பாடல் எண் :2823
புந்தியினா லவருரைத்த பொருளின் றன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற;
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் "சைவ
மல்லாது மற்றொன்று மில்லை" யென்றே
அந்தமில்சீர் மறைகளா கமங்க ளேனை
யலகில்கலைப் பொருளுணர்ந்தா ரருளிச் செய்யச்,
சிந்தையினி லதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
925
(இ-ள்) புந்தியினால்....கூற - புத்தியினையே பற்றுக்கோடாகக் கொண்டு அந்தப் புத்தர்கள் கூறிய பொருள்களின் தன்மைகள் உண்மைப்பொருள்க ளல்லவாகி முடியும் படியினை அன்பராகிய சம்பந்த சரணாலயர் பொருந்தும்படி எடுத்துச் சொல்ல; மந்தவுணர்வுடையவரை... என்றே - மந்தமாகிய உணர்வு உடைய அந்தப் புத்தர்களைப் பார்த்துச் சைவத்திறமேயல்லாது மற்றொன்றும் இல்லையாம் என்றே; அந்தமில்.... அருளிச் செய்ய - அழிவில்லாத சிறப்பையுடைய வேதங்களையும், ஆகமங்களையும், அவற்றின் வழிவரும் ஏனைய அளவற்ற கலைப் பொருள்களையும் உணர்ந்த பிள்ளையார் அருளிச் செய்ய; சிந்தையினில்....தாழ்ந்தார் - மனத்தில் அவ்வுண்மைகளைத் தெளிந்து கொண்டு புத்தர்கள் சீகாழியில் வந்த திருமறையவராகிய பிள்ளையாரது செம்மையாகிய திருவடிகளில் சென்று வணங்கினார்கள்.
(வி-ரை) பொருளின் நன்மை - (1) தலைவன் தன்மையும், அவன் நாட்டிய உறுதிப்பொருள் என்னும் முத்தியின் தன்மையும்; (2) தலைவன் முற்றுமொருங்குணர்ந்த தன்மையும், அவன் உரைத்த நூலின் தன்மையும் என்ற இவைகளின் கொள்கை; "உங்கடலை வனும்பொருளும் உரைக்க" (2812) எனவும், "பொய் வகையே முத்தியினிற் போனான் முன்பே பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் - என்றாய்; எவ்வகையா லவனெல்லா முணர்ந்தது?" (2819) என இந்த இரண்டு பொருள்களைப் பற்றியே வாதம் தொடங்கி நிகழ்த்தப்பட்டது.
பொருளன்றாம்படி காட்ட - அவனது தலைவனும் பொருளும் முன் 2813 - 2814 - 2816-லும், அவை அவை பொருளல்லவாம்படி 2815-2816-2717-2818 பாட்டுக்களிலும் காட்டப்பட்டன. தலைவனது உணர்வின் தன்மையும் நூலின் தன்மையும் 2820-லும் அது பொருளன்றாம்படி 2821-லும் காட்டப்பட்டன.
பொருளன்றாம்படி காட்ட - உண்மைப்பொரு ளாகாத நிலை. படி - தன்மை - நிலை. படியினை - இரண்டனுருபு தொக்கது.
புந்தியினால் - புத்தர் கொள்கைப்படி புத்த தத்துவமே முடிந்த நிலையாதலின் புத்தி தத்துவத்தையே பற்றுக்கோடாகக் கொண்டு.
சைவமல்லாது மற்றொன்றுமில்லை - சைவம் - சிவச்சார்புடைய சமயம்; சிவத்தின் சம்பந்தம். எல்லாப் பொருள்களும் கொள்கைகளும் சைவத்தின் அங்கங்களாக அதனுள்வந் தடங்குவன என்பது. சைவம் - சைவத்திற் கூறப்படும் தலைவனும், முத்தியும், நூலும் இவையே பொருள் என்பார் "அந்தமில்...உணர்ந்தார்" என்றார்.
அல்லாது ஒன்றுமில்லை - எதிர்மறைகள் உறுதி குறித்தன. அடங்காத பொருளும் சமயங்களுமில்லை. இதனை மேல்வரும் பாட்டில் "நின்றனவுஞ் சரிப்பனவுஞ் சைவமேயாம் நிலைமை"(2824) என்று மேலும் விரிப்பது காண்க.
இல்லை - இன்மை - உண்மைப்பொருள் பெறாத தன்மை. "சைவ சமயமே சமயம்", "சைவத்தின் மேற்சமயம் வேறில்லை" என்ற கருத்துக்கள். இதனால் சமய நிச்சயம் பண்ணிக் காட்டியபடி.
அந்தமில்சீர்.....உணர்ந்தார் - ஆளுடைய பிள்ளையார்; கலைப் பொருள் - வேத சிவாகமங்களின் வழிவரும் கலைஞான நூல்களின் பொருள். உணர்ந்தார் - முழுமையாகிய சிவஞானத்தை ஓதாதுணர்ந்தார்; "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும், பன்னிய வொருத்தர்" (பிள். தேவா - இந்தளம் - புகலி - 1); அந்தமில்சீர் - முதல்வன் போலவே அவனருளிய வேத சிவாகமங்களும் அழிவில்லாதன என்பது.
அருளிச் செய்ய - புத்தன் கூறிய பொருள் பொருளன்றாம்படியினை வாதமுகத்தால் அன்பர் காட்டப் பின்னர்ப் பொருளாவது இது என்று பிள்ளையார் முடித்துக் கூறி அவர்களை வழிப்படுத்தியவாறு.
சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார் - வழிப்படுத்திய அருளிப்பாட்டினை ஏற்றுத் தாழ்ந்து வணங்கினர். தாழ்தல் - விரும்புதல் என்றலுமாம். அவ்வாறு உண்மைப் பொருளில் நேர்ந்து தாழ்ந்தாராதலின் அவர்பால் அருணோக்கம் வைத்துப் பாசநீக்கித் தீக்கை புரிந்து உபதேசித்துப் பிள்ளையார் அவர்களைச் சைவராக்கி உய்யச்செய்த நிலை மேல்வரும் பாட்டிற் கூறப்படும்.