கன்னி மாவனங் காப்பென விருந்தவர் கழலிணை பணிந்தாங்கு "முன்ன மாமுடக் கான்முயற் கருள்செய்த" வண்ணமு மொழிந்தேத்தி மன்னு வார்பொழிற் றிருவடு கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப் பின்னு வார்சடை யார்திரு வக்கரை பிள்ளையா ரணைவுற்றார். | 963 | (இ-ள்.) கன்னி.......பணிந்து - பெரிய கன்னிவனத்தைத் தமது காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய இறைவரது இரண்டு திருவடிகளையும் பணிந்து; அங்கு......ஏத்தி - அப்பதியிலே முன்னாளில் முடங்கிய காலோடு முயலாகச் சபிக்கப்பெற்ற மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருளிச்செய்த தன்மையினையும் பதிகத்தில் மொழிந்து துதித்தருளிச் சென்று; மன்னு....வணங்கிப் போய் - நீண்ட சோலைகள் பொருந்திய திருவடுகூரினைச் சென்று வணங்கிப் போய்; பின்னு....அணைவுற்றார் - பிள்ளையார் பின்னுகின்ற நீண்ட சடையினையுடைய இறைவரது திருவக்கரை என்ற பதியினை அணைந்தனர். (வி-ரை.) கன்னி மாவனம் - அம்மையார் தவஞ் செய்து அருள் பெற்ற இடமாதலின் இது கன்னிவனம் என்ற இப்பெயர் பெற்றது. இதுபோலவே காமாட்சியம்மையார் தவஞ் செய்த பதியினை "அம்பிகா வனமாந் திருவனம்" (1136) என்றது காண்க. காப்பு - காவல் புரியும் இடம். "காப்புத் திருத்தாண்டகம்"; "கயிலாயமுன் கண்ணுதலான் றன்னுடைய காப்புக்களே" (தேவா). முன்னம்...வண்ணமும் மொழிந்து - பிள்ளையார் பதிகம் "முன்ன நின்ற முடக்கான முயற்கருள் செய்து" (1) என்றது காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பும் தல விசேடமும் பார்க்க. திருவடுகூர் - திருக்கரை - இவை பிள்ளையர் தொண்டைநாடு - காஞ்சிபுரம் -செல்லும் வழியிடை உள்ளன; அவர் சென்றருளிய வழியையும் குறிப்பன. வக்கரை - தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. இது திருவடுகூரின் வடக்கில் உள்ளது. தில்லை முதலாக முன் கூறியனவும் இப்பாட்டிற் கூறியனவும், இனி வரும் பாட்டுக்களிற் கூறுவனவும் வழியிடை வரிசைபெற அமைந்தமை காண்க. |
|
|