக்கானும் காயத்தானும் வருவன. விஞ்ஞானம் - ஆறு; அவை: சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், சித்தம் ஆக 6; ஆகப் பஞ்சகந்த போதம் - 43 கண்டுகொள்க. "இவ்வித மைந்துஞ்சந் தானத் தெழுந்தழிகை, பந்த மெனவேநீ பார்" - பரமத திமிர பானு.
"ஓங்கிய வுருவ மோடும் வேதனை குறிப்பி னோடுந், தாங்குபா வனைவிஞ் ஞானந்தாமிவை யைந்துங் கூடிப், பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்; ஆங்கவை பொன்றக் கேடா யழிவது முத்தி யின்பம்" (சிவஞான சித்தியார் - பரபக்கம் - சௌத்திராந்திகன் மதம் - 30) என்றும்: "மேவிய கருவிற் சேரு முருவம் வேதனைகு றிப்புப், பாவனை யுடன்விஞ் ஞானம் பஞ்சகந் தங்கள் கூடி, யோவில்பல் லுணர்வுண் டாகி யொழிவது பிறவித் துன்ப, மாவது பொன்றக் கேடா யொழிவது முத்தி யென்றான்" (திருவாத. புரா - 464 = புத். வாதில் சருக் - 50) என்றும் வருவனவும், பிறவும் காண்க; சௌத்திராந்தகன் முதலியநால்வகைப் புத்தர்களின் சமயக் கொள்கை விவரங்களும், அவற்றின் மறுப்புக்களும் சிவஞான சித்தியார் பரபக்கத்துள் விவரிக்கப்பட்டன; அவற்றைக் கற்றுணர்தல் ஈண்டு வரும் பௌத்த வாதத்தை நன்குணர்தற் குதவிசெய்யும்; கடைப்பிடிக்க. புத்த சரித்திரம், புத்த தருமம், புத்த சங்கம் என்பவை பற்றி மணிமேகலைப் பதிப்பில் மகாமகோபாத்தியாயர் - திரு - உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் விரிவாயப் பௌத்த நூல்களையும் அவைபற்றி மேனாட்டுப் புலவாணர் எழுதியவைகளையும் ஆய்ந்து தொகுத்து எழுதியுள்ளவையும் பார்க்க.
பிடகம் - பௌத்தர்களின் சமயநூல்; ஆதிபுத்தனுடன் இருபத்துநான்கு புத்தர்கள் மரபி லுபதேகக்கிரமத்தாற் சொல்லப்பட்ட நூல். அவை வினய பிடகம், சூத்திர பிடகம், அவிதன்ம பிடகம் என மூவகைப்படும். இவை திரிபிடகம் - பிடகத் திரயம் எனவும் வழங்கப்படும். பிடகம் - கூடை. புத்தம் - தருமம் - சங்கம் என்பன முத்திறமணி என்பது பௌத்த வழக்கு. புத்தம் சரணங்கச்சாமி - தருமம் சரணங்கச்சாமி - சங்கம் சரணங்கச்சாமி (நமோ புத்தாய; நமோ தர்மாய; நமஸ்ஸங்காய என்பது மந்திரம்.) என்னும் மும்மணியைக் கூடைபோன்று தாங்குதலால் இது பிடகம் எனப்படும் என்பர். இந்நூல்களைக் கூடையில் சேமித்துத் தாங்குதலால் போந்த பெயர் என்றும் கூறுவர்.
உணர்வு - அறிவு; பயிற்சியால் வரும் ஞானம்.
இப்பாட்டினால் உருவம் முதலியனவாய்க் கூறப்படும் ஐந்து கந்தங்களும் பொன்றிக் கெட்டழிதலே முத்தி என்று சாரிபுத்தன் தனது சமயக் கொள்கையிற் கூறுமாறு விடையிறுத்த முத்தியினிலக்கணம் கூறப்பட்டது.