"துஞ்சவரு வர்"ரென்றே யெடுத்த வோசைச் சுருதிமுறை வழுவாமற் றொடுத்த பாடல் எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரா ரியம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி "யஞ்சனமா கரியுரித்தா ரருளா" மென்றே யருளும்வகை திருக்டைக்காப் பமையச் சாத்திப் பஞ்சுரமாம் பழையதிறங் கிழமை கொள்ளப் பாடினார் பாரெல்லா முய்ய வந்தார். | 1010 | (இ-ள்) "துஞ்ச வருவார்...பாடல் - "துஞ்ச வருவாரும்" என்றே தொடங்கிய, ஓசையுடைய வேதத்தின் முறை தவறாதபடி பாடிய பாடலில்; எஞ்சலிலா வகை....ஏத்தி - குறைவில்லாத வகையினாலே நீதிமுறையின் வழி பழையனூர் வேளாளர்கள் தாங்கள் சொல்லிய சொல்லைத் தவறாது காத்து அருள்பெற்ற சரிதத்தைச் சிறப்பாகப் பாராட்டிப் போற்றி; அஞ்சனமா கரி உரித்தார்...அமையச் சாத்தி - "கரிய யானையை உரித்த இறைவரது திருவருளேயாகும் இது" என்று அவர் அருள்புரியும் தன்மையைத் திருக்கடைக்காப்பில் பொருந்தவைத்து; பஞ்சுரமாம்...வந்தார் - குறிஞ்சியாழ்ப் பண்ணமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடியருளினார் உலகமெல்லாம் உய்யும்பொருட்டு அவதரித்த பிள்ளையார். (வி-ரை) "துஞ்ச வருவா" ரென்றே எடுத்த - ."துஞ்ச வருவாரும்" என்றே தொடங்கிய. அது பதிகத் தொடக்கம். என்றே - ஏகாரம். துயிலுணர்ந்த பிள்ளையார் அதனையே கொண்டு "துஞ்ச வருவார்" எனத் தொடங்கிய நிலை குறித்தது; எடுத்த - தொடங்கிய. ஓசைச் சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல் - ஓசையையே கொண்டு கேள்வியால் வழிவழி வரும் வேதம்போல அம்முறையில் இப்பதிகமும் நடுயாமத்தில் முதலில் இறைவர் கேட்க அருளுதலும், பின்னர் அணைந்த திருத்தொண்டர் கேட்க மீண்டும் அகமலரப் பாடி அவர்களைக் கேட்பித்து அவ்வழி வழி வருதலும் கருதுக; சுருதி முறை - தெய்வத் திருமுறையாகிய தமிழ் வேதமாக என்றலும் குறிப்பு. எஞ்சலிலா வகைமுறையே...மொழிகாத்த கதை - இக்கதை முன் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் "நற்றிறம் புரி"(1080) என்ற பாடலின் குறிக்கப்பட்டதும், சரிதச் சுருக்கம் ஆண்டு உரைக்கப்ட்டதும் (II - 1403 - 1404) காண்க. எஞ்சலில்லா வகை - ஒருவரும் எஞ்சாது; குறையாது; ஒருவரொழியாமே எழுபது பேரும் என்க; குறைவு நேராதவண்ணம். முறை - நீதிமுறை. பழயனூரார் - பழயனூர் வேளாளர்; நீதிமன்றத்திருந்து வணகனுயிர்க்குத் தீங்கு வராது என்று உறுதிகூறித், தீங்கு வரின் எங்கள் எல்லாருடைய உயிரும் அதற்கீடாக உள்ளது என்று தேற்றியவர்கள்; பழயனூரார் - இவ்வாறு ஊரார் - நாட்டாண்மையார் - முதலிய தன்மைகளால் - போரூரார் - மணவூரார் - மாங்காட்டார் - என்பனபோன்ற வழக்குக்கள் தொண்டை மண்டலம் 24 கோட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ளது அந்நாட்டின் சிறப்பு. ஆசிரியரும் அந்நாட்டினராதல் காண்க. இயல்பு மொழி காத்த - தாம் வாக்கினாற் சொல்லிய உறுதிமொழியை நிறைவேற்றக் கேட்பதற்கு அவ்வணிக னிறந்துபடினும், சொல் தவறாமல் மெய்ம்மையைப் பாதுகாத்த. சிறப்பித்து ஏத்தி - இக்கதை நிகழ்ச்சி வெறும் உலகியல் நீதியாயொழியாது அவர்களுக்கு இறைவரது "திருஅடியின கீழ் மெய்ப்பேறு பெற" அருளியமையால் அது பிள்ளையாரது மெய்த்திருவாக்கில் சிறப்பித்து ஏத்தத் தக்கதாயிற்று என்பது; "அஞ்சும் பழயனூர் ஆலங்காட்டெம் அடிகளே" என்று இறைவரது சார்புபற்றி எண்ணத்தக்கதாயினமை காண்க. பஞ்சுரமாம் பழைய சிறங் கிழமைகொள்ள - பஞ்சுரம் - குறிஞ்சி யாழ்த்திறன் வகைகளுள் ஒன்று. திறம் - கிழமை என்பன இசைப் பாகுபாடுகள்; முன் (221 - பாட்டின் கீழ் - I பக்கம் - 250 - 251) உரைத்தவை பார்க்க. திறம் - யாழ்வகையும் யாழ்த்திறன் வகையும் என்ற இசைநூல் வகுப்புக் காண்க. குறிஞ்சி யாழ் - குறிஞ்சித் திணை (ஒழுக்கத்து)க்கு உரியது. இங்கு நடு யாமமாகிய அத் திணைக்குரிய முதற் பொருளும், இறைவர் கனவில் வெளிப்பட்டு அருளுதலாகிய கூடல் என்னும் குறிஞ்சியின் உரிப்பொருளும் பொருந்தக் காண்க. இப்பதிகம் நடுயாமத்தில் அருளப்பட்டதென்பதும் காண்க; பஞ்சுரம் - பழம் பஞ்சுரம்(பிங்கலம்); பழைய திறம் - குறிஞ்சி யாழிற் பயின்றுவரும் திறம் என்றது போலும். குறிப்பு :- ஈண்டு இப்பதிகத்துக்குத் தக்கராகம் பண்ணாக வகுத்துள்ளார்கள்; தக்கராகம் பாலையாழ்த் திறன்களுள் ஒன்று; பாலைக்கு நண்பகல் பொழுதாகிய முதற்பொருளாகலானும் பிரிவொழுக்கம் - உரிப்பொரு ளாகலானும் இப்பாகுபாடு ஆராச்சிக் குரியதாம்; ஆயின் கனவின் வந்து அருளிய இறைவர் துயிலுணர்தலும் மறைந்தனராதலின் பிரிவு ஒழுக்கமும், இடையாமமும, நண்பகல் போலவே பகலுமிரவும் கூடும் நடுவணதாகிய பொழுதாகலானும் இவைபற்றிப் பாலை யாழும் பொருந்தக்கூறல் அமைவுபடும் போலும்; அன்றியும், நிலம் என்ற முதற்பொருள் பற்றிக் காண் (திருவாலங்காடு) மேல்வரும் "வெற்புங் காணும் தொக்கபெரு வன்புலக் கானத்தின்" (2612) தொடர்புடையதாய் முல்லையுங் குறிஞ்சியுமடுத்த இடமாகிப் பாலைத் திணைக் குரித்தாகக் கூறலும் அமைவுபோலும். இவையும் ஈண்டுக் கருதத் தக்கன; பதிகத்துட் பாலைக்குரிய குறிப்புக்களும் பார்க்க (2 - 4 - 5) "கலந்து பலியிடுவே னெங்குங் காணேன், சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்" என்று கனவிழந்துரைத்தற் றுறையிற் பிரிவொழுக்க நிலை கருதப்படுமாறும் காண்க. இங்கு இவ்வாறன்றிப், பஞ்சுரமாம் பழையதிறம் - பல்லுயிர்ந் துயர் நீங்க்ப் பாடியருளிய பண்ணமைந்த திருப்பதிக விசையாலாய பழமை பொருந்திய பயனை; கிழமை கொள்ள - (சமண் பாட்டில் புத்தர் சமணர்கட்கு)முரிமை பொருந்தும்படி - என்றுரைத்து, "திரிவாரும், கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும்." என்னும் சமண்பாட்டால் அச்சமண் புத்தர்கட்குத் திருப்பதிக விசையைப் போக்குமென்பதும் போதருதலின், ஈண்டிந்நூலாசிரியர் அத்திருப்பதிகப் பொருளை விரித்துக் கூறியருளினர் என்று விளக்கமுங் காட்டினர் ஆறுமுகத் தம்பிரானார்; "பண்ணமைந்த திருப்பதிக விசையாலாகிய பழமை பொருந்திய பயனை உரிமையாகப் பொருந்த" என்பது சூ. சுப்பராய நாயகரவர்களது பொழிப்புரைல. இவற்றின் பொருந்தங்க ளாராயத் தக்கன. |
|
|