பாடல் எண் :2875
தொழுது விழுந்து பணிந்தெழுந்து சொன்மா லைகளாற் றுதிசெய்து
முழுது மானா ரருள்பெற்றுப் போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப் போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி யொருதொண்ட ரமணர் திறத்தொன் றறிவிப்பார்;
977
(இ-ள்) தொழுது...போந்து வைகி - முன்கூறியவாறு கைகள் கூப்பித் தொழுது நிலமுற விழுந்து வணங்கி எழுந்து திருப்பதிகங்களாற் றுதித்து எல்லாமாய் நின்ற இறைவரது திருவருள் பெற்றுப் புறம்போந்து எழுந்தருளியிருந்து; முதல்வர்தமை...அமர்வார் முன் - முதல்வரைக் காலங்கள் தோறும் புகுந்து வணங்கித் துதித்து அங்கே விரும்பி யிருப்பவராகிய பிள்ளையார் திருமுன்பு; அழுது...அறிவிப்பார் - ஒரு தொண்டர் அழுது வணங்கி நின்று அமணர்களது தன்மைபற்றி ஒரு செய்தியை அறிவிப்பாராய்;
(வி-ரை) தொழுது
- முன்பாட்டிற் கூறியபடி கைதொழுது.
தொழுது...துதிசெய்து - வினையெச்சங்கள் வழிபாட்டின் பகுதிகளைத் தனித்தனி எடுத்துக்காட்டும் நயம் கண்டுகொள்க.
சொன்மாலைகளாற் றுதிசெய்து - இப்பதிகங்கள் கிடைத்தில.
அமர்வார் - விரும்பி வீற்றிருப்பவராகிய பிள்ளையார்.
அழுது - சமணர் இழித்துரைக்கும் சிவநிந்தையைக் கேட்கமாட்டாத துயரத்தால் அழுது; ஆனந்தபாக்ஷ்பம் என்று உரைப்பாமுண்டு.
அமணர் திறத்து ஒன்று - அமணரது தீய தன்மையினால் நிகழ்ந்ததொரு செய்தி. திறத்து - திறத்தால் நிகழ்ந்த.
அறிவிப்பார் - அறிவிப்பாராகி - முற்றெச்சம். அறிவிப்பார் - புகல என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
அருள் பெற்று வைகி வணங்கி - என்பதும் பாடம்.