பாடல் எண் :2840
காழியினில் வந்த கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கன்மிதப்பில் வந்தா ரடிவணங்கி
"வாழிதிருத் தொண்டென்னும் வான்பயிர்தா னோங்குதற்குச்
சூழும் பெருவேலி யானீ" ரெனத்தொழுதார்.
942
(இ-ள்.) காழியினில்...அடிவணங்கி - சீகாழியில் வந்து அவதரித்த கவுணியர் குலத்தவருடைய போரேறு போன்ற பிள்ளையாரைக் கடலின்மேலே கல்லே மிதவையாகக் கொண்டு வந்தருளிய அரசுகள் அடிபணிந்து; வாழி...எனத் தொழுதார் - வாழ்வு தரும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன்றரச் செய்தற்கு உரியதாகச் சூழும் பெருவேலிபோல நீர் ஆயினீர் என்று கூறித் தொழுதனர்.
(வி-ரை.) காழியினில் வந்த - கன்மதிப்பில் வந்தார் - முன் பாட்டில் மன்னர் - வேந்தர் என்று தலைமைபற்றிய ஒப்புமை பெறக் கூறிய ஆசிரியர், இப்பாட்டில் வந்தருளிய தன்மைபற்றிய ஒப்புமைபெறக் கூறிய கவிநலம் கண்டுகொள்க. அரசுகள் வந்த கன்மிதப்புப் போலவே காழியும் தோணியாய் மிதக்கும் தன்மைக் குறிப்புப்படக் கூறியபடியாம்.
போரேறு - ஏறுபோல்வாரை ஏறு என்றதுபசாரம்; போரேறு என்ற இத் தன்மையாற் கூறியது வாதஞ் செய்து வென்றருளிய தன்மையும், ஈண்டு அவ்வரலாறுபற்றிக் கூறும் நிலையும் குறித்தற்கு.
ஆழிமிசைக் கன்மிதப்பில் வந்தார் - "ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்த பிரான்" என இச்சொல்லும் பொருளும் உமாபதிசிவம் எடுத்தாண்டு பாராட்டினர்.
வாழி - வாழ்வாகவுள்ள; வாழ்வைத் தருகின்ற.
திருத்தொண்டென்னும்...வேலியானீர் - வினைபற்றி வந்த தொடருவமம்; தொண்டு - பயிர். பிள்ளையார் - பெருவேலி; உவம உருபு தொக்கது. ஆனீர் - ஆக்கச் சொல் உவம உருபுப் பொருளில் வந்தது. "ஆள்வாரிலி மாடாவேனோ" (திருவாசகம்).
பயிர் ஓங்குதற்குச் சூழும் பெருவேலியானீர் "ஏரினு நன்றா லெருவிடுதல் கட்ட பின், நீரினு நன்றதன் காப்பு" (குறள்) என்று பயிர் ஓங்குதற்கு வேண்டப்பட்ட உழவு - எருவிடல் - களைகட்டல் - நீர் பாய்ச்சல் - காத்தல் என்ற ஐந்தனுள் ஏனை நான்கிற்கு மேலாகிச் சிறப்புப்பற்றி இறுதியில் வைக்கப்பட்ட வேலியாகிய காவலை உவமித்தார் - உவமேயத்தினும் அச்சிறப்பினை யாப்புறுத்தற்கு.
வான்பயிர் - சிவவானில் சேரும் சிவபுண்ணியமாகிய பயிர் என்பதும் குறிப்பு; "வானோர்க் குயர்ந்த உலகம்" (குறள்).
பெருவேலி - தொண்டராகிய பெரும் பயிருக்கு ஏற்றவாறு பொருந்தும் பெரிய வேலி. சூழும் - சுற்றி வளைத்த என்றும், சூழ்ந்து - எண்ணி - அமைத்த என்றும் உரைக்க நின்றது.