பாடல் எண் :2863
ஆதி தேவரங் கமர்ந்தவீ. ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார் திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய் யுணர்வுட னுருகிய விருப்போடும்
கோதி லாவிசை குலவு"குண் டைக்குறட் பூத"மென் றெடுத்தோதி;
965
(இ-ள்.) ஆதி......அணைபவர் முன்னே - ஆதிதேவராகிய சிவபெருமான் அத் திருநகரினுள் விரும்பி வீற்றிருந்தருளிய திருவீரட்டானத்தினைச் சென்று அணைபவராகிய பிள்ளையார் முன்பு; பூதம்....காட்ட - பூதகணங்கள் பாடநின்றாடும் இறைவர் தமது திருநடனத்தினைக் கட்புலப்படும்படி காட்டவே; வேத பாரகர்.... விருப்போடும் - வேதம் வல்ல பிள்ளையார் வணங்கி மெய்யுணர்வினுடனே மனமுருகிய விருப்பத்தினோடு; கோதிலா.... ஏடுத்தேத்தி - குற்றமில்லாத இசையுடன் கூடிய "குண்டைக் குறட்பூதம்" என்று தொடங்கித் துதித்து;
(வி-ரை.) அங்கு - அத்திருவதிகை நகரின்கண்.
வீரட்டானம் - திருக்கோயிலின் பெயர்.
அணைபவர் - முன்னே - நடம் - காட்ட - என்க. நடம் காட்ட - பிள்ளையார் திருக்கோயிலுட் சென்று காண்பதன் முன்னே அங்கணையும் வழியிடையே காணும்படி காட்ட; "எதிர்காட்சி கொடுத்தருள" (258); "சென்றவர் காணா முன்னே யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) முதலியவை காண்க.
முன்னே நடம் புலப்படும்படி காட்டினார் - என்பது "ஆடும் வீரட்டானத்தே" என்ற பதிகத்தின் மகுடத்தானும் கருதப்படும். "வீராட்டனத்தே" என்றதனால் அத்திருக்கோயிலுக்குப் புறத்தே இப்பதிகம் போற்றப்பட்டதென்பதும், "ஆடும்" என்றதனால் நடம் கண்ட காட்சி என்பதும் தெரிக்கப்படுதல் காண்க. இவ்வாறு முன்பே காட்டக் கண்டது பிள்ளையாரது திருவடி மறவாத உறைப்பினால் ஆயது என்க. முன்னே - முன்பு என்றும், அவர் வந்து காண்பதற்கு முன் என்றும் உரைக்க நின்றது.
வேத பாரகர் - பாரம் - கரை; கர் - அடைந்தவர்; வேதத்தின் கரையை அடைந்தவர்.மெய்யுணர்வுடன் - ஆடற் காட்சி கண்டு திளைத்து நின்ற மெய் உணர்வு மாறாது.
குண்டைக் குறட்பூதம் - சிவ பூதகணங்கள்; இது பதிகத் தொடக்கம். "கோடி கோடி குறட்சிறு பூதங்கள், பாடி யாடும் பரப்பது பாங்கெலாம் (16).
கோதிலாவிசை - ஆடல் கண்டு காட்டும் வகையால் கோது(மலம்) நீக்கும் தன்மை வாய்ந்த என்பதும் குறிப்பு.
வேதபாலகர் - மெய்யுருகியவன்புறு - எடுத்தேத்தி - என்பனவும் பாடங்கள்.