சென்றணைந்துசிந் தையின்மகிழ் விருப்பொடு திகழ்திருவாமாத்தூர்ப் பொன்ற யங்குபூங் கொன்றையும் வன்னியும் புனைந்தவ ரடிபோற்றிக் "குன்ற வார்சிலை" யெனுந்திருப் பதிகமெய் குலவிய விசைபாடி நன்று மின்புறப் பணிந்துசெல் வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
| 967 | (இ-ள்) சென்று அணைந்து....அடிபோற்றி - சென்று அணைந்து மனத்துள் மகிழ்ச்சிகொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரின்கண் பொன்போல விளங்கும் அழகிய கொன்றையினையும் வன்னியினையும் சூடி யெழுந்தருளிய இறைவரது திருவடிகளைத் துதித்து; "குன்றவார் சிலை"...செல்வார் - குன்றவார்சிலை என்று தொடங்கும் திருப்பதிகத்தினை மெய்ம்மை விளங்கும் இசையுடனே பாடி மிகவும் இன்பம் பொருந்த வணங்கிச் செல்பவராகிய பிள்ளையார் திருக்கோவலூர் நகரினைச் சேர்ந்தருளினர். (வி-ரை) பொன் தயங்கு - தயங்கு - உவமவுருபு. பூ - அழகிய; கொன்றைப் பூவும் என்று கூட்டியுரைப்பினு மமையும். வன்னி - இத் தலமரமாதலும் குறிப்பு. குன்றவார் சிலை எனும் - குன்றவார் சிலை என்று தொடங்கும். மெய்குலவிய இசை - தன்மைநவிற்சியிற் பல உண்மைகளும் புலப்படும் இயலும் இசையும் பொருந்த; பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க. நன்றுமின்புற - மிகவும் இன்பம் பொருந்த. நன்றும் - மிகுதிப்பொருள் குறித்து நின்றது; நன்மை பயக்கும் என்ற குறிப்புமாம். இக்குறிப்பில் தீமையும் அழிவும் தரக்கூடிய ஏனைய இன்பங்கள் போலன்றி நன்மையே தரும் இன்பம் உயிர்களுக்குப் பொருந்தும்படி என்க. செல்வார் - சேர்ந்தார். என்று கூட்டுக. செல்வார் - செல்வாராகிய பிள்ளையார். வினைப்பெயர். திருக்கோவலூர் நகர் - நடுநாட்டின் ஒரு பகுதியாகிய முனைப்பாடி நாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய சேதிநாட்டின் அரசர் வாழும் தலைநகருமாதலின் அக்குறிப்புப் பெற நகர் என்று கூறினார்; திரு - என்றதனால் அஃது இறைவரது பதியாதலும் குறிப்பித்தபடி. மெய்ப்பொருணாயனார் புராணத்தினுள் "சேதிநன் னாட்டி னீடு திருக்கோவலூர்"(467) என்றதன்கீழ் உரைத்தவை பார்க்க; (1 - பக். 578 - 579).கடைச்சங்கத்துப் புலவர் பெருமான் கபிலராற் பாடப்பட்டவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய மலயமான் திருமுடிக்காரி என்னும் அரசன் மலையமானாட்டிற் பெண்ணையாற்றின் கரையிற் றிருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான் எனவரும் பத்துப் பாட்டுப் பழைய வரலாறும் காண்க. குலவிய இசை - இப்பதிகப் பண்ணாகிய சீகாமரப் பண்ணின் சிறப்பும் குறிப்பதென்பர். |
|
|