சேணு யர்ந்த வாயினீடு சீர்கொள் சண்பை மன்னனார் வாணி லாவு நீற்றணி விளங்கி டமனத்தினிற் பூணு மன்பர் தம்முடன் புகுந்திடப்புற த்துளோர் காணு மாசை யிற்குவித்த கைந்நி ரையெ டுத்தனர். | 990
| (இ-ள்) நீடு சீர்கொள் சண்பை மன்னனார் - நீடிய சிறப்புடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார்; வாணிலாவு....புகுந்திட - ஒளிபொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியில் விளங்கிட மனத்துள்ளே சிவன்பாலன்பே பூணாகக் கொண்ட அடியவர்களுடனே; சேணுயர்ந்த வாயில் - வானளவுயர்ந்த நகரத்து மதிற்புற வாயினுள்ளே புகுந்திட - புகுந்தபோது; புறத்துள்ளோர்....எடுத்தனர் - இவ்வளவில் நகர்ப் புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள் பிள்ளையாரைக் காணும் ஆசையினாலே வரிகையாகக் கைகளைத் தலைமேற் கூப்பினர். (வி-ரை) சேணுயர்ந்த வாயில் - இது புறத் திருமதில் வாயில். கோயில் வாயில் பின் (2891) வருதல் காண்க; இம் மதிற்றிருவாயிலின் சிறப்பினை "ஆங்கு வள ரெயிலினுடன் விளங்கும் வாயி லப்பதியில் வாழ் பெரியோ ருள்ளம் போல, வோங்குநிலைத் தன்மையவாய்...தீங்குநெறி யடையாத தடையு மாகி...."(1165) என்று முன் எடுத்துக் கூறியதை நினைவுகூர்க; சேணுயர்ந்த என்ற குறிப்புமிது;சேண் - சேணில்; வானில். வாயில் - வாயிலின்கண்; ஏழனுருபு விரிக்க. வாயிலில் புகுந்திட என்க. நீற்றணி மேனி மேல் விளங்கிட மனத்தினில் அன்பு பூணாக வுடையவர் என்க. "மாசிலாத மணிதிகழ் மேனிமேற், பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்" (141); இவர்கள் பிள்ளையாரை எதிர்கொள்ள வந்த காஞ்சி வாழும் திருத்தொண்டர்கள்; இவர்களே பிள்ளையாரை உடனாக நகரின் உள்ளே அழைத்துச் சென்றவர்கள் என்பது. புறத்துளோர் - காணுமாசையில் - புறத்துளோர் - தொண்டர் கூட்டத்தின் புறத்தே நின்றவர்களும் நகர்ப்புறத்தினின்றும் வந்து கூடியவர்களும். காணுமாசையில் - பிள்ளையார் சிவிகையினின்றிழிந்து தொண்டர் கூட்டத்தினுள் அவர்கள் சூழச் சென்றருள்கின்றாராதலின் இவர்கள் அருகில் நெருங்கிக் காண மாட்டாது அந்த ஆசையினாற் கைகளைக் கூப்பி வணங்கினர் என்பதாம். நிரை குவித்த கை எடுத்தனர் - வரிசைபெறக் கைகளை மேலே கூப்பி வணங்கினர்; எடுத்தல் - மேற்கூப்புதல். பூணும் அன்பர் - அன்பினையே பூணாகக் கொண்டவர். மனத்தினாற் பூணும் அன்பர் - என்று பாடங்கொண்டு மனங் காரணமாகப் பொருந்தும் மொய்யன்பினையுடைய அடியார்கள் என்றும், மனத்திற் பொருந்திய என்றும் உரைத்தனர் முன் உரைகாரர்கள். வானநீடு - விளக்கிட - என்பனவும் பாடங்கள்.
|
|
|