பிள்ளையார் தாமுமவர் முன்றொழுது பேரன்பின் வெள்ள மனையபுகழ் மானியார் மேன்மையையும் கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும் உள்ளபரி செல்லா மொழிந்தங் குவந்திருந்தார். | 943 | (இ-ள்.) பிள்ளையார்....தொழுது - பிள்ளையாரும் அவர் முன்னே தொழுது; பேரன்பின்...மேன்மையும் - பெரிய அன்பின் வெள்ளம்போன்ற புகழினையுடைய மங்கையர்க்கரசியம்மையாரது மேம்பாட்டினையும்; கொள்ளும்....தொண்டினையும் - கொள்ளும் பெருமையினையுடைய குலச்சிறை நாயனாரது திருத்தொண்டினது சிறப்பினையும்; உள்ள பரிசெல்லாம் மொழிந்து - உள்ள தன்மையெல்லாம் சொல்லியருளி; அங்கு உவந்திருந்தார் - அத்தன்மையில் மகிழ்ந்தருளினர். (வி-ரை.) தொழுது - பெரியோர்களது வினாவுக்கு விடைகூறப் புகும்பொழுது தொழுது தொடங்குதல் உயர்ந்தோர் மரபு; 2377 - 2556 முதலியவை பார்க்க. இனிக் கூறப்புகும் அருட்பொருளின் சிறப்பு நோக்கித் தொழுது தொடங்கியருளினார் என்றலுமாம். பேரன்பின் வெள்ளம் - மிகுதிபற்றி அன்பை வெள்ளம் என்றார். மானியார் - மங்கையர்க்கரசியம்மையார்; மேன்மை - சிவநெறியிற் கொண்ட அன்பின் மேம்பட்ட நலங்கள்; அரசியார் என்ற குறிப்புமாம். இவற்றை "முன்நின் நிலை விளம்பக் கொங்கை சுரந்தவருட் கோமகள்" என்று போற்றினார் சிவப்பிரகாசர். கொள்ளும் பெருமை - எஞ்ஞான்றும் மேற்கொண்டொழுகும் பெருமைப் பண்புகள்; தொண்டு - அடிமைத் திறம். மேன்மை - தொண்டு - இவற்றின் றிறங்களைப் பிள்ளையாரது திருவாலவாய்த் (புறநீர்மை) திருப்பதிகத்திற் கண்டுகொள்க. உள்ள பரிசு எல்லாம் - உள்ளவாறு காணும் தன்மைகள் யாவையும். இவை என்றும் நிலைத்த உண்மையினியல்புகள். முன்னர்ப் "புகுந்ததெல்லாம்" (2839) என்றது நிகழ்ச்சிகள். அவற்றைச் செப்பியருளிய வரலாற்றினைத் தொகுத்து முடித்த பின், இவ்வாறு அம்மையாரது பண்பும் அமைச்சனாரது பண்பும் உரைத்தருளியது அடிமைத் திறத்திற்றிளைக்கும் அரசுகள் அறிந்து களிக்கும்பொருட்டு; இவ்வாறு அவர்களது அடிமைத்திறங்கேட்ட அளவே அரசுகள் அங்குச் சென்று தமிழ்நாடு காண்பதற்கு வாகீசர் மனங்கொண்டார் என்று முன்னர் "உரைத்தருள....தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்" (1665) எனவும், போக்கும் வரவும் கேட்டபோது "உவந்தார்" (1664) எனவும் கூறியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. அவ்விருவர் பணியினைப் பற்றியே "இவர் பணியு, மந்நலம் பெறுசீ ராலவா யீசன்" (தேவா) என்று பிள்ளையார் இறைவரைச் சிறப்பித்தமை காண்க. அங்கு - மொழிந்த அத் தன்மையின்கண்; அவ்விடத்து என்றுரைப்பாரு முண்டு. |
|
|