பாடல் எண் :2829
அந்தணர்சூ ளாமணியார் பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி
"நந்தமையா ளுடையவரை நாமெதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பய"னென்று முகமலர வகமலர்வார்;
931
(இ-ள்.) அந்தணர் சூளாமணியார்...வந்தருளும் - மறையவர்களின் சிகாமணியாராகிய பிள்ளையார் திருப்பூந்துருத்திக்கு அணிமையாக வந்தருளுகின்ற; பெருவார்த்தை...கேட்டருளி - பெருவார்த்தையினை வாகீசமாமுனிவர் கேட்டருளி; நந்தமை...என்று - "நம்மையாளுடைய பிள்ளையாரை நாம் எதிர்கொண்டு சென்று வணங்குவது நாம் முன் பிறவிகளிற் செய்த நல்வினையின் பயனாகப் பெறத்தக்கதாம்" என்று கொண்டு; முக மலர அக மலர்வார் - முகமலர்ச்சி கொள்ள மனமலர்வராய்;
(வி-ரை.) பிள்ளையாரும், சண்பைநக ரரசரும் ஆகிய அந்தணர் சூளாமணியார் என்க.
சூளாமணி - முடிமணி. சிரோ ரத்தினம் என்ப. சூடா என்ற வடசொல் சூளா எனத் திரிந்துநின்றது.
பெருவார்த்தை - மிக்க நன்மைதரும் சொல். அன்பர் சொல்லக் கேட்டாராதலின்
வார்த்தை என்றார். வார்த்தை - ஈண்டு அதனாற் குறிக்கப்படும் வந்தருளும் செயலுக்காயிற்று.
"நந்தமை...பயன்" என்று - இது நாவரசர் திருமனத்தெழுந்த கருத்து. பிள்ளையார் தாமே எழுந்தருளி வந்தருளும் பேறு கிடைக்கப்பெற்றது முன்னர்ப் பல பிறவிகளிலும் செய்த சிவநல்வினைகளின் பயனாலன்றிக் கிடைத்தலரிதென்பது. சிவனை நோக்கிச் செய்யும் நல்வினையின் பயனாலே அடியார் கூட்டமும் குருவருளும் இவ்வாறே பெறலாகும் என்பது சிவாகமங்களிற் கண்ட உண்மை. முன்னர் "ஆக்கிய நல்வினைப் பேறென் றன்பர் குழாத்தொடு மெய்தி" (2167) என்ற இடத்தும், "கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர் பெருமாளைக் கண்டு வீழ்ந்தார்" (2920) என்ற இடத்தும் ஆளுடைய பிள்ளையார் திருவுள்ளத்தும் இக்கருத்தே நிகழ்வதனை ஆசிரியர் எடுத்துக்காட்டுதல் காண்க. அடியார்களைக் காணுந்தோறும் இக்கருத்து எழும் பக்குவம் நிகழப்பெறுதல் உய்யும் வகையாம். "விண்டொழிந்தன....வல்வினை" (தேவா)
நந்தமை ஆளுடையவரை - பிள்ளையாரை அரசுகள் தம்மை ஆட்கொண்டு அடிமை கொள்ளும் முதல்வராகவே கருதினார் என்பது பின்னர் அவரது சிவிகை தாங்கப்பெற்ற மகிழ்ச்சியினாலும், "ஒப்பரிய தவஞ் செய்தே னாதலினா லும்மடிக, ளிப்பொழுது தாங்கி வரப் பெற்றுய்ந்தேன் யான்" (2833) என்று கூறியருளுவதனாலும் தெற்றென அறியப்படும்.
நாம் எதிர்சென் றிறைஞ்சுவது - அவர் இப்பதியினுள் எழுந்தருளும்வரை தாழாது முன்பே எதிர்கொண்டு போய் வணங்குதல் வேண்டுமென்பது.
முந்தை வினை - முந்தை - முன் பிறவிகளிலும், இப்பிறவியில் இற்றைக்கு முன்னும் செய்த; வினை - சிவநல் வினை. என்று - என்று கருதித் துணிந்து.
முகமலர அகமலர்வார் - அகமலர்ச்சியே முகமலர்ச்சியை விளைக்கும். விரைவு பற்றி முகமலர்ச்சியை முன் வைத்தார்;மலர - மலரும்படி : விரைவினால் இரண்டும் உடனாக நிகழ்ந்தன என்பதும் குறிப்பு.
அகமலர்வார் - அகமலர்வாராகி; முற்றெச்சம். அகமலர்வார் - வந்தணைந்தார் என வரும்பாட்டுன் முடிந்தது.