விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப் பதனில் விமல ரருளாலே "குரும் பையாண் பனையீனு" மென்னும் வாய்மை குலவுதலால் நெருங்கு மேற்றுப் பனையெல்லா நிறைந்த குலைக ளாய்க்குரும்பை யரும்பு பெண்ணை யாகியிடக் கண்டோ ரெல்லா மதிசயித்தார். | 980
| (இ-ள்) விரும்பும்....குலவுதலால் - மேன்மை விரும்புகின்ற திருக்கடைக்காப்பிலே இறைவரது திருவருளினாலே "குரும்பைகளை ஆண்பனைகள் ஈனும்" என்னும் வாய்மையானது பொருந்தி விளங்குதலாலே; நெருங்கும்...ஆகியிட - நெருங்கிய அந்த ஆண்பனைகள் எல்லாம் நிறைந்த குலைகளையுடையனவாகிக் குரும்பை பொருந்தும் பெண்பனைகளாக மாறியிடவே; கண்டோர் எல்லாம் அதிசயித்தார் - கண்டவர்கள் எல்லாரும் அதிசயப்பட்டார்கள். (வி-ரை) மேன்மை விரும்பும் என்க; முன் இசையிற் பெருக (2877) என்றவிடத் துரைத்தவாறு வரும் மேன்மைகளை எல்லாம் விரும்பி யருளி வைத்த; திருக்கடைக்காப்பில் பதிகப் பயன் கூறும் மரபு குறித்தது; "சொல் விரும்புவார் வினைவீடே" என்ற பதிகம் காண்க. விமலர் அருளாலே 'குரும்பை யாண்பனை யீனும்' என்னும் வாய்மை குலவுதலால் - "குரும்பை யாண்பனை யீனும்" என்பது பதிகம். அது தவறுதலில்லாத - பொய்யாத - வாய்மை எனப்பட்டது; அவ்வாய்மைத் தன்மைஅருளாலே அத்திருவாக்கிற் குலவிய காரணத்தால் என்பதாம்; "போதியோ என்னும் அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்"(2986) என்பதும், "மெய்த்தன்மை விளங்கு திருச்செவி"(2376) என்றதும் பிறவும் பார்க்க. குரும்பை யாண்பனை ஈனும் என்னும் - "குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்பது பதிகம்; ஆண்பனை குரும்பைக்குலை யீன் .ஓத்தூர் என்றதாம். ஏற்றுப் பனை - ஆண்பனை; பெண்ணை - பெண்பனை. ஏற்றுப் பனைகள் குரும்பை யரும்பு பெண்ணையாகியிட - தாவரங்களிலும் வரும் மலட்டுத் தன்மை முதலிய குறைபாடுகளை மாற்றுதற்கு மருத்துவ முறைகளை உழவு நூலார் சிலர் காண்கின்றார்கள்; ஆயின் இங்கு அச்செயல் திருவருட் பதிகத்தினாலே உடனே பயன் விளைத்தது அற்புதமென்க; அதிசயித்தார் - அதிசயத்தைக் கட்புலப்படக் கண்டதுவேயன்றி அதன் காரணம் திருப்பதிகமே என்பதனையும் கண்டனர்.
|
|
|