எண்டிசையும் போற்றிசைக்குந் திருப்பதிமற் றதன்புறத்துத் தாண்டருட னினிதேகித் தொல்லைவிட முண்டிருண்ட ண்டர்மகிழ் மேற்றளியு முதலான கலந்தேத்தி ண்டுபெருங் காதலினால் வணங்கிமீண் டினிதிருந்தார். | 1001 | இ-ள்) எண்திசையும்...இனிதேகி - எட்டுத் திசைகளிலுள்ளோர்களும் போற்றுகின்றதிருத்தலமாகிய காஞ்சிபுரத்தின் புறத்திலே திருத்தொண்டர்களுடன் கூடி இனிது சென்று; தொல்லை...கலந்தேத்தி - முன்னாளில் விடத்தினை உண்டு அதனாற் கருமை பெற்ற கண்டத்தையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமேற்றளி முதலாகிய பதிகளைக் கலந்து சென்று துதித்து; மண்டு...வணங்கி - செறிந்த பெரிய காதலினாலே வணங்கி; மீண்டு இனிது இருந்தார் - திருக்கச்சி நகரின்கண் மீண்டு இனிதாக எழுந்தருளி அமர்ந்திருந்தருளினர். (வி-ரை) எண்திசையும் போற்றிசைக்கும் திருப்பதி - காஞ்சிபுரம்; அதன்புறத்து - காஞ்சியின் புறத்தில் மேற்கில் உள்ளதாதலின் மேற்றளி எனப்படும் என்ப. அண்டத் தலைவர்களான உருத்திரர் நூற்றுவர்களுள் சீகண்டர் முதலிய் உலகு காவலர் எண்மர்கள் பூசித்த தலங்கள் 118 உள்ளன; அவற்றுள் மேற்றளி என்பதொன்றாம் என்பது காஞ்சிப் புராணம் திருமேற்றளிப் படலம் (4). தொல்லை - உண்டு - என்று கூட்டுக. முன்னாளில் உண்டருளி; தொல்லை - துன்பம் என்று கொண்டு துன்பம் செய்யும் விடம் என்று கூட்டி உரைத்தலுமாம். மேற்றளியு முதலான கலந்தேத்தி - கலந்து - பல தளிகளையும் கூடிச் சார்ந்து; அமரீசத்தின் தெற்கிலும், கச்சிக்காரோணத்தின் மேல்பாலும் இந்த நூற்றுப்பதினெட்டுத் தளிகளும் உள்ளனவாக, அவற்றுள் ஒன்று திருமேற்றளியாதலின், இதனை வணங்கியேத்திய பிள்ளையார் மற்றும் அவைகளையும் கலந்தேத்தினர் என்பதாம். முதலான - என்ற கருத்துமிது. ஏத்தி - பிள்ளையாரது பதிகம் கிடைத்திலது! மீண்டு - கச்சிநகரில் மீண்டு; இனிது இருந்தார் - இனிதாகத் தங்கி எழுந்தருளியிருந்தார். இனிதேத்தி - என்பதும் பாடம். திருமேற்றளி - பிள்ளையார் பதிகம் கிடைத்திலது ! தலவிசேடம் : - திருமேற்றளி - தொண்டைநாட்டு 2-வது பதி; இதனைக் கச்சிமேற்றளி எனவும் காஞ்சிமேற்றளி எனவும் வழங்குவர்; திருமேற்றளி என்பதே ஆசிரியர் கண்ட வழக்கு (2899); இவ்வாறன்றித் திருஅனேகதங்காவதம், திருநெறிக் காரைக்காடு என்பவை கச்சிப் பெயருடன் கூட்டியே பதிகங்களுள் வழங்கப்பட்டது காண்க. சிவசாரூபம் பெறும் பொருட்டு விட்டுணுமூர்த்தி இங்கு வழிபட்டு ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளிப் பாடியருளிய பதிகத்தை கேட்ட பலத்தினால் சிவன் அருளின் வழி அதனை அடைந்தனர் என்பது காஞ்சிப் புராண வரலாறு (திருமேற்றளிப் படலம்). பதிகத்தைக் கேட்டு உருகி விட்டுணுமூர்த்தி சிவலிங்க உருவமாகி "ஓதஉருகீசுரர்" என்ற பெயருடன் இங்கு எழுந்தருளியுள்ளார்; இஃது ஒரு சந்நிதி; தலநாயகரது சந்நிதி வேறாக மற்றொரு சந்நிதியாக உள்ளது; இக்கோயிலுக்கு நேர் கிழக்கில் ஆளுடைய பிள்ளையாரும், பாடல் கேட்ட முத்தீசமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார்; ஆளுடைய பிள்ளையாரது சம்பந்தம் பற்றிக் காஞ்சியின் இப்பகுதி பிள்ளையார் பாளையம் என வழங்கப்படும். (குறிப்பு :- பிள்ளையார் திருமேற்றளியின் வழிபட்டுப் பாடியது அவர் புராணம் 1001 பாட்டிலும் அவர் பாடலைக் கேட்டுத் திருமால் உருகிச் சிவசாரூபம் அடைந்தது காஞ்சிப் புராணம் 1002-வது திருவிருத்தத்திலும் வருவது ஒரு சிறந்த பொருத்தமாதல் காணத்தக்கது.) சுவாமி - திருமற்றளிநாதர்; அம்மை - காமாட்சியம்மையார்; பதிகம் 2. இது திருவேகம்பத்திற்குத் தென்மேற்கில் கற்சாலை வழி ஒரு நாழிகை யளவில் அடையத்தக்கது. பிறபதிகளை வணங்குதல் |
|
|