பாடினார்; பணிவுற்றார்; பரிவுறுமா னந்தக்கூத் தாடினா ரகங்குழைந்தா; ரஞ்சலிதஞ் சென்னியின்மேற் சூடினார்; மெய்ம்முகிழ்த்தார்; சூகரமு மன்னமுமாய்த் தேடினா ரிருவருக்குந் தெரிவரியார் திருமகனார்; | 996 | (இ-ள்) பாடினார் - பாடியருளினர்; பணிவுற்றார் - பணிந்தருளினர்; பரிவுறும்....ஆடினார் - அன்பினால் நிறைந்த ஆனந்தக் கூத்து ஆடியருளினர்; அகங்குழைந்தார் - மனங் குழைந்து உருகினார்; அஞ்சலி...கூடினார் - கைகளைக் குவித்த அஞ்சலியினைத் தலைமேற்கொண்டனர்; மெய்ம்முகிழ்த்தார் - உடம்பெல்லாம் மயிர்ப்புளகம் வரப்பெற்றருளினர்; சூகரமும்...திருமகனார் - பன்றியும் அன்னமுமாக உருவெடுத்து முறையே அடியு முடியும் தேடியவர்களாகிய இருபெருந் தேவர்க்கும் தெரிவரியராய் நிமிர்ந்த இறைவரது திருமகனாராகிய பிள்ளையார் (இத்தன்மையராய்); (வி-ரை) வழிபாட்டின் உளவாகிய மெய்ப்பாட்டின் "ஆடினார்" - "பணிவுற்றார்" முதலாகப் பகுதிகள் பலவற்றையும் தனித்தனி வினைமுற்றுக்களால் உணர்த்தியது இத்திருப்பாட்டின் கவிநலமாம். பரிவுறும் ஆனந்தக் கூத்து - அன்பு மிக்க காரணத்தினால் உளதாகும் ஆனந்தக் கூத்து. "மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலு மவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார்"(1055). மெய்ம்முகிழ்த்தார் - திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் கொண்டனர். சூகரம் - பன்றி. தேடினா ரிருவருக்கும் - தேடினார் வினைப்பெயர்; தேடினவர்களாகிய இருவர்; அயனும் மாலும். இப்பாட்டில் ஏனையவாகிய பாடினார் முதலியவை வினைமுற்றுக்கள். தேடினார் என்பதொன்றுமே பெயர். இவ்வாறு கூறுதல் ஆசிரியரது சிறப்பாகிய கவிநலங்களுள் ஒன்று; முன் கூறியவை பார்க்க. திருமகனார் - உபசாரம்; பால் தர உண்டு ஞானம் பெற்றமையால் மகன்மை முறை பூண்டு "ஆளுடைய பிள்ளையா" ராயினவர் (1966). |
|
|