"இப்படியா லெய்து'மென விசைத்து நீயிங் கெடுத்துக்காட் டியதுயிலு மியல்பி னான்போன் மெய்ப்படிய கரணங்க ளுயிர்தா மிங்கு வேண்டுதியா னும்மிறைவற்; கான போது செப்பியவக் கந்தத்தின் விளைவின் றாகித் திரிவில்லா முத்தியிற்சென் றிலனு மானான்; அப்படியக் கந்தத்து ளறிவுங் கெட்டா லம்முத்தி யுடனின்ப மணையா" தென்றார். | 920 | (இ-ள்) இப்படியால்....போல் - இவ்வாறாக வழிபாட்டின் பயன்றருதல் எம் தலைவன்பாலும் பொருந்தும் என்று நீ இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டிய (உடன்பாடும் எதிர்வுமாகிய உணர்வின்றி) உறங்கு கின்றவனது தன்மைபோல; மெய்ப்படிய....இறைவற்கு - உடம்பில் உள்ள கரணங்களும் உயிரும் ஈண்டு இச்செயலுக்கு - வழிபாடு கொண்டு பயன்படும் நிலைமைக்கு - உன் இறைவனுக்கு உளவாக வேண்டுகின்றாயன்றோ?; ஆனபோது....சென்றிலனுமானான் - அவ்வாறு உடலும் கரணமும் உயிரும் அவன் வழிபாடுகொள்ளும் நிலையில் கொண்டவனாயினபோது சொல்லப்பட்ட அந்த ஐந்து கந்தத்தின் விளைவு இல்லாதொழியவே, கெடுதலில்லாத முத்தியிற் சேர்ந்தவ னல்லாதவனும் ஆகின்றான்; அப்படி....என்றார் - அவ்வாறு அந்தக் கந்தத்தின் அறிவும் கெடுமேயானால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது என்று கூறினார். (வி-ரை) இஃது சாரிபுத்தன் மேற்பாட்டிற் கூறிய உதாரணங் காட்டிய உறங்கினோன் கொலைப்பயன் என்ற தன்மையினை விரித்துக்காட்டி, அஃது அவன் கொண்ட இறைவனது தன்மைக்குப் பொருந்தாதவண்ணம் அன்பர் காட்டியவாறு. துயிலும் இயல்பினான்போல்....இறைவற்கு - உறங்கினான் கொலைப் பயன் போல என்றபோது கொலையினாற் பிரிக்கப்பட்ட உயிரும், அதுநின்ற உடலும், கொலைவாதனையேற்ற உட்கரணங்களும் வேண்டப்படுவன வன்றோ? அதுபோல வழிபாட்டின் பயன்வருதற்கும் உனது இறைவனுக்கு உயிரும் உடலும் கரணமும் அம்முத்தி நிலையில் உண்டென நீ கொள்ளவேண்டி வரும் என்றபடி. ஆனபோது - வழிபாட்டின் பயன் வருதற்பொருட்டு அவ்வாறு உயிர் உடல் கரணங்கள் உள்ளனவாகக் கொள்ளலாயினபோது. செப்பிய....ஆனான் - அவ்வாறாயினபோது கந்தங்களின் முடிந்தநிலை இல்லையாகும்; அதனால் கெடுதலில்லாத முத்தியில் அவன் சென்றதும் இல்லையாகும் என்க. விளைவு - முதிர்ந்த - முடிந்த - நிலையாகிய அவிவு என்ற பொருளில் வந்தது. ஆகி - ஆகியதனால். காரணப்பொருளில் வந்த வினையெச்சம். திரிவு இல்லா முத்தி - கந்தங்களின் சேட்டையினாற் கேடு அடைதல் இல்லாத முத்தியின் தன்மை. "ஒழியாத" (2813); வழிபாட்டுப் பயன் வரவேண்டுமானால் முதல்வனுக்கு உடல் உயிர் கரணம் இவைகள் வேண்டும்; அவன் கெடாத முத்தியிற் செல்லுதல் வேண்டில் அவை முன்னமே கெட்டொழிதல் வேண்டும் என அவனது கொள்கையின்வரும் முரண்பாடும், அவன் மேற்காட்டிய எடுத்துக்காட்டு அவனது கொள்கையுடன் பொருந்தாமையும் எடுத்து முடித்துக்காட்டிய படியாம். அப்படி...அணையாது - இது மேற்காட்டிய வகையானன்றி மேலுமொரு வகையால் அவனது முத்தியில்பினை மறுத்தவாறு. முத்தியாவது பேரின்பமுடையது என்று "ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்" (2813) என்றாய்; இன்பமடைதற்கு அறிவு உள்ளதாதல் வேண்டும்; அறிவு உள்ளதாதற்குக் கந்தங்களின் செயற்பாடு வேண்டும். ஆனால் நீ சொல்வதுபோலக் கந்தத்துடனே அறிவும்கெட்டு முத்தியிற்போனானாகில் அந்த முத்தியில் பேரின்பமடைதற்கு ஏதுவில்லையே என்று முரண்பாடுகாட்டப்பட்டவாறு கண்டுகொள்க. முத்தியுடன் - அணையாது - முத்தியுள் இன்பம் சாராது - கூடாது; அஃது இன்பமில்லா முத்தியாய்ப் பாழ்ஆகும் என்றபடி. ஞானமே ஆன்மா எனவும், அது நீரோட்டம் போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றியழியும் எனவும், அவ்வாறு தோன்றியழியுங்கால் வரும் வாசனை பற்றுதலான் அறிவு நிகழும்; அவ்வாசனை அழிவதே முத்தி என்பது பௌத்தசமயக் கொள்கை; ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாருமுளர். இதனை உட்கொண்டே அன்பர் மேற்கூறியவாறு கந்தமும் அறிவும் கெட்டபோது பெறப்படுவதாகக் கூறப்பட்ட முத்தியில் இன்பம் அணைவதில்லை என்றார். "ஐந்துகந்தஞ் சந்தானத் தழிதல் பந்த துக்க, மறக்கெடுகை முத்தியின்ப மென்றறைந்தாய் கந்த, மைந்துமழிந் தான்முத்தி யணைபவர் யாரென்ன வணைபவர் வேறில்லை யென்றா யார்க்கு முத்தியின்ப, மைந்தினுணர் வினுக்கென்னி னழியாத வுணர்வுண் டாகவே யவ்விடத்து முருவாதி கந்த, மைந்துமுள வாமதுவும் பந்தமாகி யரந்தைதரு முத்தியின்ப மறிந்திலைகா ணீயே" (சித்தியார் - பரபக்கம் - 133) எனவும்; "அழிந்திடி னைந்து கந்த முத்தியென் றுரைத்தா யைந்து, மழிந்திடின் முத்தி பெற்றாராரென வினவும் போதி, லழிந்திடு மைந்தி னுண்டா முணர்வென வுரைக்கி லைந்து, மழிந்தன விலையா முத்தி யாவது மில்லை யென்றார்"(திருவாத. புரா - 464) எனவும் வருவன இக்கருத்தை விளக்குதல் காண்க. குறிப்பு:- ஞானமுடைய ஆன்மா இல்லையாயின் முத்தியில் இன்பமும் பயனும் இல்லை என்பது முன்கூறிய வாதத்தின் குறிப்பாகும். |
|
|