அவ்வார்த்தை கேட்டஞ்சி யவனியின்மே லிழிந்தருளி "யிவ்வாறு செய்தருளிற் றென்னா?"மென் றிறைஞ்சுதலுஞ் செவ்வாறு மொழிநாவர் "திருஞான சம்பந்தர்க் கெவ்வாறு செயத்தகுவ?" தென்றெதிரே யிறைஞ்சினார். | 936 | (இ-ள்.) அவ்வார்த்தை...இழிந்தருளி - அவ்வாறு கூறியருளிய அப்பர்பெருமானது அத்திருமொழிகளைக் கேட்டு அஞ்சிப் பிள்ளையார் சிவிகையினின்றும் கீழே இறங்கியருளி; இவ்வாறு...இறைஞ்சுதலும் - இப்படித் தேவரீர் செய்தருளினால் என்னாவது? என்று பதைப்புடன் கூடி வணங்குதலும்; செவ்வாறு....இறைஞ்சினார் - செம்மையே மொழியும் திருநாவினையுடைய அரசுகள் "திருஞான சம்பந்தருக்கு வேறெவ்வாறு செய்தல் தக்கதாகும்" என்று வணங்கினார். (வி-ரை.) அஞ்சி - இழிந்தருளி - அச்சமாவது அப்பர் எனத் தாம் கொண்ட பெரியார் சிவிகை தாங்கத் தாம் ஊர்ந்துவந்தது பிழை என்றதனால் ஆயது. பெரியார்பாற் பணிகொள்ளுதல் பிழை என்பதாம். இழிந்தருளி - அவர் சிவிகை தாங்கச் சிவிகையில் எழுந்தருளியிருத்தல் தகாதாதலின், இழிந்தருளுதல் - பெரியார்முன் சிறியராயடைந்து என்ற குறிப்பும் தருவது. "இழிந்தே" (1662). இவ்வாறு...என்னாம் - செய்தக்கதல்லாத இச்செயலை இவ்வாறு தேவரீர் செய்யின் அதன் பயன் என்னாகி விளைவது என்று பதைத்துக் கூறியது. "செய்தக்க வல்ல செயக் கெடும்" (குறள்) என அச்செயலைக் கொண்டனர் பிள்ளையார். செவ்வாறு மொழிநாவர் - முன் பாட்டில் உரைத்தவை பார்க்க. "திருஞானசம்பந்தர்க் கெவ்வாறு செயத்தகுவது?" - சிவஞானம் கிட்டப்பெற்ற போது அதனை அடிசார்ந்து வணங்குதலன்றி வேறென்ன செய்தக்கது என்றபடி; அச் செயலினையே "செய்தக்க செய்யாமை யானும் கெடும்" (குறள்) எனக் கொண்டருளினர். ஒரே செயலினை இவ்வாறு வேறு வேறாகக் கொண்டருளியது அவ்வவலரும் தாழ்வெனும் தன்மையோடு சைவமாஞ் சமயஞ் சார்ந்த நிலை குறித்தது. அவ்வவர் கொண்ட நிலையின்படி இருவர் திறனும் முரண்படாமை அறிந்துகொள்க. இறைஞ்சினார் - அவர் வணங்காமுன் வணங்கினார் (1662). எதிரே இறைஞ்சுதலும் - என்பதும் பாடம். |
|
|