மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம்முன்பு கனவி லேவந் தாலவனத் தமாந்தருளு மப்பர் "நம்மை யயர்த்தனையோ பாடுதற்"கென் றருளிச் செய்ய ஞாலமிரு ணீங்கவரும் புகலி வேந்தர் நடுவிருள்யா மத்தினிடைத் தொழுது ணர்ந்து, வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்; | 1009 | (இ-ள்) மாலையிடை யாமத்து....கனவிலே வந்து - மாலைப்பொழுது முற்றிய நடுயாமத்திலே பள்ளிகொண்டருளுகின்ற வேதியராகிய பிள்ளையாருடைய கனவிலே எழுந்தருளி வெளிப்பட்டு; ஆலவனத்து....அருளிச் செய்ய - திருவாலங்காட்டில் விரும்பி எழுந்தருளும் அப்பனார் "நம்மைப் பாடுதற்கு மறந்தாயோ?" என்று அருளிச் செய்யவே; ஞாலம்...உணர்ந்து - உலகம் இருணீங்கி யுய்யும் பொருட்டு அவதரித்த சீகாழித் தலைவராகிய பிள்ளையார் நள்ளிருள் யாமத்திலே தொழுதுகொண்டபடியே துயிலுணர்ந்து எழுந்து; வேலைவிடம்... விளம்பலுற்றார் - கடலில் வந்த நஞ்சினை அமுது செய்தருளிய இறைவருடைய திருக்கருணையினைப் போற்றி மெய்யுருகித் திருப்பதிகம் பாடலாயினராகி; (வி-ரை) மாலையிடை யாமம் - பகலின் இடையாமமு முளதாதலின் மாலையிடை யென்று பிரித்தொதினார். பிதினியைபு நீக்கிய விசேடணம். மாலை கழிந்த இடையாமம். இடை - முன்னைநாளுக்கும் பின்னை நாளுக்கும் இடை. யாமம்-நள்ளிரவு; "கூதிர் யாம மென்மனார் புலவர்" (தொல் - பொரு - அக - 6). ஆலவனத் தமர்ந்தருளு மப்பர் - "ஆலங்காட் டப்பர்" (புராண வரலாறு - 5) "அம்மையப்பர்" (2906); ஆலங்காட் டிறைவர் திருப்பெயர் இவ்வாறு அப்பர் என வழங்கப்படுவது; "அவிநாசி யப்பா" முதலியவை காண்க. "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று - அயர்த்தல் - மறத்தல்; "ஒரு நாள் அருளாலே அயர்த்துண்ணப் புகுகின்றார்", "எறியா தயர்த்தேன்" (சாக்கியர் புராணம் - 15); "அயர்த்தவாறே" (தேவா). திருவாலங்காட்டின் இறைவரை மறவாது வந்தடைந்தாராதலானும், அங்கு அம்மை தலையால் நடந்து எய்தித் திருவடிக்கீழ் என்றும் இருக்கின்ற நிலையினை மறவாது மனத்துட்கொண்டே பள்ளிகொள்கின்றாராதலானும், என்றும் திருவடி மறவாப்பான்மையோ ராதலானும், அயர்த்தனையோ? என்றொழியாது பாடுதற்கு என்று அடுத்துக் கூறியருளினார். மறவா நிலையேயாயினும் பாடுதல் மட்டும் மறந்தது என்றதாம்; என்னை? பதியினைக் கண்ட உடன் வணங்கிப் பாடும் நிலையினர் அது செய்யாது திருமனத்துட் கொண்ட நிலையோ டமைந்தனர். நகருள் மிதித்து அடையாமையும் மனங்கொண்டருளிப் பள்ளிகொண்டனர். இனிப் பாடுதல்தான் எப்பொழுது? என்று நினைவித்தருளியபடியாம்; இதனையே "வழுவிப் போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும்" என்று பதிகத்துப் போற்றியருளினர். ஞாலமிருள் நீங்க வரும் - இருள் - சிவனருட் டிறத்தினை மறந்து அறியாமையுட் கிடந்து பரசமயக்கோட்பட்ட உலகும் அவ்வறியாமையாகிய இருள் நீங்கிச் சிவனருள் அறியும் அறிவு பெற்று உய்யும்படி அவதரித்த. இருள் நீங்க வரும் அவர் நடு இருளிடைத் தொழுது உணர்ந்து என்ற நயமும் காண்க. நடு இருள் யாமத்தினிடைத் தொழுது உணர்ந்து - நள்ளிரவு - இறைவர் கனாவில் அருளிய காலம்; "துஞ்ச வருவாரும்"; "பகலு மிரவுஞ்சேர் பண்பினாரும்" என்ற பதிகக் குறிப்புக்கள் காண்க. தொழுது உணர்ந்து - தொழு துகொண்டபடியே துயிலுணர்ந்து; "தொழுவிப்பாரும்" என்பது பதிகம்; உணர்ந்து - துயிலுணர்ந்து; கனவு நீங்கி விழிப்பு நிலையில் வந்து. "தொழுதெழுவாள்" (குறள்). வேலை விடமுண்டவர்தங் கருணை போற்றி - அமரர் வேண்ட நஞ்சமுண்ட கருணையாளர். இங்கு அதனின் மேலாய் வேண்டாமலே வந்து பணி கொண்டமையால் அக்கருணைப் பெருக்கினைப் போற்றினார் என்க. மெய்யுருகுதல் - இறைவர் தமது கருணை மிகுதியால் வலியவந்து ஆட்கொள்ளும் திறத்தினை எண்ணியெண்ணி மனமுருக அதனால் மெய்யும் உருகுதல். விளம்பலுற்றார் - விளம்பலுற்றாராகி; முற்றெச்சம். விளம்பலுற்றாராகிப் - பாடினார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. நடுவிடை யாமத்தினிடை - என்பதும் பாடம். |
|
|