பாடல் எண் :2874
வார ணத்தி னுரிபோர்த்த மைந்த ருமையாண் மணவாளர்
ஆர ணத்தி னுட்பொருளாய் நின்றார் தம்மு னணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும் நண்ணற் கரிய கழல்போற்றுங்
காரணத்தின் வருமின்பக் கண்ணீர் பொழியக் கைதொழுவார்.
976
(இ-ள்) வாரணத்தின்...அணைந்திறைஞ்சி - யானையின் உரியைப் போர்த்த வல்லமையுடையாரும், உமையம்மையாரின் மணவாளனாரும், வேதங்களினுட்பொருளாய் நின்றவரும் ஆகிய இறைவரது திருமுன்பு சேர்ந்து வணங்கி; நாரணற்கும்...காரணத்தின் வரும் - திருமாலுக்கும் பிரமதேவர்க்கும் சேர்தற்கரிய திருவடிகளைத் துதிக்கின்றதனால் வருகின்ற; இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழதார் - இன்பமாகிய ஆனந்தக் கண்ணீர் பொழியக் கைகூப்பித் தொழுதருளினர்.
(வி-ரை) உரிபோர்த்த மைந்தர் - மைந்தர் - வல்லாளர். மைந்து - வல்லமை; இது சங்கார காரணராந் தன்மையினையும், உமையாள் மணவாளர் என்றது சிருட்டி காரணராந் தன்மையினையும், ஆரணத்தின் உட்பொருளாய் நின்றார் என்றது சிருட்டியில் வரும் உயிர்களுக்கு அவ்வவற்றின் றிறத்துக்கேற்ப ஞானங் கொடுத்து அறியாமை நீக்கி உய்வதற்கு அருள்புரியும் தன்மையினையும் உணர்த்தின.
ஆரணத்தின் உட்பொருளாய் நின்றார்
- உருத்திரபசுபதி நாயனார் புராணத்தினுரைத்தவை பார்க்க. வேதம் எவ்வெப் பக்குவமுடைய எல்லாவுயிர்க்கும் பொதுநூலாதலின் எல்லாக் கடவுளடைிரப்பற்றியும் எடுத்தோதிச் சிவனை உள்ளிடத்தில் வைத்துக் கூர்ந்து நோக்கி யறியுமாறு வைத்துக் கூறும் என்ற குறிப்புப்பெற வைப்பார் ஆரணத்தின் பொருளாய் என்னாது உட்பொருளாய் என்றார்; தேவர் முனிவர்க்கு வேதம் ஓதுவித்த பதியாதலும் குறிப்பு.
ஆரணத்தி னுட்பொருளாய் நின்றார் - சங்காரமும் சிருட்டியும் பெற வைத்தமையின் ஐந்தொழிலும் பெறுவித்தபடியாம். "கூத்தீர்" என்ற பதிகக் குறிப்புக் காண்க. அவ்வாறு வரும் உயிர்களுக்கேற்றவாறு இறைவர் மறைஞானமுணர்த்த உணர்ந்து அவை வழிபட்டு உய்தி பெறுகின்றன என்றது. "பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி, யேத்தா தாரிலை யெண்ணுங்கால்" எனும் பதிகத்தாற் பெறப்படுதலும் காண்க. இனி இப்பதியில் நிகழவுள்ள அற்புத அருட்செயலின்கண், அமணர் இழித்துரைத்த மாசறுத்து அறிவுறுத்தியருளி சங்காரநிலைக் குறிப்பும் (2876 - 2880), ஆண்பனைகள் குறும்பையினை அருளிய புனருற்பவநிலைக் குறிப்பும் (2881), பனைகளுக்கும் பாசநீக்கமும் சிவப்பேறும் அருளிச் சைவத்தின் உட்பொருளாகிய சிவனருட் குறிப்பும்(2879 - 2881) மறையாகிய திருப்பதிகத்தின் வாய்மையினால் விளைதல் காணவுள்ள குறிப்பும் இம்மூன்று தன்மைகளாற் பெறவைத்த நலமும் கண்டுகொள்க. "போக்கு வரவு புரிய" (2-ம் சூத். போதம்) என்றவிடத்து மாபாடியத்தில் உரைத்தவை இங்கு நினைவுகூர்தற்பாலன. "பந்தம்வீடு தரும் பரமன்"(300) என்றவிடத்துரைத்தவையும் பார்க்க. "அந்தமாதி"(1), "போக்கு வரவு" (2) என்னும் கருத்துக்கேற்ப ஈண்டும் "வார ணத்துரி போர்த்த மைந்தனார்" எனச் சங்காரக் குறிப்பை முற்கூறியதும் கருதத் தக்கது.
கழல்போற்றும் காரணத்தின் வரும் இன்பக்கண்ணீர் - மாயாகாரியங்களின் தொடர்ச்சிபற்றியே மக்களுக்கு உலகிற் பெரும்பான்மை இன்பக்கண்ணீர் வரும். அவ்வாறல்லாது இங்கு இறைவர் கழல்போற்றும் தொடர்புபற்றி வந்தது என்று வேறு பிரித்துக் கூறியபடி. அரியயனுக்கும் எட்டுதற்கரிய கழல் போற்றக்கிடைத்த எளிமையும் அருமையும்பற்றிக் கண்ணீர் வந்ததென்க. "வழுத்தியுங் காணா மலரடி யிணைகள், வழுத்துதற் கெளிதாய்"(திருவா - போற்றித் திருவகவல்); துன்பினாலும் கண்ணீர் வருமாதலின் அதனை நீக்க இன்பக் கண்ணீர் என்றார்.