பாடல் எண் :2893
பலமுறையும் பணிந்தெழுந்து பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு மணிவாயான் "மறையா"னென்
றுலகுய்ய வெடுத்தருளி யுருகியவன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாள நிரம்பியநீர் மையினிகழ,
995
(இ-ள்) பலமுறையும் பணிந்து எழுந்து - பலமுறைகளும் பணிந்து நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்து; பங்கயச் செங்கை முகிழ்ப்ப - தாமரை போன்ற கைகள் குவிய; மலரும் முகம் அளித்த - மலர்கின்ற திருமுகத்திற் றோன்றிய; மணிவாயான் - அழகிய ஒளிவிளங்கும் வாக்கினாலே; மறையான்...எடுத்தருளி - "மறையான்" என்று உலகம் உய்யும்பொருட்டுத் தொடங்கியருளி; உருகிய அன்பு என்பு உருக்க - மனமுருகிய அன்பு எலும்பினையும் உருக்குவதாக; நிலவும்....நிகழ - பொருந்திய பண்ணும் முதற்றாளமும் கூட நிரம்பிய தன்மையில் உளவாக,
(வி-ரை) பலமுறையும் பணிந்தெழுந்து - மூன்றுமுறை, ஐந்துமுறை முதலாகப் பதினொன்று வரை விதித்த முறையின் மிக்கு அளவிலடங்காதபடி பல முறையும் என்பது காதலின் மிகுதி விதி கடந்து செலுத்தும் நிலை குறித்தது.
செங்கைப் பங்கயம் முகிழ்ப்ப மலரும் முகம் அளித்த - பங்கயம் என்றதற்கேற்ப முகிழ்ப்ப என்றார். முகிழ்த்தல் - முகைபோலக் கூப்புதல்; கைகளைப் பங்கயமென்றது உருவும் திருவும் பற்றிய ஒப்புமை கருதி வந்தது. "பங்கயத்தின் செவ்விபழித்து வனப்போங்கும் செங்கை" (2070) என முன் கூறியதும், பிறவும் காண்க. பங்கயம் என்பதனை முகம் என்றதுடனும் கூட்டுக. கையும் முகமும் ஆகிய தாமரைகளிரண்டனுள் ஒன்று குவிய ஒன்று மலர என்ற நயமும் அம்மையின் மதியொளியாற் கைத்தாமரை முகிழ்ப்பக் கம்பரின் முதிரொளியால் முகத்தாமரை மலர்ந்த தென்ற குறிப்புப்பட வந்த கவிநயமும் காண்க. இறைவராகிய ஞாயிற்றின் முன் தாமரைகள் ஒன்று முகையாக ஒன்று மலர வரும் என்ற ஞானசாத்திர உண்மைக் குறிப்புத் தொனிக்கக் கூறியபடியும் காண்க; "முந்திரவி எதிர்முளரி யலர்வுறுமொன் றலர் வான் முகையாமொன் றொன்றுலரு முறையினாமே"(சிவப் - 17).
முகம் அளித்த திருவாயான் - முகத்திற் றோன்றிய திருவாக்கினாலே. மலரு முகத்தைக் கொடுத்த திருவாயின் திருக்குறிப்புடையவன் என்றலுமாம்; "என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே"; "கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்"; "சிரித்த முகங்கண்ட கண்கொண்டு"(தேவா) முதலியவை காண்க. இறைவரது மணிவாயின் முறுவல் மலருமுகத்தை அளித்ததென்பது. "மணிவாயால் - எடுத்தருளி" என்று கூட்டியும், "வாயான்(வாயினை உடையவன்) மறையான் என்று" என்றும் உரைக்க நின்றது.
நிலவுமிசை - பதிகப் பண்ணாகிய இந்தளம்; முதற்றாளம் - ஆதி தாளம் என வழங்குவர்; நிரம்பிய நீர்மை - "குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால்"(221) என்றவிடத்து உரைத்தவாறு உரிய தகுதிகள் எல்லாம் நிரம்பிய தன்மை; ஆண்டுரைத்தவை பார்க்க; அங்கு நேர்ந்ததும் இந்தளப் பண்ணாதலும் கருதுக.