பாடல் எண் :2828
பூவிரியுந் தடஞ்சோலை புடைபரப்பப் புனல்பரக்குங்
காவிரியின் றென்கரைபோய்க் கண்ணுதலார் மகிழ்ந்தவிடம்
மேவியினி தமர்ந்திறைஞ்சி விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரச ருழைச்சண்பை நகரரசர் நண்ணுவார்;
930
(இ-ள்.) பூவிரியும்.....போய் - மலர்கள் விரிகின்ற பெரிய சோலைகள் பக்கங்களிற் பரந்து நிகழும்படி நீர் பரவி ஓடுகின்ற காவிரியினது தென்கரையின் வழியாகச் சென்று; கண்ணுதலார்....இறைஞ்சி - நுதற்கண்ணுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய பதிகளை அடைந்து இனிதாக விரும்பி வணங்கிக்கொண்டு போய்; விருப்புறும்...நண்ணுவார் - விருப்பம் பொருந்திய உண்மையடியார்களுடனே திருநாவுக்கரசரிடம் சீகாழிக்கரசராகிய பிள்ளையார் நண்ணுவாராகி;
(வி-ரை.) புடை பரப்ப - பக்கங்களில் எல்லாம் பரந்து விளக்கிச் செழிக்கும்படி; பரக்கும் - பரவி ஓடுகின்ற. காவிரியின் இரு கரையிலும் சோலைகள் செழித்தலை இன்றும் காணலாம். காவிரியில் நீர் பெருகும்போது அந்நீர் - மேல் உயர்ந்து இருகரையின் சோலைகளுட் பரந்து சென்று அவற்றைச் செழிப்பித்தல் காண்க.
தென்கரை போய்....இடம் - இறைஞ்சி - திருக்கடவூர் காவிரித் தென்கரையில் உள்ள பதி; அங்குநின்றும் அதுபோலவே தென்கரையில் உள்ள பதியாகிய திருப்பூந்துருத்தியினைச் சென்றடைவாராய்ப் பிள்ளையார், தென்கரையில் உள்ள பிற பதிகளை வணங்கி மேற்குநோக்கிச் செல்கின்றார் என்க.
மேவி - அமர்ந்து - இறைஞ்சி - பதிகளிற் சேர்ந்து வழிபடும் நிலைகள்.
விருப்புறு மெய்த்தொண்டர் - பிள்ளையாருடன் வந்தாரும் அங்கங்கு வந்து கூடுவோரும்.
நாவரசர் - நகரரசர் - சொல்லணி; இருவரும் ஒப்பாந் தன்மையும் குறித்தபடி. உழை - ஏழனுருபு. இரு பெருமக்களும் முன் கூடிப்பிரிந்த இதனிடையில் ஒப்பப் பரசமய நிராகரித்த வரலாற்றுக் குறிப்பும் காண்க.