பாடல் எண் :2836
திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடுமணைந்து தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரு மலரடிகள் வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார் மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.
938
(இ-ள்.) திருஞான சம்பந்தர்...தழீஇக்கொள்ள - திருஞான சம்பந்தர் மேன்மேற் பெருகும் ஆசையுடனே திருநாவுக்கரசர்தம்மை அணைந்து தழுவிக்கொள்ள; பிள்ளையார்...வணங்கியுடன் - அரசுகள் பிள்ளையாரது மணமுடைய மலர்போன்ற திருவடிகளை வணங்கி உடன்வர; பொருவாரும் ....பூந்துருத்தி - அலைகள் மோதுகின்ற கங்கை நீரைச் சடையில் வைத்த இறைவர் மகிழ்ந்த திருப்பூந்துருத்தியினில்; வந்து அணைந்தார் - பிள்ளையார் வந்து அணைந்தனர்.
(வி-ரை.) திருஞான சம்பந்தர் பெருகார்வத்தொடு மணைந்து தம்மைத் தழீஇக்கொள்ளத் திருநாவுக்கரசர் அவரது மருவாரு மலரடிகளை வணங்கி யுடன்வரப் பிள்ளையார் பூந்துருத்தி வந்தணைந்தார் எனக்கொண்டு கூட்டிப் பொருள் செய்யப்பட்டது. அவரது மலரடிகள் என்புழியும், வணங்கி யுடன்வர என்புழியும், ஆறனுருபேற்ற சுட்டுப்பொருளும் வினையெச்சச் சொல்லும் அவாய்நிலையான் வந்தன.
இனித் திருநாவுக்கரசர் வணங்கி, உடன், பிள்ளையாருடன் பூந்துருத்தி வந்தணைந்தார் என்றும், வந்தணைந்தார் என்பதுமுதல் (2836), முன்னிறைஞ்சி - இறைஞ்சினார் என்பதற்கும் (2834), மகிழ்ந்தங்கிருந்தார் (2838) என்பதற்கும் அவ்விருவரும் என எழுவாய் வருவித்தும் முடித்தனர் திரு. சொக்கலிங்கச் செட்டியார்.
திருஞான சம்பந்தர் - திருநாவுக்கரசர் - இவ்விரு பெருமக்களின் திருப்பெயர்களையும் இவ்வாறு மந்திரமாக் கொண்டு கணிக்கவேண்டிய இவ்வகையில் முன் தனித்தனிக் (2833 - 2934) கூறிய ஆசிரியர், ஈண்டு இருவரும் கூடிய இடத்தில் சேர்த்துவைத்துக் காட்டிய கவிநலமும் உள்ளுறையும் கண்டுகொள்க. உள்ளுறையாவது அன்று இப்பெருமக்கள் முன் கூறியவாறு கூடிய கூட்டத்தின் அருட்பொலிவினை நேரே கண்ட தொண்டரெல்லாம் "மற்றிவரை வணங்கப்பெற் றாழ்ந்தபிறப் புய்ந்தோம்" என்று ஆர்த்ததுபோலவே, பின்வரும் எம்போன்ற சிற்றடியாரும் கண்டுகொண்டு கணித்து உய்திபெற வைத்தலாம். "கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே" (ஆளு - திருவந் - 80) என்ற நம்பியாண்டார் நம்பிகள் கருத்துக் காண்க.
பெருகார்வத்தோடு மணைந்து தழீஇக் கொள்ள - பன்னாட் பிரிந்தபின் காண வேண்டுமென்று கருதிவந்த ஆர்வமும், ஈண்டு இவ்வாறு எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத வகையால் கண்டுகொண்ட ஆர்வமும் குறிக்கப் "பெருகார்வம்" என்றார். தழுவிக் கொள்ளுதல் - ஒப்பார் இருவரிடை அன்பு மிக்கபோது உளதாகும் மெய்ப்பாடு. நம்பியாரூரர் இரண்டாவது முறை தாமே கழற்றறிவாரை நினைந்து மலைநாட்டுக் கெழுந்தருளக் கண்டபோது "சேரர்பெருமா னெதிர்சென்று தலைநாட் கமலப் போதனைய சரணம் பணியத் தாவில்பல கலைநாட் டமுத வாரூரர் தாமுந்தொழுது கலந்தனரால்" (வெள்ளா. சருக் - 29); "சிந்தை மகிழும் சேரலனார் திருவா ரூர ரெனுமிவர்க, டந்த மணிமே னிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய், முந்தவெழுங்கா தலிற்றொழுது முயங்கி" (மேற்படி 20) என்னும் கருத்துக்களை ஈண்டு வைத்துக் காண்க.
பிள்ளையாரது - அடிகள் என்க. தழீஇக்கொண்ட அப்பிள்ளையார் என்று சுட்டுவிக்க. வணங்க என்பது பாடபேதமாயின் அரசுகள் என்ற எழுவாய் வருவிக்க.
மருவாரும் மலரடிகள் - இறைவரது திருவடிகள் என்றும் உரைக்க நின்றது; மருவாரும் - மலர் - அடி என்றது நிறம், மென்மை, உரு முதலியவற்றால்மட்டுமன்றி மணஞ் செய்தலாகிய குணத்தாலும் ஒப்புமை கூறும் குறிப்பு.
பூந்துருத்தி அணைந்தார் - என்க; பயனிலை முன்வந்தது ஆர்வத்தின் விரைவுக் குறிப்பு.
பூந்துருத்தி வந்தணைந்தார் - வந்து - என்றமையாலும் அரசுகள் சென்று சிவிகை தாங்கிய நிகழ்ச்சி நிகழ்ந்த இடம் நகரினுக்குப் புறமாகிய இடம் என்பது பெறப்படும். "அந்தப் பதிநின்றும் புறப்பட்டு" (2380) என முன் உரைத்ததனை இங்கு நினைவுகூர்க. III - பக். 671. "புறம்பாணை" என்றவிடத் துரைத்தவை பார்க்க.
உடன் - இருவரும் உடனாக. உடன் அணைந்தார் - "அன்பரொடு மரீஇ....ஆலயந்தொழும்" என்ற சிவஞான போதம் 12-ம் சூத்திரக் கருத்துத் தருவது. "கோபுரத்தை முன்னிறைஞ்சி" (2837).