பாடல் எண் :2868
அண்ணா மலையங் கமரர்பிரான் வடிவு போன்று தோன்தலுங்
கண்ணாற் பருகிக் கைதொழுது கலந்து போற்றுங் காதலினால்
"உண்ணா முலை"யா ளெனும்பதிகம் பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா மலையைச் சென்று சேர்வுற்றார்.
970
(இ-ள்) அண்ணாமலை....தோன்றுதலும் - திருவண்ணாமலை அவ்விடத்தினின்று காணும் காட்சி தேவதேவராகிய சிவபெருமானது திருவடிவம்போலத் தோன்றுதலும்; கண்ணாற் பருகி...பாடி - கண்களால் ஆரக்கண்டு பருகுதல்போல நுகர்ந்து கைகளாற் றொழுது கலந்து, போற்றுகின்ற பெருவிருப்பினாலே "உண்ணாமுலை யுமையாள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி; தொண்டருடன் போந்து.....சேர்வுற்றார் - தொண்டர்களுடனே போய்த் தெளிந்த நீரினைத் தலையிற் சூடியவராகிய இறைவரது திருவண்ணாமலையினைச் சென்று சேர்ந்தருளினர்.
(வி-ரை) அண்ணாமலை....தோன்றுதலும் - அரியும் அயனும் காணாவண்ணம் வானமும் நிலமுங் கடந்த பேரொளியுடைய அழற்றூணாகி நின்ற இறைவர் அத்திருவடிவத்தினையே இம்மண்ணுலகத்தவர்கள் காணும் வண்ணம் இம்மலையாகக் குறுகிய வடிவமாகக் கொண்டருளினர் என்பது வரலாறாதலின் அங்கு நின்றும் கண்டபோது பிள்ளையாருக்கு அம்மலை இறைவரது வடிவேபோலக் காட்சிப்பட்டது என்றார்; ஏனையுலகத்தவர் மண்ணும் கல்லும் குவிந்ததொரு குவியலாகக் காண்பர்; ஆனால் ஞானிகள் இம்மலை தன்மையால் இறைவரேயாகக் காண்பர்; பிள்ளையாரோ, அதனைத் தன்மையான் மட்டுமன்றி வடிவத்தாலும் இறைவர் எனக் கண்டருளினர். "தழலாய், மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர், விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப" (கந்த - அடிமுடிதேடு படலம் - 94).
அங்கு தோன்றுதலாவது - திருவண்ணாமலையைச் சுற்றி வலம்வரும் பேறுபெற்ற அன்பர்கள் இந்நாளிலும் அதன் காட்சியைப் பல பகுதிகளில் மாதொருபாகர் - உமா மகேசுவரர் - சோமாக் கந்தர் என்று பலவாறு இறைவரது திருவடிவமாகக் காண்பர்; திருவறையணிநல்லூர் மலையினின்றும் காண்போர்க்கு அது சிவபெருமானது இலிங்கத் திருமேனிபோன்று விளங்கும் நிலை காணப்படுதல்.
கண்ணாற் பருகி - காட்சி வாயிலாக நுகர்ந்து பெற்ற ஆரா இன்பம் வாயின்வழி உண்டு பெற்ற இன்பம்போலத் தேக்கி. "இரண்டு கண்ணாலு மம்பொற் புற்றி னிடை யெழுந்த, செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தி னருளைப் பருகித் திளைக்கின்றார்" (ஏயர் - 311); "பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு" (மேற்படி 308); "என்பொன் மணியை யிறைவனை யீசனைத், தின்பன் கடிப்பன் றிருத்துவன்" (திருமந் - 9 - 32); "கரும்புந் தேனும் கலந்ததோர் காயத்தி, லரும்புங் கந்தமு மாகிய வானந்தம்" (மேற்படி 328)
கலந்து - இங்குநின்று கண்ட காட்சியில் அங்குச் சென்றாற்போலவே மனவொருமைப்பாடு பெற்று; கண்களின் செயலும் கைகளின் செயலும் முன்கூறினார்; இவற்றின்மூலம் கண்டு இயக்கிய மனம் இவற்றோடு அமையாது முழுதும் அங்குக் கலந்தது என மனத்தின் றொழில் இதனாற் கூறப்பட்டது.
போற்றும் காதலினாற் - பாடி - கண்ணும் கையும் மனமும் தொழிற்பட, வாக்கின் றொழிலும் பயனும் பெறக் காட்டும் பெருவிருப்பத்தினாலே பதிகம் பாடினார் என்பது.
உண்ணாமுலையா ளெனும் - "உண்ணாமுலை உமையாள்" என்று தொடங்கும்.
தெள் நீர் - நீர்ப் பெருக்கினைச் சடையிற்றேக்கிச் சிறிதாக விடப்படுதலிற் றெளிந்ததுபோலும் என்பது குறிப்பு. தெளிவிக்கும் நீர் என்று பிறவினையாக்கி உரைத்தலுமாம்; தெளிவித்தலாவது தோய்ந்தாரது மலத்தைக் கழுவித் தூய்மை செய்தலால் அறியாமை போக்கி அறிவு விளங்கச் செய்தல்; தெள்ளுதல் - தெறித்தல் - இடப் பெயர்ச்சி செய்தல் என்று கொண்டு துன்பநீக்கும் நீர் என்றலுமாம்; "உள்ளத் துறுதுய ரொன்றொழியா துள்ளவெல்லாந், தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ"(திருவா). இப்பொருள்களில் பகீரதனுக்காக இறைவர் கங்கையைத் தாங்கி விடுத்த வரலாற்றுக் குறிப்பும் காண்க. தெண்ணீர் முடியார் - மலை - நீர்கொண்ட மேகமண்டலத்தைச் சிகரங்கள் பொருந்தும் என உயர்ச்சிபற்றிய குறிப்பும் காண்க. நீர் - நீர் பொருந்திய மேகமண்டலம். ஆர்தல் - பொருந்துதல். முடி - சிகரம்; உச்சி. "மண்ணார்ந்தன அருவித் திரள்" என்றும், "விடுகொம் பொடுதீண்டித் தூமா மழை...துளிசிதற" என்றும், "மழை தவழும் பொழில்" என்று மிவ்வாறுவரும் பதிகமும் இக்குறிப்புத் தருவது காண்க.