"கந்தமாம் வினையுடம்பு நீங்கி யெங்கோன் கலந்துளன்முத் தியி"லென்றா; னென்னக், "காணும் இந்திரியங் கண்முதலாங் கரணந் தானு மில்லையே லவனுணர்ச்சி யில்லை" யென்றார்; "முந்தையறி விலனாகி யுறங்கி னானை நிந்தித்து மொழிந்துடன்மீ தாடி னார்க்கு வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும் வருமன்றோ நன்மை?"யென மறுத்துச் சொன்னான். | 918 | (இ-ள்) கந்தமாம்....என்றான் - இருவினை காரணமான பஞ்சகந்த வுடம்பு கெட எமது தலைவன் முத்தியிற் சேர்ந்திருக்கின்றான் (அதனால் கோயிலும் வடிவும் விழாவும் பூசையும் எடுத்தல் பொருந்தும்) என்று கூறினான்; என்ன - அவ்வாறு கூறவே; காணும்....இல்லை என்றார் - (அவ்வாறு முத்தியிற் சேர்ந்ததும் உன் இறைவனுக்கு) விடயங்களை உணரும் கருவிகளாகிய கண் முதலிய கரணங்கள் இல்லாதொழிந்தால் அவனுக்கு உணர்வு உதித்தல் இல்லையாகும் என்று மறுத்தருளினார்; முந்தை...போல - முற்பட்ட உணர்வுகெட்டு உறங்குகின்றவனை நிந்தனைசெய்து அவனுடம்பின் மீது மிதித்தாடின வொருவனுக்கு அதனால் தீவினைப்பயன் வருதல்போல; வழிபட்டார்க்கும்....மறுத்துச் சொன்னான் - ஐந்துகந்தமுங் கெட்டு முத்தி யடைந்த எம் முதல்வனை வழிபாடு செய்தவர்களுக்கும் அந்நல் வினைப் பயன் வருமன்றோ? என்று சாரி புத்தன் மறுத்துக் கூறினான்.இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை) கந்தமாம்....என்றான் - இருவினை காரணமான கந்தவுடம்புகெட முத்தியில் எமது தலைவன் சேர்ந்திருக்கின்றான் (அதனால் விழா எடுத்துப் பூசை செய்தல் பொருந்தும்) என்று சாரிபுத்தன் மறுமொழி கூறினான்; என்ன - என்று கூற. "காணும் இந்திரியம்.....இல்லை" என்றார் - முத்தியிற் சேர்ந்த தலைவனுக்குக் காணுதற்கிய கண் முதலிய கரணங்கள் இல்லையாதலின் உணர்வுதித்தலு மில்லையாம் என்று அவன் விடையினை மேலும் அன்பர் மறுத்தவாறு. "முந்தை அறிவிலனாகி....நன்மை" என - அறிவுணர்தலின்றி உறங்குகின்ற ஒருவனை மற்றொருவன் நிந்தித்து மதிப்பானாயின் முன்னவன் அதனை உணராவிடினும் அத் தீவினைப் பயன் பின்னவனுக்கு வரும்; அதுபோல முதல்வன் முத்தியில் இதனை உணராவிடினும் அவனைப் பூசை முதலியன செய்தலின் பயன் அது செய்தாருக்கு வரும் என்றது. இஃது அன்பருடைய அத்தடையுரையினை மறுத்துப் புத்தன்மேலும் கூறிய விடையாம்; முந்தையறிவு - ஆலய விஞ்ஞானம் பிரவிருத்தி விஞ்ஞானம் என்னும் இரண்டனுள் முன்னதன் காரணமாக வரும் நனவுணர்வாகிய முன்அறிவு. நிந்தித்து மொழிந்து உடல்மீது ஆடினார்க்கு - வைதலும் மிதித்தலும் செய்தோர்க்கு. வினைப்பயன் - அத்தீவினைப்பயன். வினைப்பயன் வருதல் போல - நன்மையும் வருமன்றோ என்க; நன்மை - நல்வினைப்பயன்; தீவினைப்பயன் வருதல் கண்கூடாகப் பெறக் காண்டலின் அதனை உவமானமாக்கிக் காணாத நல்வினைப்பயனைப் பெறுவித்தான். இஃது அவன் எடுத்துக் காட்டிய உவமை; வினைபற்றி வந்தது. |
|
|