"தண்ட கத்திரு நாட்டினைச் சார்ந்துவந் தெம்பிரான் மகிழ்கோயில் கண்டு போற்றிநாம் பணிவ"தென் றன்பருக் கருள்செய்வார் காலம்பெற் றண்ட ருக்கறி வரும்பெருந் தோணியி லிருந்தவ ரருள்பெற்றுத் தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத், தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார், | 960 | (இ-ள்.) தண்டகத் திருநாட்டினை.....அருள் செய்வார் - "தண்டகத்திருநாடு" என்னப்படும் தொண்டைநாட்டினைச் சார்ந்து சென்று நமது பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருக்கோயில்களைக் கண்டு துதித்து நாம் வணங்குவோம் என்று அன்பர்களுக்கு அருளிச் செய்வாராய்; காலம் பெற்று....அருள் பெற்று - உரிய காலத்தில் நேர்பட்டுத் தேவர்களுக்கும் அறிவரிதாகிய பெருந் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் இறைவர்பால் அருள்விடை பெற்று; தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட திருத்தொண்டர்கள் தம்முடனே சூழ்ந்துவரப் புறப்பட; தொடர்ந்து........உரை செய்வார் - தாமும் உடன் வரும்பொருட்டுத் தொடர்ந்து எழுந்த தாதையாருக்கு உரை செய்வாராய், (வி-ரை.) தண்டகத் திருநாடு - திருத்தொண்டை நாடு; தண்டகன் - என்னும் அரசன் ஆண்டமையால் தண்டகநாடென்று பேர் வழங்கலாயிற்று. இவ்வாறே இந்நாடு அவ்வக்காலத்து ஆட்சி புரிந்த அரசர் பெயரால் துண்டீரன் ஆண்டமையால் துண்டீர நாடு என்றும், தொண்டைமான் ஆண்டமையால் தொண்டைநாடென்றும் வழங்கப்படும் என்க. "அண்டரும் புகழ்துண் டீர னாண்டுதுண் டீரநா டாய்த், தண்டகன் பின்ன ராண்டு தண்டக நாடாய்ப் பின்னர்த், தொண்டைமா னாண்டு தொண்டை நாடெனத் துலங்கிற் றன்றே, பண்டயன் படைப்புத் தொட்டுப் பயிலுமித் தொண்டை நாடு" என்ற விநாயக புராணம் காண்க. "தண்டகத் திருநாட்டினை....பணிவது" என்று - இது பிள்ளையார் அடியார்களுக்கு அருளியது. தொண்டை நாட்டிற் சென்று கோயில்களைப் பணிவோம் என்றதாம். பணிவது - பணிந்து செல்வது எமது கருத்து என்றபடி; எமது கருத்து என்பது குறிப்பெச்சம். அண்டருக் கறிவரும் பெரும் தோணி - தோணியே பிரணவமாம். பிரணவப் பொருள் தேவருமறிவரிது என்பது குறிப்பு. தேவர்களுட் பெரிய பிரமதேவன் பிரணவப் பொருளறியாமையால் முருகப் பெருமானால் குட்டுப்பட்டுச் சிறைப்படுத்தப் பெற்ற கந்தபுராண வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. தோணியிலிருந்தவர் அருள் பெற்று - தொண்டைநாடு செல்வதற்கு அருள்விடை பெற்று. தொடர்ந்து எழும் - தம்முடன் தொடர்ந்து வருவதற்கு ஒருப்பட்டு எழுந்து போந்த. உரை செய்வார் - முற்றெச்சம். உரை செய்வாராகி - எனச் சொல்லி என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. சார்ந்து நந் தம்பிரான் - என்பதும் பாடம். |
|
|