பாடல் எண் :2902
அங்குள்ள பிறபதியி னரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பால்யாற்றின் புடையில்வட பாலிறைவர்
எங்குமுறை பதிபணிவா ரிலம்பையங்கோட் டூரிசைஞ்சிச்
செங்கண்விடை யுகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
1004
(இ-ள்) அங்குள்ள...வணங்கி - அவ்விடையின் உள்ள பிற பதிகளிலே திருமாலுக்கு மறிவரிய இறைவரது திருவடிகளை வணங்கி மேற்சென்று; பொங்கு புனல்...பணிவார் - பொங்கும் நீர்ப்பெருக்கினையுடைய பாலியாற்றின் அருகாக வடபுறத்திலே இறைவர் எங்கும் எழுந்தருளிய பதிகளை வணங்குவாராகி; இலம்பையங் கோட்டூர்....பாடினார் - திருவிலம்பையங் கோட்டூரினை வணங்கிச் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர்தியாச் செலுத்திய இறைவரைத் திருப்பதிகம் பாடித் துதித்தருளினர்.
(வி-ரை) அங்கு உள்ள பிற பதிகள் - அங்கு - அவ்வருகாமையில் - அணிமையில்; இவை திருக்கரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலை(சீக்காலி), வள்ளிமலை முதலாயின என்பது கருதப்படும்.
பொங்குபுனல் பாலியாற்றின் புடையில் வடபால் - பொங்குபுனல் - பெரும்பாலும் மேலே நீர்ஓட்டமின்றி ஊற்றின்மூலங் கால்களில் பொங்கி வரும் நீருடைய; இதுபற்றி முன் (1099) உரைத்தவை பார்க்க. புடையில் வடபால் - காவிரியிற் போல ஆற்றின் கரையினையே சார்ந்து செல்லாது ஆற்றின் வடபக்கம் நாட்டினுள்ளாகப் பலவிடத்தும்.
உகைத்தல் - செலுத்துதல். "பெருந்துறைப் பெருந்தோணி பற்றி யுகைத்தலும்" (திருவா); "ஏறுகந் தேறிய நிமலன்"(1 - 2- 7) என்ற பதிகக் குறிப்பு.
பிற பதிகள் - உயர்ந்தவரை - என்பனவும் பாடங்கள்.